Last Updated : 27 Feb, 2018 10:50 AM

 

Published : 27 Feb 2018 10:50 AM
Last Updated : 27 Feb 2018 10:50 AM

தேர்வுக்குத் தயாரா? பிளஸ் டூ –வேதியியல்: சதம் அடிக்க உதவும் 1 மதிப்பெண்!

வே

தியியலில் உள்ள 22 பாடங்களில் இருந்து மொத்தம் 233 மதிப்பெண்களுக்கான வினாக்களில், 150 மதிப்பெண்களுக்கு விடையளிப்பதாக வேதியியல் வினாத்தாள் அமைந்திருக்கும். கரிம வேதியியல் பகுதியை மாணவர்கள் சற்றுக் கடினமாகக் கருதுவதால் திருப்புதலில் அப்பகுதிக்குக் கூடுதல் கவனம் அளிப்பது நல்லது.

முதலில் மதிப்பெண் வாரியாகக் கவனக் குறிப்புகளைப் பார்த்துவிடுவோம்:

1 மதிப்பெண்: உள் வினாக்கள் உஷார்

இப்பகுதியில் 18 முதல் 20 வரையிலான பாடங்களின் வினாக்கள் பாடநூலின் தன்மதிப்பீடு பகுதியிலிருந்து கேட்கப்படுகின்றன. 14, 15, 22 ஆகிய 3 பாடங்களில் இருந்து 1 மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படுவதில்லை. 12, 20 ஆகியவற்றில் இருந்து தலா 3 வினாக்கள் கேட்கப்படுகின்றன. இவ்வாறான ஒரே பாடத்திலிருந்து இடம்பெறும் கூடுதல் எண்ணிக்கையிலான வினாக்கள் பெரும்பாலும் பாடத்தின் உள்ளிருந்தே கேட்கப்படும். மற்றபடி 2 அல்லது 3 வினாக்கள் கடினமாகவும், 4 வினாக்கள் கணக்குகளாகவும் அமைகின்றன. கணித வினாக்கள் 1, 7, 9 பாடங்களில் பரவலாகவும், 10, 20 பாடங்களில் அடிக்கடியும் கேட்கப்படுகின்றன.

3 மதிப்பெண்: கரிம வேதியியலில் கவனம்

5, 6, 14, 17, 21 தவிர்த்த ஏனைய 17 பாடங்களில் இருந்து 21 வினாக்கள் கேட்கப்படுகின்றன. இவற்றில் 3, 4, 11, 16 ஆகியவற்றிலிருந்து தலா 2 வினாக்கள் கேட்கப்படும். கனிம வேதியியலில் நேரடி வினாக்கள் கேட்கப்படுவதால் அவற்றுக்குப் பதில் அளிப்பது எளிது.

கரிம வேதியியலில் பெயர் வினைகள், விளைபொருள் சார்ந்த வினைகள், வினை வழிமுறைகள், உறுதிச் சோதனைகள், வேறுபாடுகள் ஆகியவற்றைக் கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். கணித வினாக்கள் 7, 9, 10, 20 ஆகிய பாடங்களில் இருந்தே கேட்கப்படுவதையும், இவற்றிலும் முதல் 3 பாட வினாக்கள் புத்தக வினாக்களாகவே இடம்பெறுவதையும் கவனத்தில் கொண்டு திருப்புதல் மேற்கொள்ள வேண்டும்.

இப்பகுதியில் சாய்ஸ் வினாக்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. விதிகள், கூற்றுகள், வரையறைகள் ஆகியவற்றை எழுதுகையில் புத்தகத்தின் கருத்துருக்கள் மாறாது அப்படியே எழுத வேண்டும். இந்த பதில்களில் எடுத்துக்காட்டுகள், சமன்பாடுகள், கணிதவியல் கோட்பாடுகள் இருந்தால் அவற்றையும் எழுதினால் மட்டுமே முழு மதிப்பெண் கிடைக்கும். சமன்பாடுகளைக் குறிப்பிடும்போது, அவற்றை உரிய முறையில் சமன் செய்வதுடன் அதிலுள்ள முக்கிய மூலக்கூறுகள் அல்லது சேர்மங்களின் பெயர்களை எழுதுவதும் அவசியம்.

5 மதிப்பெண்: எளிய பகுதிகளும் உண்டு

இப்பகுதியின் 3 உட்பிரிவுகள் ஒவ்வொன்றிலும் தலா 3 பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படுவதைச் சரியாக அடையாளம் கண்டு படிக்க வேண்டும். இதிலும் பிரிவு ‘ஆ’-க்கான 9, 10, 14 ஆகிய பாடங்களில் குறைவான வினாக்களே இருப்பதால் அவற்றைச் சராசரி மாணவரும் படிப்பது எளிது. இதேபோன்று பிரிவு ‘இ’ வினாக்கள் இடம்பெறும் பாடங்களான 17, 22 ஆகியவையும் படிப்பதற்கு எளிமையானவை.

10 மதிப்பெண்: வினா வங்கி உதவும்

இப்பகுதியில் ஒரே வினா எண்ணில் இரண்டு வினாக்கள் கேட்கப்படுவதால், முழுமையாக விடை தெரிந்த 2 வினாக்கள் அடங்கியவற்றைத் தேர்வுசெய்வதில் போதிய பயிற்சி அவசியம். 3, 4, 6, 7 பாடங்களில் இருந்து இடம்பெறும் கனிம வேதியியல் வினாக்கள், 8, 12, 13, 14 பாடங்களின் இயற்பியல் வேதியியல் வினாக்கள் ஆகியவற்றுக்குப் பெரும்பாலும் முந்தைய வருட வினாத்தாள்களில் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகளைப் படிப்பதன் மூலமாகவே பதிலளித்துவிடலாம்.

பொதுவான தவறுகள்

ஒரே மாதிரியான பெயர்கள் இடம்பெறும் வினாக்களைக் கூடுதலாக ஓரிரு முறைகள் வாசித்து, உரிய விடையை எழுத வேண்டும். உதாரணமாக ‘பாலிங் முறைப்படி அயனி ஆரம் கணக்கிடல்’, ‘பாலிங் முறைப்படி எலெக்ட்ரான் கவர்தன்மை கணக்கிடல்’ போன்ற வினாக்களைத் திருப்புதலின்போது தனியாகக் குறித்து வைத்துக்கொண்டு குழப்பம் நேராது புரிந்து படிப்பது தேர்வில் தவறுகளைத் தவிர்க்கும்.

சமன்பாடு, வருவித்தல் வினாக்களில் அடுத்தடுத்த இரண்டு சமன்பாடுகளுக்கு இடையிலான விளக்க வார்த்தைகளைப் பெரும்பாலானவர்கள் எழுதுவதில்லை. முழு மதிப்பெண்கள் பெற அவற்றையும் குறிப்பிட வேண்டும். சமன்பாடுகளை எழுதும்போது அம்புக்குறியின் மேல் குறிப்பிட்டாக வேண்டிய வெப்பநிலை, அழுத்தம், வினை காரணிகளை மறக்காது எழுதுவது அவசியம்.

கணித வினாக்களுக்குப் பதில் அளிக்கும்போது சூத்திரங்கள், அலகுகளையும் குறிப்பிடுவது முக்கியம். ‘கட்டாயக் கணக்கு’ பகுதியில் விடை காணுவதுடன் உரிய சமன்பாடுகளைச் சமன் செய்து காண்பிப்பதும் அவசியம்.

நூற்றுக்கு நூறு

வேதியியல் பாடத்தைப் பொறுத்தவரை எவ்வளவு படித்தாலும் நேர மேலாண்மையைப் பின்பற்றாவிடில் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பாகிறது. 1 மதிப்பெண் பகுதிக்கு 30 நிமிடங்கள், 3 மதிப்பெண் பகுதிக்கு 50 நிமிடங்கள், 5 மதிப்பெண் பகுதிக்கு 40 நிமிடங்கள், 10 மதிப்பெண் பகுதிக்கு 50 நிமிடங்கள் என 170 நிமிடங்களை ஒதுக்கி மிச்ச 10 நிமிடங்களில் திருப்புதல், சரி பார்த்தலைச் செய்யலாம்.

வினாத்தாள் வாசிப்பதற்கான நேரத்தில் குறைவான நேரம், வரிகளில் அதிக மதிப்பெண்களைத் தரும் வினாக்களைத் தேர்வுசெய்து எழுதப் பழக வேண்டும். சமன்பாடு மற்றும் வருவித்தல் வினாக்கள் இந்த வகையில் முன்னுரிமை பெறுகின்றன. சதம் தவறுவது பெரும்பாலும் ஒரு மதிப்பெண் பகுதியிலேயே நடக்கிறது.

எனவே, இப்பகுதியில் விடையளித்த பிறகும், நிறைவாகவும் ஓரிரு முறை அவற்றைச் சரிபார்ப்பது அவசியம். உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்கள், ஒன்றுக்கு மேற்பட்ட வினாக்கள் இடம்பெறும் பாடங்களை அடையாளமிட்டு, அவற்றை முழுமையாகப் படிக்க வேண்டும். உதாரணத்துக்கு 12, 20 போன்ற பாடங்களில் தலா 3 ஒரு மதிப்பெண் வினாக்கள் இடம்பெறுகின்றன. 3 மதிப்பெண் பகுதியில் கணக்குகளாகக் கேட்கப்படும் வினா எண்கள் 37, 38, 50 ஆகியவற்றில் கவனம் அவசியம்.

தேர்வறைக்கான குறிப்புகள்

விடைகளை 1 மதிப்பெண் பகுதியில் தொடங்கி அடுத்தடுத்த பகுதிகளில் என வரிசையாக எழுதுவதும், விடையளிப்பதற்கு முன்னர் வினாவின் சுருக்கத்தைச் சிறு தலைப்பாகக் குறிப்பிடுவதும் விடைத்தாள் திருத்துவதைச் சுலபமாக்கும். விடைகளின் முக்கியப் பகுதிகள், பிரயோகங்களை பென்சிலால் அடிக்கோடிடுவது, சமன்பாடுகளைக் கறுப்பு மையால் தனித்துக் காட்டுவது ஆகியவை இவற்றில் அடங்கும். விடைத்தாளைச் சரி பார்க்கும் நேரத்தில் அனைத்து வினாக்களுக்கும் சரியான வினா எண்கள் எழுதப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

தேர்ச்சி எளிது

5, 7, 9, 10, 15, 22 ஆகிய பாடங்களை மட்டும் முழுமையாகப் படிப்பதுடன், ஏனைய பாடங்களின் ஒரு மதிப்பெண் பகுதிகளையும் படித்தாலே குறைந்தது 70 மதிப்பெண் எடுக்கலாம். இவற்றுடன் அதிக வினாக்கள் இருக்கும் 8-வது பாடத்தையும் படித்தால் மதிப்பெண்கள் மேலும் கூடும்.

திருப்புதல்

கடைசி நேரத்தில் வினா வங்கிகளை மட்டுமே வைத்துக்கொண்டு வினா வாரியாக அதிலிருந்து மட்டுமே திருப்புதல் மேற்கொள்ளலாம். சிரமமான பகுதிகளை மட்டும் தனியாக நேரம் ஒதுக்கிப் படிக்கலாம். சமன்பாடுகளைப் படிக்கும்போதே அவற்றை எழுதிப் பார்ப்பதும், தீர்த்துப் பழகுவதும் அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x