Published : 04 Apr 2018 11:31 AM
Last Updated : 04 Apr 2018 11:31 AM

டிங்குவிடம் கேளுங்கள்: பலூன்கள் உயரமாகப் பறப்பது எப்படி?

விளம்பரத்துக்குப் பயன்படுத்தப்படும் பலூன்கள் மட்டும் உயரமாகப் பறப்பது எப்படி, டிங்கு?

- வி. திவ்யதர்ஷினி, 4-ம் வகுப்பு, ஸ்ரீ செளடாம்பிகா நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர்.

விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்படும் பலூன்கள் ஹீலியம், ஹைட்ரஜன் வாயுக்களால் நிரப்பப்பட்டிருக்கும். காற்றைவிட இந்த இரு வாயுக்களும் எடை குறைந்தவை. அதனால் சாதாரண பலூன்களைவிட உயரத்தில் பறக்கின்றன, திவ்யதர்ஷினி.

 

மனிதர்களுக்குப் பின் தலையில் ஒரு கண் இருந்தால் எப்படி இருக்கும், டிங்கு?

– கு. லிபிவர்ஷ்னி, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பள்ளி, சமயபுரம்.

அட, இப்படி எல்லாம் இதுவரை யோசித்ததே இல்லை! பின்பக்கம் ஒரு கண் இருந்தால் நமக்குப் பின்னால் நடப்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஏதாவது ஆபத்து வந்தால், விலகிச் செல்லலாம். பின்னால் யாரும் புறம் பேச முடியாது. முன்பக்கக் கண்களால் படித்தாலும் பின்பக்க கண்ணால் தொலைக்காட்சிப் பார்க்கலாம். இப்படிப் பல சுவாரசியமான விஷயங்கள் இருக்கின்றன.

தேர்வு எழுதும்போது பின்னால் எழுதுபவர்களின் தேர்வுத் தாளைப் பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது. பின்னால் உள்ள கண்ணுக்கும் சேர்த்துக் கண்ணாடி போட வேண்டும் என்றால் கடினம். இதுபோன்ற சங்கடமான விஷயங்களும் இருக்கின்றன, லிபிவர்ஷ்னி. ‘பின்பக்கம் ஒரு கண்’ என்ற தலைப்பில் ஒரு கதை வேண்டுமானால் ஜாலியாக எழுதலாம்.

Tinku -2ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் எழுதிய கதைகள் உனக்குப் பிடிக்குமா, டிங்கு?

–ஆர். நரேன்குமார், 5-ம் வகுப்பு, நாமக்கல்.

ஆண்டர்சன் கதைகளைப் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா, நரேன்குமார்? உங்களைப் போன்று குழந்தையாக இருந்தபோது மிகவும் பிடித்த கதைகள் இவருடையதுதான். ‘அரசரின் புதிய ஆடை’, ‘கடல்கன்னி’ போன்ற சில கதைகள் பள்ளிப் பாடத்திலேயே இருந்தன.

எனக்கு இன்றுவரை மிகவும் பிடித்த கதை என்றால் ‘அழகற்ற வாத்துக் குஞ்சு’தான். டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சனின் தேவதைக் கதைகள் 120 உலக மொழிகளில் வெளிவந்து, பல கோடிக்கணக்கான குழந்தைகளை மகிழ்வித்துவருகின்றன!

ஒரு பாம்பின் வாயில் முள் குத்தி, வலியில் துடித்ததாம். முள்ளை எடுத்தால், எங்கள் பரம்பரையைச் சேர்ந்த யாரையும் கடிக்கக் கூடாது என்று எங்கள் முன்னோர்கள் கேட்டுக்கொண்டார்களாம். பாம்பும் சம்மதித்து, 3 முறை தரையில் அடித்துச் சத்தியம் செய்ததாம். அதனால் எங்கள் பரம்பரையைச் சேர்ந்த யாரையும் பாம்புகள் கடிப்பதில்லை என்றார் என் பாட்டி. இது உண்மையா, டிங்கு?

– சி. வனிதா மணி, காரைக்குடி.

என்ன, உங்கள் பாட்டியும் சொன்னாரா! என் பாட்டியும் நான் பாம்பு குறித்துப் பயந்தபோது, இதே கதையைச் சொல்லியிருக்கிறார். நன்றியுள்ள பாம்புகள் நம் பரம்பரையைக் கடிக்காது என்று நானும் பெரிதாக வளர்கிறவரை நம்பிக்கொண்டிருந்தேன். பிறகு ஒருநாள் யோசித்தேன். பாம்பு இரையை முழுதாகத்தான் விழுங்கும்.

அப்புறம் எப்படி வாயில் முள் குத்தும்? அப்படியே முள் குத்தினாலும் அது எப்படி மனிதர்களிடம் தன் வலியைச் சொல்லியிருக்கும்? அப்படிச் சொன்னதை மனிதர்கள் எப்படிப் புரிந்துகொண்டிருப்பார்கள்? சத்தியம் பற்றி அதுக்குத் தெரியுமா? கடிக்க மாட்டேன் என்று 3 முறை தரையில் அடித்து எப்படிச் சத்தியம் செய்திருக்கும்?

shutterstock_305357492right

எங்கள் பரம்பரை குறித்த தகவல்களைத் தன் சந்ததிகளுக்குக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்குமா அந்தப் பாம்பு? ஒருவரைப் பார்த்தவுடன் இவர் நம் முன்னோருக்கு உதவி செய்த பரம்பரை என்று கண்டுபிடித்து எப்படி விலகிச் செல்லும்? இப்படி ஏராளமான கேள்விகளை எனக்கு நானே கேட்டு, படித்து, இது கட்டுக்கதை என்ற முடிவுக்குவந்தேன், வனிதா மணி. மனிதர்கள் பாம்புகளின் இரையோ எதிரியோ அல்ல. அதனால் கடிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

எந்தப் பரம்பரையைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாம்பைக் கண்டு ஒதுங்கிச் சென்றால், அதுவும் நம்மைக் கண்டுகொள்ளாது. அதைத் துன்புறுத்தும் நோக்கில் ஏதாவது செய்யும்போதுதான், தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காகக் கடிக்கிறது. நம் பாட்டிகள் சொன்ன கற்பனைக் கதைகள் வளர்ந்த பிறகு அபத்தமாகத் தோன்றினாலும் சின்ன வயதில் பயத்தைப் போக்கியது உண்மைதான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x