Published : 26 Feb 2018 10:26 AM
Last Updated : 26 Feb 2018 10:26 AM

சமூக வலைதளங்கள் மூலம் விற்பனை: ஆட்டோமொபைல் நிறுவனங்களின் புதிய உத்தி

ட்டோமொபைல் துறையின் வளர்ச்சி அபரிமிதமாக ஒருபுறம் வளர்ந்து வந்தாலும், புதிய அறிமுகங்கள் சந்தையில் படையெடுத்தாலும் அனைத்து நிறுவனங்களின் பிரதான நோக்கம் விற்பனையை அதிகரிப்பதுதான். முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து போராடும் முன்னணி நிறுவனங்கள் ஒருபுறம், எப்படியாவது சந்தையில் தங்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற போராட்டத்தில் பிற நிறுவனங்களும் புதிய உத்திகளை கையாண்டு கொண்டே இருக்கின்றன.

டி.வி. விளம்பரம், செய்தித் தாள் விளம்பரம், உள்ளூரில் மேம்பாட்டு நடவடிக்கை, வாடிக்கையாளர்களுக்கு சலுகை, விலையில் தள்ளுபடி என பல்வேறு சலுகைகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அடிக்கடி வாரி வழங்குவதும் விற்பனை அதிகரிப்பின் ஒரு பகுதிதான். இந்த வரிசையில் தற்போது பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கவனம் சமூக வலைதளங்கள் பக்கம் திரும்பியிருக்கின்றன.

இந்தியாவில் 42 கோடி பேர் மொபைல் மூலம் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர். இத்தகையோரின் அன்றாட நடவடிக்கைகள் பெரும்பாலும் மொபைல் போன் சார்ந்தே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பெரும்பாலானோர் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து கொள்வதையும் விரும்புகின்றனர்.

இதைக் கவனத்தில் கொண்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது விளம்பர உத்தியை இப்போது சமூக வலைதளங்கள் பக்கம் திருப்பியிருக்கின்றன. சமீபத்தில் ஃபேஸ்புக் மற்றும் பெயின் இணைந்து நடத்திய ஆய்வில் 2020-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறும் ஆட்டோமொபைல் விற்பனை 70 சதவீத அளவுக்கு இருக்கும் இதில் சமூக வலைதளங்கள் மூலமான விற்பனை 40 சதவீத அளவுக்கு இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. இந்த வகையில் விற்பனையாகும் வாகனங்களின் மதிப்பு 2,300 கோடி டாலர் அளவுக்கு இருக்கும் என்று கணித்துள்ளது.

இதை உணர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஃபேஸ்புக் லைவ், ட்விட்டர் பெரிஸ்கோப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்களது நிறுவன தயாரிப்புகளை நேரடியாக காட்சிப்படுத்துகின்றன. டெல்லியில் நடந்து முடிந்த ஆட்டோ எக்ஸ்போ 2018 கண்காட்சியின் நிகழ்வுகளை பெரும்பாலான நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பாக சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்தின. காரைப் பற்றிய நேரடி வர்ணனை, நேர்முக உரையாடல் உள்ளிட்ட அனைத்தையும் இந்த சமூக வலைதளங்கள் மூலம் நிகழ்த்தின.

மாருதி சுஸுகி நிறுவனம் ஃபேஸ்புக்குடன் இணைந்து ஆட்டோ எக்ஸ்போவில் இரவு நிகழ்வுகளை ஸ்பெஷல் நைட் எக்ஸ்போ என்று ஒளிபரப்பியது. இதில் புதிய ஸ்விப்ட் கார் பற்றி அக்குவேறு ஆணி வேறாக நிபுணர்கள் அலசினர். இந்த காட்சியை தங்கள் மொபைல் மூலம் பார்த்த வாடிக்கையாளர்கள் ஆட்டோமொபைல் கண்காட்சிக்கு சென்ற அனுபவத்தை அளிப்பதாக நிகழ்ச்சி இருந்தது.

social

இதேபோல ரெனால்ட் நிறுவனம் தனது க்விட் மார்வெல் சிறப்பு பதிப்பு கார் குறித்த விமர்சனங்களை இளைஞர்களைக் கவரும் வகையில் பதிவு செய்திருந்தது. சாகசப் பிரியர்களைக் கவரும் வகையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இது இன்ஸ்டா கிராமில் வெளியானது.

இவை அனைத்தையும் மிஞ்சும் வகையில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் 2 அறிமுக நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பாக ஃபேஸ்புக்கில் அரங்கேற்றியது. அதுவும் உணர் தொழில்நுட்பம் அடிப்படையில் முப்பரிமாண (3-டி) வரைபட தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருந்தது. வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் வர்ணத்தில் வாகனங்களை தேர்வு செய்ய முடியும் என்பதையும் இது காட்சிப்படுத்தியிருந்தது.

இத்தகைய சிறப்பு வசதி பார்வையாளர்களை மேலும் பரவசப்படுத்தியது. சமூக வலைதளங்களை தங்களது தயாரிப்பு விளம்பரங்களுக்கு மட்டுமின்றி வாடிக்கையாளர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கேற்ப மாற்றம் செய்து தரும் வகையிலும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் செயல்பட்டன.

ஹூண்டாய் நிறுவனம் முதல் முறையாக ஜிகா செல்ஃபி வாய்ப்பை ஹூண்டாய் அரங்கில் அளித்திருந்தது. வாடிக்கையாளர்கள் ஹூண்டாய் அரங்கில் தாங்கள் உணர்ந்த அனுபவங்களை வெளிப்படுத்தும் வகையில் அதுவும் நேரடி ஒளிபரப்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேபோல ஆட்டோமொபைல் நிறுவனங்களின் நிபுணர்கள் தயாரிப்புகள் குறித்து நடத்திய கலந்துரையாடலும் ஃபேஸ்புக், ட்விட்டரில் வெளியானது.

தொழில்நுட்பங்களை வாகன மேம்பாட்டுக்கு மட்டுமின்றி விற்பனை அதிகரிப்புக்கும் பயன்படுத்த முடியும் என்பதை உணர்ந்து அந்த வழியில் களமிறங்கியுள்ளன ஆட்டோமொபைல் நிறுவனங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x