Published : 09 Jan 2018 10:53 AM
Last Updated : 09 Jan 2018 10:53 AM

சாலைப் பாதுகாப்பு கற்பிக்கும் நூலகர்!

வா

சிப்பின் மீதான காதலால் கவிதை, கட்டுரை நூல்கள் என இதுவரை 13 புத்தகங்கள் எழுதி இருக்கிறார் திருப்பூர் தனியார் கல்லூரியின் (NIFT-TEA College of Knit Fashion) நூலகர் எஸ்.ஏ. முத்துபாரதி. இளம்பருவத்தில் ஐ.பி.எஸ். ஆகும் கனவோடு வளர்ந்தார். பலமுறை சிவில் சர்வீஸ் தேர்வும் எழுதினார். அந்த வாய்ப்பு கைகூடாத நிலையில், தமிழ்நாடு காவல் போக்குவரத்துக் காப்பாளர்கள் அமைப்பின் மூலமாக போலீஸ் டிராஃபிக் வார்டனாக 2005-ம் ஆண்டில் சேர்ந்தார்.

சமூக சேவை

அன்றாட வாழ்வில் பெரும் சிக்கலாக மாறிவிட்ட போக்குவரத்து நெரிசல், சாலை விபத்து ஆகியவற்றில் இருந்து மக்களைக் காக்கும்விதமாக, திருப்பூரில் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார் முத்துபாரதி. போக்குவரத்தைச் சீர்படுத்துதல், விபத்துகளைக் குறைத்தல் தொடர்பாகப் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இவருடைய முதன்மையான குறிக்கோள். சாலை விதிமுறைகளைப் பின்பற்ற பலருக்கும் ஊக்கம் அளித்துவருவதால், மூன்று முறை நற்சான்றிதழை பெற்றுள்ளார்.

“நூலகராகப் புத்தகங்களை விநியோகித்து கல்வி பலரைச் சென்றடையச் செய்வது மட்டுமல்லாமல் சமூகத்துக்கான கல்வியை என்னால் முடிந்தவரை வழங்க வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டது. அதனால், பணிநேரம் தவிர்த்து, போக்குவரத்து காப்பாளர் அமைப்பில் சேர்ந்தேன். கவாத்து பயிற்சி எனப்படும் அணிவகுப்புப் பயிற்சி, போக்குவரத்து விதிமுறைகள் குறித்துப் படங்களுடன் விளக்கம், சாலைப் போக்குவரத்து சீரமைப்பில் செயல்படும்முறை, சைகைகள் மூலம் வாகனப் போக்குவரத்தைச் சீரமைத்தல் உட்படப் பல்வேறு பயிற்சிகளை அவ்வமைப்பு எனக்கு வழங்கியது.

அதன்பின்னர் காக்கி சீருடை வழங்கி, ஒரு வருடம் சோதனை அடிப்படையில் போக்குவரத்தைச் சீரமைக்க செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இப்படி திருப்பூர் மாநகரில் போக்குவரத்து காப்பாளர்கள் 70 பேர் உருவாக்கப்பட்டோம். தினமும் 10 பேர் வீதம், மாநகரப் போக்குவரத்து காவல் பிரிவு வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட இடங்களில் வாரம் முழுவதும் மாலை நேரங்களில் போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுவருகிறோம்” என்கிறார் முத்துபாரதி.

பாதுகாப்பு அம்சங்கள்

சராசரி நாட்கள் மட்டுமின்றி தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களிலும், ஊட்டி மலர் கண்காட்சி, கோயில் திருவிழாக்கள், பந்த் போன்ற அத்தியாவசிய காலங்களிலும் போலீஸாருடன் இணைந்து இவர் பணியாற்றுகிறார். “திருப்பூர் போன்ற தொழிலாளர்கள் நிறைந்த ஊரில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது லட்சக்கணக்கான மக்கள் பேருந்து நிலையங்களில் திரண்டு தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். அவர்களை வரிசையில் நிற்கவைத்துப் பாதுகாப்பாகப் பயணிக்க வழிகாட்டுவோம். பண்டிகை காலங்களில் வீடுகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்து வீடியோ உரை ஒளிப்பதிவு செய்து, உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசை மூலம் ஒளிபரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். தேர்தல் காலங்களிலும் பணியாற்றுகிறோம்” என்கிறார்.

விபத்தைத் தடுப்பதும் சமூகப் பணியே!

சாலைப் போக்குவரத்துச் சீரமைப்புப் பணிகளைத் தவிரப் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் ஆர்.எஸ்.பி (Road Safety Patrol) எனப்படும் சாலை பாதுகாப்புக் குழுவை ஏற்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். “போக்குவரத்து விழிப்புணர்வுப் பயிற்சிகள், குறும்படங்கள் திரையிடல் எனப் பல்வேறு பணிகளைச் செய்கிறோம். மாணவ, மாணவிகள் மூலம் அவர்களது பெற்றோருக்குத் தகவலைக் கடத்துகிறோம். தங்களது குழந்தைகள் சாலை விதிகளைப் பற்றிப் பேசுவது, தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்துவது ஆகியவற்றைக் கண்டு பெற்றோர் பெருமிதம் கொள்வதுடன், வாகனம் ஓட்டும் முறையையும் மாற்றிக்கொள்கின்றனர். ஆண்டுதோறும் திருப்பூர் மாநகரப் போக்குவரத்துக் காப்பாளர்கள் குடும்ப விழாவும் கொண்டாடுகிறோம்” என்றார்.

வளரும் தலைமுறையிடம் தொடர்ந்து விழிப்பை ஏற்படுத்தினாலே விபத்துகள் வெகுவாகக் குறையும். உயிரிழப்புகளும் தடுக்கப்படும். எந்தக் கைமாறு பாராமல் சுற்றிச் சுழன்றுக்கொண்டிருக்கிறார் இந்த நூலகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x