Published : 22 Jan 2018 11:28 AM
Last Updated : 22 Jan 2018 11:28 AM

புதிய நுகர்வோர் சட்டம் சொல்வது என்ன?

குளிர்கால கூட்டத் தொடரின் இறுதிநாளில் மத்திய நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் புதிய நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். அனைத்தும் சரியாக நடக்கும் பட்சத்தில் இந்த மசோதா விரைவில் சட்டமாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த புதிய சட்டம் 1986-ம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்துக்கு மாற்றாக இருக்கும்.

இதில் மூன்று புதிய பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. முதலாவது பொருட்களில் ஏதேனும் சேதாரம் இருந்து அதனால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அது உற்பத்தியாளரின் பொறுப்பாகும். அடுத்ததாக, நுகர்வோர் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படுவது, மூன்றாவதாக சமரச மையமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் அனைத்து சரக்கு மற்றும் சேவைகளுக்கும் பொருந்தும். வீடு வாங்குவது, கட்டுவது, தொலைத் தொடர்பு சேவைகள், ஆன்லைன் மூலம் வாங்கும் பொருட்கள், டெலி ஷாப்பிங், நேரடி விற்பனை மற்றும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என அனைத்தும் புதிய சட்டத்தின் கீழ் வரும்.

முந்தைய சட்டத்தில் முறையற்ற வர்த்தக நடைமுறைகள் இணைக்கப்படவில்லை. மேலும் ரசீது வாங்காமல் பொருட்கள் வழங்குவது, வாங்கிய பொருட்களை திரும்ப பெறாமல் இருப்பது, சேவைகளை முன்கூட்டியே ரத்து செய்ய முடியாமல் போவது, முன்கூட்டியே கடனை செலுத்துவதை அனுமதிக்காதது, கூடுதலாக டெபாசிட் தொகையை கேட்பது, அளவுக்கு அதிகமான அபராதம் கேட்பது போன்றவையும் புதிய சட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது.

உற்பத்தியாளரின் பொறுப்பு

புதிய சட்டத்தில் உற்பத்தியாளர் அல்லது சேவையை வழங்குபவர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் சேவையினால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் புதிய சட்டத்தின் கீழ் நுகர்வோர்கள் இழப்பீடு பெற முடியும். வடிவமைப்பு குறைபாடு, பொருள் தயாரிப்பில் விதிமுறைகளை பின்பற்றாதது, பொருளை எப்படி பயன்படுத்துவது ஆகியவை குறிப்பிடப்படாதது உள்ளிட்ட சில காரணங்களால் நுகர்வோர் இழப்பீடு பெற முடியும். பழைய விதிகளின் கீழ் இழப்பீடு பெறுவதற்கு அனைத்து காரணங்களையும் நிரூபித்தாக வேண்டும். ஆனால் புதிய மசோதாவில் ஏதேனும் ஒரு காரணத்தை நிரூபிக்கும் பட்சத்தில் இழப்பீடு கோர முடியும்.

ஒழுங்குமுறை ஆணையம்

செபி, ஐஆர்டிஏ போன்ற ஒழுங்குமுறை ஆணையங்கள் இருப்பதை போல, நுகர்வோர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பது குறித்த திட்டமும் இந்த மசோதாவில் இருக்கிறது. நுகர்வோர் பாதுகாப்பினை உறுதி செய்ய மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் குழுக்கள் இருந்தாலும், இவற்றுக்கு போதுமான அதிகாரம் இல்லை என்பதால் புதிய ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட இருக்கிறது.

நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் என பெயரிப்பட்டுள்ள இந்த அமைப்புக்கு அனைத்து மண்டலங்களிலும் அலுவலம் இருக்கும். வாடிக்கையாளர்கள் புகார் மீது விசாரணை நடத்தி, இழப்பீடு வழங்குவது குறித்த உத்தரவினை வழங்குவதற்கு இந்த ஆணையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் தவறான விளம்பரங்கள் மற்றும் முறைகேடான வர்த்தகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

நுகர்வோர்கள் எழுத்து பூர்வமாகவோ அல்லது எலெக்ட்ரானிக் முறையிலோ புகார்களை அளிக்கலாம். மாவட்ட ஆட்சியர் அல்லது நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் மண்டல அலுவலகங்களில் புகார் அளிக்கலாம். இந்த ஆணையம் வழங்கியிருக்கும் தீர்ப்பினை செயல்படுத்தவில்லை எனில் அது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆறு மாத சிறை தண்டனை அல்லது 20 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கிறது. அதேபோல தவறான விளம்பரங்கள், உணவு கலப்படம், போலி பொருட்கள் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியும். தவறான விளம்பரங்களுக்கு இரு ஆண்டுகள் சிறை ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க முடியும்.

மேலும், வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல்களை கொடுக்கும் அல்லது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத விளம்பரங்களில் நடித்திருக்கும் பிரபலங்களுக்கு அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

சமரச மையம்

தற்போது மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நுகர்வோர் தீர்ப்பாயங்கள் உள்ளன. புதிய சட்டத்தின் படி, இரு தரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்படும் பட்சத்தில் சமரசம் ஏற்படுத்திகொள்ள புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் சமரச மையங்கள் அமைக்க இந்த மசோதா பரிந்துரை செய்கிறது. இந்த மையம் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசமாக தீர்த்துக்கொள்வதற்கு உதவும்.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x