Last Updated : 10 Feb, 2018 11:49 AM

 

Published : 10 Feb 2018 11:49 AM
Last Updated : 10 Feb 2018 11:49 AM

நலம் நலமறிய ஆவல் 21: கால் ஆணிக்கு ஆபரேஷன் தேவையா?

எனக்கு வலது பாதத்தில் பல மாதங்களாகக் கால் ஆணி உள்ளது. அவ்வப்போது பிளேடால் சீவிவிடுவேன். என்றாலும் முழுவதுமாகச் சரியாகவில்லை. இப்போது அதைத் தொட்டாலே வலிக்கிறது. நடக்கும்போது வலி கடுமையாகிறது. எனக்கு உடற்பருமனும் உள்ளது; சர்க்கரை நோயும் உள்ளது. எனவே, ஆபரேஷன் செய்துகொள்ளப் பயப்படுகிறேன். இதற்கு வேறு என்ன சிகிச்சைகள் உள்ளன?

ராகவி, சென்னை.

பாதத்தில் உள்ள சருமத்தில் கால் ஆணி, காய்ப்பு, மரு ஆகிய மூன்று பிரச்சினைகள் வேதனைப்படுத்துவது உண்டு. இந்த மூன்றுக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். காரணம், பெரும்பாலோர் இந்த மூன்றையுமே கால் ஆணி எனத் தவறாகப் புரிந்துகொண்டு, அவர்களுக்குத் தெரிந்த சுயசிகிச்சைகளை மேற்கொண்டு, பிரச்னையைப் பெரிதாக்கிக்கொள்கின்றனர்.

கால் ஆணி என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். பாதத்தில் முள், கல், கம்பி போன்ற கூர்மையான பொருள் ஏதாவது குத்துவதால், அங்கே சிறிய துவாரம் விழுந்துவிடலாம். அதைத் தொடர்ந்து அந்தத் துவாரத்தைச் சுற்றியுள்ள தோல் உள்நோக்கி வளரத்தொடங்கலாம். இதில் உராய்வு அதிகமாகி அல்லது பொருத்தமில்லாத காலணியின் அழுத்தம் அதிகமாகி அந்த இடம் தடித்துவிடலாம். இதுதான் கால் ஆணி (Corn). இதில் மென்மையானது (Soft corn), கடினமானது (Hard corn), விதைபோன்றது (Seed corn) எனப் பல வகை உண்டு.

கால் ஆணியை லேசாக அழுத்தினாலும் ஊசி குத்துவதுபோல் ‘சுரீர்' என்று வலிக்கும். நடுப்பாதத்தில் கூர்மையான பொருள்கள் குத்த வாய்ப்பு குறைவு என்பதால், இது பெரும்பாலும் குதிகாலிலும் முன்பாதத்திலும்தான் ஏற்படும். தொடர்ந்து இதில் அழுத்தம் ஏற்படுமானால் வலி அதிகரித்து நடப்பது சிரமம் ஆகிவிடும். கிருமித்தொற்று ஏற்பட்டுவிட்டாலும், வலி கடுமையாகிவிடும்.

மிகவும் ஆரம்பநிலையில் உள்ள கால் ஆணியை ‘கார்ன் கேப்’ எனும் ஸ்டிக்கர் ஒட்டி சரியாக்கலாம். ஆனால், தீவிரமாகிவிட்ட கால் ஆணியை அந்த வழியில் அகற்ற முடியாது. மின் வெப்ப சிகிச்சை (Electric cautery) அல்லது அறுவைசிகிச்சைதான் நிரந்தரத் தீர்வு தரும்.

எது காய்ப்பு?

அடுத்தது, காய்ப்பு (Callosity). தோலின் அதீத வளர்ச்சியால் இது வருகிறது. அதிக உராய்வு அல்லது அழுத்தம் காரணமாக பாதங்களில் தோல் தடித்துவிடும். அப்போது உடல் பளு அதில் அழுத்துவதால், தடித்த தோல் கடினமாகி, சிறு கட்டிபோல் திரண்டுவிடும். இதுதான் காய்ப்பு.

பொதுவாக உடல்பருமன் உள்ளவர்கள், சிறிய பாதம் உள்ளவர்கள், பாத எலும்புகளில் பிரச்சினை உள்ளவர்கள், பாத எலும்பு வளைவில் பிரச்சினை உள்ளவர்கள் ஆகியோருக்கு இது ஏற்படுவது வழக்கம். ஏற்கெனவே பாத எலும்பு முறிவடைந்து, அது சரியாக இணையவில்லை என்றாலும் இந்தப் பிரச்சினை ஏற்படுவது உண்டு.

இது ஒல்லியான உடல்வாகு உள்ளவர்களுக்கும் வரலாம். ஏனெனில், இது முக்கியமாக நம் உடலின் எடை சீரான முறையில் நம் பாதங்களில் இறங்காத காரணத்தால் ஏற்படுகிற பிரச்சினை. பாதத்துக்குப் பொருத்தமில்லாத காலணிகளை அணிவதும் ஹைஹீல்ஸ் காலணிகளை அணிவதும் பிளாஸ்டிக் போன்ற கடினமான காலணிகளை அணிவதும் காய்ப்புக்குக் காரணமாகலாம். காலுறை அணியாமல் ஷூக்களை அணிவதும் இதற்கு ஒரு காரணம்தான்.

காய்ப்பு ஏற்பட்ட பாதத்தை எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்து, பிரச்சினையைத் தீர ஆராய்ந்து, அறுவைசிகிச்சை செய்துகொண்டால் மறுபடியும் இந்தத் தொல்லை வராது. மேற்போக்காக அறுவைசிகிச்சை செய்தால் மறுபடியும் வந்துவிடும். மேலும், அறுவைசிகிச்சை மேற்கொண்ட பின்னர், காய்ப்பு ஏற்பட்ட இடத்தில் உடலின் எடை விழுவதைத் தவிர்க்கும் வகையில், பாதத்துக்குப் பொருத்தமான காலணிகளைப் பிரத்யேகமாகச் செய்து அணிந்துகொள்ள வேண்டியது முக்கியம்.

மரு எது?

மரு (Wart) என்பது ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் பாதிப்பால் வருகிறது. இவை பெரும்பாலும் கை விரல்களில்தான் அதிகம் வரும். என்றாலும் சிலருக்குப் பாதங்களிலும் வருகிறது. பார்ப்பதற்கு மாநிறத்தில் சிறிய புடைப்பாக இருக்கும். அதன் மத்தியில் கறுப்புப் புள்ளி தெரியும். உடலில் மற்ற இடங்களில் தோன்றும் மருவானது உலர்ந்த காலிஃபிளவர்போல் தெரியும். பாதத்தில் தோன்றும் மருவோ நாம் நடக்க நடக்கத் தேய்வதால், கிருமித் தொற்று ஏற்பட்டுப் புண்ணாகிவிடும்.

மருவை நேரடியாக அழுத்தினால் வலிக்கும். பக்கவாட்டில் அழுத்தினால் வலி மிகவும் கடுமையாக இருக்கும். இது பொதுவாக இளம் வயதினரைத்தான் தாக்கும். முக்கியமாக பெண்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகம்.

மரு சிறிய அளவில் இருந்தால், சாலிசிலிக் அமிலத்தைத் தொடர்ந்து தடவிவந்தால், காலப்போக்கில் அது கருகிவிடும். மரு பெரிதாக இருந்தால் கிரியோதெரபியில் சரியாக்கிவிடலாம். இந்த சிகிச்சைகளால் சரிப்படுத்த முடியாது என்று மருத்துவர் நினைத்தால், சிறிய அறுவைசிகிச்சை அல்லது லேசர் சிகிச்சையில் குணப்படுத்திவிடுவார்.

உங்களைப் பொறுத்தவரை நீரிழிவு நோய் உள்ளதால், சரியான நோய்க் கணிப்பு முக்கியம். முதலில் உங்களுக்கு உள்ள பிரச்சினை கால் ஆணிதானா அல்லது வேறு பிரச்சினையா என்பதை மருத்துவரின் நேரடி ஆலோசனையில் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதற்குமுன் உங்கள் ரத்த சர்க்கரையை சீர்படுத்திக்கொள்ள வேண்டும். பிரச்சினை மீண்டும் ஏற்படாமலிருக்க உங்கள் உடல் எடையை சரியாகப் பேண வேண்டும். பொருத்தமான காலணிகளை அணிய வேண்டும்.

உங்களைப் போன்றவர்கள் முதலுதவி என்ற பெயரில் சுயசிகிச்சை மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. தவறான சுயசிகிச்சைகளால் சாதாரண பிரச்சினைகூட பூதாகரமாகி, பாதத்துக்கு வேட்டுவைத்துவிடுகிற ஆபத்து உண்டு.

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x