Published : 18 Feb 2018 10:50 AM
Last Updated : 18 Feb 2018 10:50 AM

விவாதக் களம்: மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவோம்!

மாதவிடாய் குறித்தும் அந்த நாட்களின் சுகாதாரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்பட என்ன செய்ய வேண்டும் என பிப்ரவரி 11 அன்று வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் கேட்டிருந்தோம். மாதவிடாய் குறித்துப் பேசுவதில் ஆண், பெண் இருவருக்கும் இருக்கும் மனத்தடையை முதலில் களைய வேண்டும் என்பதே பலரது கருத்தாக இருந்தது. வந்து குவிந்த கடிதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உங்கள் பார்வைக்கு…

மாதவிடாய் காலத்திலும் தனக்குத் பணிவிடை செய்வதே பெண்ணின் கடமை என ஆண் இனம் வகுத்துள்ளது. பெண்ணை மதிக்கவும் மாதவிடாய் காலத்தில் அவளது வேதனையைப் புரிந்துகொண்டு உதவவும் தாய் தன் மகனைத் தயார்செய்ய வேண்டும். ஒவ்வொரு மனிதனும் பெண்ணின் மூலமாகவே பிறக்கிறான். பின் எங்கிருந்து வருகிறது பெண்ணை கேவலப்படுத்தும் குணம்? ஒவ்வொரு ஆணும் அவன் தாயிடமிருந்தே மாதவிடாய் கால இன்னல்களைப் புரிந்துகொள்ள வேண்டும். மாதவிடாய் என்பது பேசக் கூடாத விஷயம் இல்லை என்பதை இந்தச் சமூகம் உணர வேண்டும்.

வசந்தி, மதுரை.

 

பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதும் கடைகளில் சானிட்டரி நாப்கின் வாங்குவதும் தவறு என்ற எண்ணம் வரக் காரணம் ஆண்களின் பார்வைக் கோணம்தான். அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கும் தருணங்களில் ஆதரவாகச் சாய தோள் தராத கணவன், இதர காலங்களில் அன்பை அடைமழையாகப் பொழிந்தாலும் அந்த அன்பு அவளுக்கு உப்பில்லாத உணவுக்குச் சமம் என்ற உண்மையைப் பெரும்பாலான ஆண்கள் உணர்வதில்லை. இந்நிலையில் ஆண்கள் சானிட்டரி நாப்கின்களோடு நிற்கும் ஒளிப்படங்கள் மட்டுமே இவர்கள் மனதை மாற்றிவிடாது. மனரீதியான விழிப்புணர்வு இன்னும் தேவை.

சுமதி பிரபு, தேனி.

 

மாதவிடாய் என்பதை இயல்பாக உள்வாங்கிக்கொள்ளும் நிலை வளர வேண்டும். மேலும், அந்த நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை ஆண்கள் புரிந்துகொள்ளும் விழிப்புணர்வும் பெருக வேண்டும். காய்ச்சல், தலைவலி போன்று மாதவிடாய் நாட்களும் பெண்களுக்கு அசௌகர்யம் தரக் கூடியவை என்பதை ஆண்கள் தெரிந்துகொள்வதே சரியாக இருக்கும். அந்த நாட்களில் பெண்களுக்குச் சிரமமான பணிகளைத் தரக் கூடாது என்பதையும் உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். அந்த நாட்களில் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை மனதில்கொண்டு வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் பெண்களுக்கு மலிவு விலையில் தரமான நாப்கின்கள் கிடைப்பதை அரசும் உறுதிசெய்ய வேண்டும்.

இரா. பொன்னரசி, வேலூர்.

 

ஒரு பெண் தாய்மையடையும் தகுதியில் இருக்கிறாள் என்பதற்கான இயற்கையின் சான்று மாதவிடாய். சமூக நீதி, சமத்துவம், உரிமை, உடல் நலம் எனப் பெண் தொடர்பான எதையும் புறக்கணித்தே பழக்கப்பட்ட ஆணாதிக்கச் சமூகம் மாதவிடாயையும் அந்த நேரத்துத் தேவைகளையும் புறக்கணித்துவருகிறது. இந்த உடல் இயங்கியலை (Physiology) பாலியலோடு தொடர்புபடுத்தியதே தவறு. தன் தாயின், சகோதரியின் உடலில் என்ன நடக்கிறது என்று ஒரு ஆண் தெரிந்துகொள்ளக் கூடாது என்பது எந்த வகையில் நியாயம்?

11 வயது முதல் பெண்கள் அனைவருக்கும் தெரிகிற இந்த விஷயத்தை அதே வயதில் இருக்கிற ஆண்களும் தெரிந்துகொள்வதுதானே நியாயம்? ஒவ்வொரு அங்கன்வாடியிலும் அந்தப் பகுதி பெண்கள் மாதத்தில் ஒருநாள் குழுவாகப் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மத்திய அரசின் மகளிர் மேம்பாட்டுத்துறையும் சமூகநலத் துறையும் இணைந்து இதற்கான பணியைத் தொடங்க வேண்டும். சானிடரி நாப்கின் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.

ஜி. அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

shutterstock_590540978right

இன்னும் வெளிப்படையாக கடையில் நாப்கின் வாங்கவே முடிவதில்லை என்பதுதான் உண்மை. நியூஸ் பேப்பரில் சுற்றியோ அல்லது கறுப்பு பாலித்தீன் கவரில் போட்டோதான் தருகிறார்கள். மாதாந்திர தேவைக்கான ஒரு பொருளை வாங்குவது போல் அதைச் சுலபமாக வாங்க முடியாது. பெண்கள் வேலை, படிப்பு, சேவை என்று பொதுவெளியில் நாள்தோறும் அலைய வேண்டியுள்ளது.

இந்நிலையில் எப்போது நாப்கின்களின் தேவை ஏற்படும் எனக் கணிக்க முடியாது. இதுபோன்ற நேரங்களில் ஒரு பெண்ணால் உடனடியாக இதை வெளிப்படையாக வாங்க முடிவதில்லை. நமட்டுச் சிரிப்பு சிரிக்கும் ஆண்களின் கேலிப் பார்வையை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. பெண்களே பெண்களை மாதவிடாய் சமயத்தில் தீண்டத்தகாதவர்களாகப் பார்க்கும் சமுதாயத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

எனவே, மாற்றத்தை முதலில் பெண்களிடமிருந்தே தொடங்க வேண்டும். ஆண் குழந்தைகளுக்குப் பெண்களின் கஷ்டத்தை எடுத்துச் சொல்லி வளர்க்க வேண்டும். தாய், சகோதரி, தோழி, மனைவி, மகள் என்று யாராக இருந்தாலும் மாதவிடாய் நாட்களில் அவர்களுக்கு உதவி செய்யவும் முடியாவிட்டால் குறைந்தபட்சம் கேலிப் பார்வை வீசாமலிருக்கவும் ஆண்களைப் பழக்க வேண்டும்.

மாதவிடாய் நாட்களில் பெண்கள் எதையும் தொடக் கூடாது என்று சொல்லி அவர்களை ஒதுக்கி வைக்கும் வழக்கத்தை இனியாவது நாம் ஒதுக்கி வைப்போம்.

தேஜஸ், காளப்பட்டி.

 

நான் கல்லுரியில் படித்த காலத்தில்தான் சானிட்டரி நாப்கின்கள் கடைகளுக்கு வரத் தொடங்கின. எங்கள் வகுப்பில் உள்ள மாணவியர் அனைவரும் பணம் போட்டு ஒரு பாக்கெட் சானிட்டரி நாப்கினை வாங்கி வகுப்பறையில் வைத்திருப்போம். திடீரென்று யாருக்காவது மாதவிடாய் வந்துவிட்டால் அதைப் பயன்படுத்திக்கொள்வோம். நீண்ட நேரம் ஒரே நாப்கினைப் பயன்படுத்தக் கூடாது என்பதைப் பெண்கள் உணர வேண்டும்.

நாப்கினில் மிகக் குறைந்த அளவே கறை உள்ளது என்று அதை மாற்றாமல் இருந்தால் அது தேவையற்ற உடல்நலக் குறைவில் முடியலாம். இதை எனக்கு என் அம்மாவும் கல்லூரியில் உள்ள ஆசிரியைகளும் சொல்லிக் கொடுத்தனர். இப்படி நாம் பல செய்திகளை தெரிந்து மாதவிடாய் காலங்களில் சுத்தமாக இருந்தால் இதுவும் மற்ற நாட்களைப் போல சாதாரண நாளே. மாதவிடாய் என்பது மறைக்க வேண்டிய விஷயமல்ல என்பதை முதலில் வீட்டில் உள்ள ஆண்களிடமிருந்து தொடங்க வேண்டும்.

உஷா முத்துராமன், திருநகர்.

 

என் சிறு வயதில் மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்று வலிக்கு என் பெற்றோர் எத்தனையோ மருத்துவர்களிடம் நிவாரணம் கேட்டனர். கேட்ட இடத்தில் எல்லாம் கல்யாணம் ஆனால் சரியாகும் அல்லது குழந்தை பிறந்தால் சரியாகும் என்றே சொன்னார்கள். அதைத்தான் நான் இன்று நிறைய இளம்பெண்களிடம் அறிவியல் ரீதியாகக் காரணம் சொல்லி விளக்கிவருகிறேன். கருப்பையின் குறுகிய வழி விரிவடைந்தால் மாதவிடாய் வலிகள் மறையும் என்பதே அதற்கான காரணம்.

ஆனால், மெனோபாஸ் காலத்தில் உள்ள நான், இறந்த என் தந்தையை நினைவுகொள்கிறேன். காரணம், மாதவிடாய் நாட்களில் நான் குளித்து வருவதற்குள் நான் ஓய்வெடுக்க வசதியாக மெத்தையைச் சரிசெய்து வைப்பார். இது போல் புரிதல் கொண்ட ஆண்கள் இங்கு எத்தனை பேர் என்பது தெரியவில்லை. பிரபலங்கள் கையில் நாப்கினைப் பிடித்தபடி போஸ் தருவது மட்டும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வைத் தராது.

தன் வீட்டுப் பெண்களின் மாதாந்திர அவஸ்தையை ஆண்கள் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவியாக இருக்கும்படி ஆண் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

சுபா, சேலம்.

 

மாதவிடாய் பற்றிப் பேசுவதற்குத் தயக்கமும் கூச்சமும் இருந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுவருகிறது. இயற்கை நிகழ்வான இதைப்பற்றி பொதுவெளியில் வெளிப்படையாக விவாதிக்கு அளவுக்கு நமது சமூகம் வளர்ந்துள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இவ்வளவு வளர்ச்சி பெற்றும்கூட பெண்களில் வெறும் 12 சதவீதத்தினர் மட்டுமே சானிட்டரி நாப்கினைப் பயன்படுத்திவருகின்றனர் என்பது அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது.

சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவோர் பற்றி முறையாகக் கணக்கெடுப்பது நடத்தினால்தான் நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் ஆரோக்கிய வாழ்வை உண்டாக்க முடியும். மாதவிடாய் நட்களில் சுகாதரமான சானிட்டரி நாப்கின்கள் பயண்படுத்துவது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்துவது அவசியம். ஆண், பெண் இருவருக்கும் பள்ளி பாடங்கள் வழியாக இது குறித்த விழிப்புணர்வு பாடங்களைக் கற்றுத்தர வேண்டும்.

பொன். கருணாநிதி, கோட்டூர்.

 

தற்போது சானிட்டரி நாப்கின் குறித்து ஓரளவாவது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதை இன்னும் பல கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மாதவிடாய் நாட்களில் சுகாதாரமாக இருந்தால் கருப்பை வாய் புற்றுநோய் போன்றவற்றை வராமல் தடுக்க முடியும். தற்போதுதான் மாதவிடாய் குறித்து பெண்களிடமாவது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதை ஆண்கள் மத்தியிலும் கொண்டு சேர்க்கவேண்டும்.

ஜானகி ரங்கநாதன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x