Published : 24 Nov 2023 06:21 AM
Last Updated : 24 Nov 2023 06:21 AM

கோலிவுட் ஜங்ஷன்: நடிப்பும் இயக்கமும்

ஏதாவது ஒரு வகையில் வித்தியாசம் காட்டி, வெற்றிப் படம் கொடுப்பதில் இயக்குநர் ஷங்கரின் உதவியாளர்கள் கில்லாடிகள். ஷங்கரின் உதவியாளரான அறன், எழுத்து, இயக்கம் ஆகியவற்றுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள படம் ‘ஜிகிரி தோஸ்த்’. எஸ்.பி. அர்ஜுன் - ஹக்கா ஜெ இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், தலைப்புக்கு ஏற்ப நண்பர்களின் கதையாக உருவாகியிருக்கிறது. மூன்று நண்பர்கள் ‘அவுட்டிங்’ செல்லும் வழியில், கேங்ஸ்டர்களால் ஒரு பெண் கடத்தப்படுவதைப் பார்க்கின்றனர். அந்தப் பெண் தன்னைக் காப்பாற்றும்படி கண் ஜாடையால் உதவி கேட்க அவரைக் காப்பாற்றினார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை. இதில் இயக்குநர் அறன் ‘டெரரிஸ்ட் டிராக்கர்’ என்கிற தொழில்நுட்பத்தைப் படப்பிடிப்புக்குப் பயன்படுத்தியிருப்பதாகக் கூறுகிறார். அறனுடன் ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி, வி.ஜே.ஆஷிக், பவித்ரா லக்ஷ்மி, அனுபமா குமார், கௌதம் சுந்தரராஜன், சிவம், ஜாங்கிரி மதுமிதா உட்படப் பலர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை அஸ்வின் விநாயகமூர்த்தி.

‘கண்ணப்பா’ முதல் தோற்றம்: தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் முழுக் கவனம் செலுத்தி நடித்து வரும் ‘கண்ணப்பா’ பான் இந்தியப் படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தி உட்பட ஐந்து மொழிகளில் உருவாகிவரும் இப்படம் கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கைக் கதையில் நிறைந்திருக்கும் சாகசங்கள், பக்தி ஆகியவற்றைக் களமாகக் கொண்டிருக்கும் பக்தி சாகசப் படமாக உருவாகி வருகிறது.

முகேஷ் குமார் சிங் இயக்கிவரும் இப்படத்தை, நியூசிலாந்து நாட்டின் பனிமலைகள், காடுகளில், ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஷெல்டன், ஜாவ் லென்ஸ்களைப் பயன்படுத்தி படமாக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஷ்ணுவின் அப்பா மோகன் பாபு, மலையாள சூப்பர் ஸ்டார் மோன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

நயன்தாராவின் பரிந்துரை: திருச்சி ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் கோயில் குருக்கள் ஒருவரின் மகள் அன்னபூரணி. சிறுவயது முதலே இந்தியா கொண்டாடும் ஒரு சமையற்கலை நிபுணர் ஆகிவிட வேண்டும் என்கிற லட்சியத்தை வரித்துக் கொண்டிருக்கிறார். அப்பா அவளது லட்சியத்துக்குக் கைகொடுத்தாலும் ‘சைவ சமையற்கலை நிபுணர்’ ஆகவேண்டும், அசைவத்தைக் கனவில் கையால் தொட்டுச் சமைக்கக் கூடாது என்கிறார். இதுபோன்ற சின்னச் சின்னத் தடைகளை மீறி தனது லட்சியம் நோக்கிப் புறப்பட்ட அன்னபூரணியின் பயணம் எந்த மாதிரி சுவைகளை உள்ளடக்கியது என்பதுதான் கதை” என்கிறார் படத்தை இயக்கியிருக்கும் ஷங்கரின் உதவியாளரான நிலேஷ் கிருஷ்ணா.

ஷங்கரின் மற்றொரு உதவியாளரான அட்லி இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாரா - ஜெய் ஜோடி பிரிந்து விடுவார்கள். இந்தப் படத்தில் அதே ஜோடியை மீண்டும் இணைத்திருக்கிறார் இயக்குநர். “நயன்தாராவை மையப்படுத்திய கதை என்றாலும் இதில் ஜெய்தான் நடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்து அவரைப் படத்துக்குள் நயன்தாரா கொண்டுவந்தார்” எனக் கூறுகிறார் இயக்குநர்.

முரட்டு மீனவர்! - நாகார்ஜுன் மகன் நாகசைதன்யா, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் ‘கேமியோ’ வேடத்தில் வந்தார். அதன்பின்னர் அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கஸ்டடி’ என்கிற நேரடித் தமிழ்ப் படத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து அவர் நடிக்கும் தெலுங்குப் படங்கள் அனைத்தையும் தமிழிலும் வெளியிட்டு வருகிறார்கள். தற்போது அவர் நடித்து வரும் ‘தண்டேல்' என்கிற பான் இந்தியன் படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு முரட்டு மீனவராக நடிக்கிறார். இதற்காக ‘சிக்ஸ்பேக்’ உடலை உருவாக்கியிருக்கிறார் நாகசைதன்யா. இதில் அவருக்கு ஜோடி சாய் பல்லவி. இந்த ஜோடியின் நடிப்பில் 2021இல் வெளியான ‘லவ் ஸ்டோரி’ ஒரு வெற்றிப் படம். ‘தண்டேல்’ படம் ஆந்திரக் கடற்கரை கிராமம் ஒன்றில் நடந்த உண்மைக் கதை. எங்கே கதை நடந்ததோ, அங்கேயே படப்பிடிப்பை நடத்த இருக்கிறார் படத்தின் இயக்குநர் சந்து மொண்டேட்டி. இவர், 'கார்த்திகேயா 2' படத்தின் மூலம் பிரபலமானவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x