Last Updated : 21 Jan, 2018 12:41 PM

 

Published : 21 Jan 2018 12:41 PM
Last Updated : 21 Jan 2018 12:41 PM

இல்லம் சங்கீதம் 19: புதுமையால் பெருகும் அன்பு

எதிலும்

முழுசாய் லயிக்க முடியாமல்

எப்பொழுதும்

இரைதேடிக் கொண்டும்

இருப்பு பற்றி யோசித்தபடியும்

என்ன இது இது என்னது?

- விக்ரமாதித்யன்

“இன்று ஞாயிற்றுக்கிழமை. வழக்கம்போல அப்பா வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சமைக்க ஆரம்பித்துவிட்டார். அம்மா கன்னத்தில் கைவைத்து பரிதாபமாகக் காத்திருக்கிறார். அப்பாவின் அட்ராசிட்டிகள் முடிந்த பிறகு எனக்கும் தம்பிக்கும் நல்ல ஹோட்டல் சாப்பாடு காத்திருக்கிறது. அப்பாவைக் கல்யாணம் செய்து கொண்டதற்குத் தண்டனையாக அம்மா மட்டும் இந்தப் பரிதாப சமையலைச் சாப்பிடப் போகிறார்...” சின்னவன் செல்போன் கேமராவில் படமெடுக்க அவன் அக்கா கைக்கரண்டியை மைக்காகப் பாவித்து நேரடி வர்ணனை தந்துகொண்டிருந்தாள். சண்டே ஸ்பெஷலாக மொத்தக் குடும்பமும் சமையலறையில் குழுமியிருந்தது.

சமையலறையில் பொங்கும் அன்பு

பார்வதி கன்னத்தில் கைவைத்துக் காத்திருந்தாலும் உள்ளுக்குள் பொங்கும் மகிழ்ச்சியை அவள் கண்கள் காட்டிக்கொடுத்தன. வார நாட்களில் ஆளுக்கொரு திசையில் பறக்கும் குடும்பத்தில் ஞாயிறு வந்தால் உற்சாகத் திருவிழா களைகட்டும். அதிலும் கடந்த சில வாரங்களாக அவள் கணவன் குரு, “ஞாயிறு சமையல் என்னுடையதாக்கும்..” என அலப்பறையை ஆரம்பித்துவிடுகிறான். அது பெரும்பாலும் சொதப்பலில் முடியும் என்றாலும் நாளெல்லாம் பார்வதி மட்டுமே புழங்கும் அந்தச் சமையலறையில் குறுக்கும் நெடுக்குமாக ஆக்கிரமிக்கும் அவனது ஆகிருதியும் கனமான குரலும் பிற நாட்களிலும் கணவனின் இருப்பை எதிரொலித்தபடி இருக்கும். இன்று பாதி சமையலில் சுமாராக மணம் கிளம்ப, ‘சூப்பர்டா குரு...’ என எக்காளச் சிரிப்புடன் தன்னைத் தானே பாராட்டிக் கொண்டான். வழக்கம்போல குரு சொதப்ப, பார்வதி களமிறங்கி அவனது சமையலை ஒருவழியாக மீட்டாள். கடைசியில் ருசி பார்த்த குரு, குதூகலம் பொங்க மனைவியைக் கட்டிக்கொண்டான். பார்வதிக்குச் சாப்பிடும் முன்னரே வயிறு நிறைந்தது.

சேர்ந்திருக்கும் நேரமே சொத்து

ஆறு மாதங்களுக்கு முன்பு பார்வதியின் வீடு இப்படியில்லை. பார்க்கும் வேலையுடன் கூடுதலாகச் சில வர்த்தக முயற்சி, முதலீடுகள் என குரு எப்போதும் பரபரப்பாக இருப்பான். வீட்டிலிருக்கும் நேரத்தில்கூட அது தொடர்பான வேலைகளோ ஆட்களோ அவனைச் சூழ்ந்திருக்கும். “மனைவி, குழந்தைகளுடன் அரை மணி நேரம் செலவிட உதவாத சம்பாத்தியம் என்னத்துக்கு?” என பார்வதி அங்கலாய்ப்பதை குரு கண்டுகொள்ள மறுத்தான். தொழில் முதலீட்டில் அவன் அகலக்கால் வைத்த வேளையில் பங்குதாரர்களில் ஒருவர் காலை வாரிவிட்டார். குருவின் வர்த்தகம் தலைகீழாகக் கவிழ்ந்தது. பொருளை இழந்ததுடன் வாடிக்கையாளர்களிடம் கெட்ட பெயரும் சேர, அதீத மனச்சோர்வு குருவைப் படுக்கையில் தள்ளியது. அவனை மீட்க பார்வதி தடுமாறித் தவித்தபோதுதான், குரு மனைவியிடம் மனம் திறந்தான்.

பணக்காரக் குடும்பத்து வாரிசான பார்வதிக்கு வீட்டோடு மாப்பிள்ளை என்ற நிபந்தனையுடன் அவளுடைய பெற்றோர் வரன் பார்த்தனர். தரகரின் குளறுபடியால் நிபந்தனை அறியாமல் படியேறி, பின்னர் சுதாரித்துக்கொண்டு விலகிய குருவின் தன்மானம் பார்வதிக்குப் பிடித்துப்போனது. மகளின் பிடிவாதத்தால் தங்கள் நிபந்தனையைத் தளரவிட்டு, அரை மனதுடன் திருமண ஏற்பாடுகளில் இறங்கினர். குருவும் பார்வதியும் காதல் வானில் சிறகடித்தபோது எதிர்பாரா விபத்தொன்றில் குரு முடங்கினான். வாய்ப்புக்காகக் காத்திருந்த பார்வதியின் தந்தை, குருவின் தண்டுவடத்தில் அடிப்பட்டிருப்பதாகவும் திருமண வாழ்க்கைக்கே அவன் தகுதியில்லை எனவும் சொல்லி திருமண ஏற்பாடுகளை நிறுத்தினார். பார்வதி தனது காதலுக்கு உண்மை சேர்க்க அவனையே மணந்து, குருவைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்தாள். இரண்டு குழந்தைகளுடன் அவர்களின் இல்லறம் வெற்றிகரமாகச் சென்றது. ஆனால், பங்குதாரர் மோசடியால் வாழ்க்கையில் இரண்டாம் முறையாக குரு படுக்கையில் முடங்கியபோது, அவனை மீட்க பார்வதி படாதபாடு பட்டாள். உடல்நோவைவிட மனச்சோர்விலிருந்து அவனை மீட்க பகீரத பிரயத்தனம் தேவைப்பட்டது. அப்போதுதான் திருமணத்துக்குப் பிறகு தான் பணம் சேர்ப்பதில் தீவிரமானதன் காரணத்தை குரு மனைவியிடம் சொன்னான்.

செழிப்பான குடும்பத்தில் பிறந்த பார்வதி, குருவை மணந்த பிறகும் அந்தக் குறை தெரியாதிருக்கவே அவன் சிரமப்பட்டது தெரியவந்ததும் பார்வதி நெகிழ்ந்தாள். பின்னர் அவனுக்கு உரைக்கும்படி ஓர் உண்மையையும் சொன்னாள். “பணம்தான் பிரதானம் என்றால் உன்னை மணக்க முன்வந்திருக்கவே மாட்டேன். நீயும் இந்த வாழ்க்கையும்தான் எனக்கு மதிப்பிட முடியாத சொத்து” என்றதுடன் அவனைப் பராமரிப்பதில் அவற்றின் பொருளை உணர்த்தினாள். அவள் உடனிருந்த ஒவ்வொரு விநாடியிலும் வாழ்க்கையின் பொருளை அறிந்தான். உடல் தேறி எழுந்தவன் அதன்பின் அடியோடு மாறிப்போனான். வர்த்தக இழப்பு விவகாரத்தில் நீதிமன்ற வழக்கு அவனுக்கு நியாயம் சேர்த்ததில், அளவான உழைப்புடன் வெளியுலகிலிருந்து தன்னை துண்டித்துக்கொண்டான். அதிக நேரம் குடும்பத்துக்கு ஒதுக்கி, பார்வதியின் ஏக்கத்தை நிறைவேற்றத் தொடங்கினான்.

ஞாயிறு போற்றுதும்

வார நாட்கள் எப்படிக் கழிந்தாலும் ஞாயிறு வந்தால் குடும்பத்தை விட்டுப் பிரிய மாட்டான். ஒவ்வொரு ஞாயிறையும் குரு வித்தியாசமாக ஆரம்பித்தான். சமைப்பது, சாப்பிடுவது, குழந்தைகளோடு விளையாடுவது, டிவி பார்ப்பது, குட்டித் தூக்கம் என்பதற்கு அப்பால் அவன் ஞாயிறு தினத்தை இருவருக்கும் மட்டுமேயான தனித்துவப் பண்டிகை தினமாக மாற்றினான். ஒரு ஞாயிறன்று பார்வதி படித்த தொடக்கப் பள்ளிக்கு அழைத்துச் சென்று அவளைப் பால்ய நினைவுகளில் மூழ்கடித்தான். மற்றொரு ஞாயிறு முழுக்க பார்வதிக்குப் பிடித்த பழைய திரைப்பட டிவிடிகளை வாங்கிவந்து விடியவிடிய இருவரும் சேர்ந்து ரசித்தனர். அவளுக்குப் பிடித்த நாவலாசிரியரின் படைப்புகளை வாங்கிவந்து சமையல் மேடையில் அமர்ந்தவாறு, சமையலில் உதவும் மனைவிக்கு வாசித்துக் காட்டுவான். எதுவும் இல்லாது போனாலும் அன்று தான் சந்தித்த சுவாரசிய சம்பவங்கள் என கை கால் ஒட்டவைத்து அவள் ரசிக்கும்படி கதை விடுவான். இப்படித்தான் மாடித் தோட்டம், வீட்டு அலங்காரம் என இருவரும் சேர்ந்து பேசிக் களித்தவாறே தங்கள் சூழலுக்குப் புதுமை சேர்க்க ஆரம்பித்தார்கள்.

இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகு ஒரு சுற்று பெருத்துவிட்டாய் என உடற்பயிற்சிகள் சொல்லித் தந்தான். ஒருமுறை அவளது பிறந்த நாளை முதியோர் இல்லத்தில் கொண்டாடினான். அதில் ஒரு பெரியம்மா, “என் பெண்ணைப் பார்த்த மாதிரி இருக்கு” என பார்வதியைக் கட்டிக்கொண்டு அழ, அவள் வீடு திரும்பிய பிறகும் அதை நினைத்து அழுதாள். மனைவியைப் புரிந்துகொண்ட கணவனாக, குரு தனது வீராப்பை ஓரங்கட்டி பார்வதியின் அம்மாவைச் சந்தித்துப் பேசினான். அடுத்த ஞாயிறே அவரை வீட்டுக்கு அழைத்து வந்து மனைவியை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினான். இப்படி அடுத்த ஞாயிறு எப்போது வரும், அந்தத் தினத்தைச் சிறப்பிக்கும் விதமாக என்ன செய்யப்போகிறான் என ஒவ்வொரு வாரமும் பார்வதி ஏங்கிக் கிடக்கிறாள். பார்வதியும் களத்தில் இறங்கி, கணவனை அசத்துவதுண்டு.

இணையுடன் சேர்ந்திருப்பது என்றால் ஒரே கூரையின் கீழ் பிழைத்துக் கிடப்பதல்ல. கவனச் சிதறல்களைப் புறந்தள்ளி தனது இணைக்கு மட்டுமே எனத் தரமான நேரத்தை ஒதுக்குவது. திருமண வாழ்வின் ஆயுள், மணமாகி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்பதைவிட இப்படியான மணித் துளிகளை எத்தனை சேகரித்தோம் என்பதிலும் அடங்கும். தாம்பத்தியம் செழிப்படைய இணைக்கு என நேரம் ஒதுக்குவது அவசியம். ஏனெனில் வீடெனப்படுவது பிரியம் சமைக்கும் கூடு ஆயிற்றே!

(மெல்லிசை தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x