Published : 23 Jan 2018 11:34 AM
Last Updated : 23 Jan 2018 11:34 AM

மாணவர்களின் கையெழுத்து மேம்பட ஆசிரியர்களுக்குப் பயிற்சி தேவை

 

‘மா

ணவர்களை அழகாக எழுதவைப்பது பள்ளிகளுக்குப் பெரிய சவாலாக இருப்பது ஏன்?’ இது எனது பயிற்சி வகுப்புகளின் தொடக்கத்தில் நான் முன்வைக்கும் கேள்வி. இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதிலைச் சொல்வார்கள்.

எனினும், பள்ளிகளில் மாணவர்களின் கையெழுத்து மேம்படாததற்கு ஆசிரியர்களின் அறியாமையே முக்கியக் காரணம் என்று நான் கருதுகிறேன்.

கையெழுத்து என்பது ஒருசில எழுத்து வடிவங்களைக் காகிதத்தில் எழுதுவது மட்டுமே.

பள்ளிகளில் கணிதம், இலக்கணம், உயிரியல், வேதியியல் முதலான எத்தனையோ கடினமான பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவை அனைத்துமே சவாலான விஷயங்கள்தாம். இருந்தாலும், இவற்றில் பெரும்பாலான மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெறுகிறார்கள்.

ஆனால், ஒரு சில சாதாரணக் கோட்டு வடிவங்களை எழுதுவதற்கு மாணவர்கள் பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கிறது.

அப்படியானால், கையெழுத்து விஷயத்தை எப்படிக் கையாளுவது என்பது ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை என்றுதானே பொருள்? இதைத்தான் அறியாமை என்று நான் குறிப்பிட்டேன்.

மாணவர்கள் தங்களுக்கு எவ்வாறு எழுதத் தெரியுமோ, அவ்வாறே மீண்டும் மீண்டும் எழுதிவருகிறார்கள். இது தவறானது. மாறாக, எப்படி எழுத வேண்டுமோ, அப்படி எழுத வேண்டும். அதாவது, சரியான விதத்தில் எழுத வேண்டும். இவ்வாறு எழுத ஆரம்பிக்கும்போது காலப்போக்கில் அவர்களது கையெழுத்து மேம்பாடு அடையும்.

சரியான விதத்தில் எழுதுவது என்றால் என்ன?

ஓர் எழுத்து வடிவத்தை முறையான விதத்தில் எவ்வாறு உருவாக்க வேண்டுமோ, அந்த விதத்தில் உருவாக்குவதுதான் சரியான அணுகுமுறை. இதில் மூன்று முக்கிய விஷயங்கள் உண்டு.

1. பென்சிலை லாகவமாகப் பிடிப்பது.

2. பென்சிலைக் காகிதத்தின் மீது மென்மையாக அழுத்துவது.

3. பென்சிலைக் காகிதத்தின்மீது சரியான திசையில் நகர்த்துவது.

இந்த மூன்று விஷயங்களையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த மூன்று விஷயங்களையும் கற்றுக்கொள்வதற்குப் பெயர்தான் முறையாக எழுதக் கற்றுக்கொள்வது அல்லது பயிற்சிசெய்வது.

ஆக, மாணவர்கள் முதலில் எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து அன்றாட எழுத்து வேலையின் மூலம் அவர்கள் கையெழுத்து படிப்படியாக முன்னேற்றம் அடையும்.

கையெழுத்துப் பயிற்சி என்பது முறையாக எழுதிப் பழகுவது. முறையாக எழுதிப் பழகும்போது மாணவர்கள் சரியாக எழுதுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள்.

ஆக, பயிற்சியின் பயன் கற்றுக்கொள்வது.

எனவே, வெறுமனே ஒரே வாக்கியத்தை மீண்டும் மீண்டும் எழுதுவதைப் பயிற்சி என்று சொல்ல முடியாது.

கையெழுத்துப் பயிற்சி என்பது இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது.

1. பயிற்சி தரப்படும் விதம்

2. கையெழுத்துப் பயிற்சி ஏடு

முதலில் விரலால் மட்டும் எழுதுவது. உதாரணத்துக்கு, ஆள்காட்டி விரலால் மணல்மீது எழுதுவது சுலபமானது. அடுத்ததாக, எழுத்தின்மீது பென்சிலால் எழுதிப் பழகுவது நல்லது. இவற்றைத் தொடர்ந்து காலி இடத்தில் எழுத வேண்டும்.

இந்த மூன்றும் கையெழுத்துப் பயிற்சியின் முக்கியமான படிநிலைகள்.

எத்தகைய கையெழுத்துப் பயிற்சி ஏடுகளில் இந்த மூன்றுவிதமான பயிற்சிகளுக்கும் வாய்ப்பு கிடைக்கிறதோ, அவைதான் கையெழுத்துப் பயிற்சிக்குப் பொருத்தமானவை.

இந்த விஷயங்கள் மிகச் சுலபமானவையே. ஆனாலும், மாணவர்களின் கையெழுத்து மேம்படாததற்குப் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம்.

கையெழுத்துப் பயிற்சி என்றால் என்ன, மாணவர்களுக்கு எவ்வாறு கையெழுத்துப் பயிற்சி தர வேண்டும் முதலிய விஷயங்களை ஆசிரியர்கள் கற்றுக்கொள்வதுதான் இதற்கான ஒரே தீர்வு.

கட்டுரையாளர், கையெழுத்துப் பயிற்சி நிபுணர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x