Last Updated : 30 Jan, 2018 01:34 PM

 

Published : 30 Jan 2018 01:34 PM
Last Updated : 30 Jan 2018 01:34 PM

பிளஸ் 2 தேர்வுக்குத் தயாரா? பிழை தவிர்த்தால் பிரகாசிக்கலாம்! (தமிழ் முதல், இரண்டாம் தாள்)

மிழகத்தில் பிளஸ் டூவுக்கு மார்ச் 1 அன்றும், பத்தாம் வகுப்புக்கு மார்ச் 16 அன்றும் அரசு பொதுத் தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. தேர்வுகள் நெருங்கிவிட்ட நிலையில் உச்ச மதிப்பெண்களை விரும்பும் மாணவர்கள், சுமாராகப் படிப்பவர்கள், தேர்ச்சி ஒன்றையே இலக்காகக் கொண்டவர்கள் அத்தனை தரப்பு மாணவர்களுக்கும் தலைசிறந்த ஆசிரியர்கள் ஆலோசனைகளை வழங்கவிருக்கிறார்கள். முதலாவதாக, பிளஸ் டூ தமிழ் ஒன்று, இரண்டாம் தாள்களுக்கான கவனக் குறிப்புகள் இதோ:

கருத்தும் எழுத்தும்

தேர்வு நோக்கில் மற்ற பாடங்களைப் படிப்பதற்கும் தமிழ் பாடத்தைப் படிப்பதற்கும் அடிப்படையில் சில வேறுபாடுகள் உண்டு. தமிழ்ப் பாடத்தில் பிழைகளால் மதிப்பெண்களை இழக்க நேரிடும். முதன்மையான ஒற்றுப் பிழைகள் அதிகம் இருந்தால் மதிப்பெண் நிச்சயம் குறையும். ‘தினை/திணை’ போன்ற பொருள் மாறும் மயங்கொலிப் பிழைகள் விடைத்தாள் திருத்துபவருக்குப் பளிச்செனத் தெரியும். ‘ஒருமை/ பன்மை’ குறித்த கருத்துப் பிழைகளும் இவற்றில் அடங்கும். இந்தப் பிழைகள் குறித்து இரண்டாம் தாளில் தனிப் பாடப் பகுதியே உள்ளது. இப்பகுதியை நன்கு புரிந்துகொண்டு படிப்பதுடன் அவற்றை விடைத்தாளில் கவனமாகப் பின்பற்றினால், சிறு பிழைகளால் நேரும் ஓரிரு மதிப்பெண் இழப்பைத் தவிர்க்கலாம்.

மனப்பாடப் பகுதிக்குப் புத்தகத்தில் கொடுத்திருப்பது போல எழுத வேண்டும். மேற்கோள் குறி இட மறப்பது, சீர் மற்றும் அடி ஆகியவற்றை மாற்றுவது போன்ற பிழைகள் இல்லாது கவனமாக எழுத வேண்டும். ‘பா வகை’ இடத்தில் ‘ஆசிரிய விருத்தம்’ என்பதற்குப் பதிலாக ‘ஆசிரியர் விருத்தம்’ என மாணவர்கள் தவறாக எழுதுவது நடக்கிறது. திருக்குறளின் முதலடியில் 4 சொற்களும், அடுத்த அடியில் 3 சொற்களும் இடம் பெற வேண்டும். இதைச் சிலர் அவசரத்தில் மாற்றி எழுதிவிடுவர். இவை போன்ற கவனக்குறைவுகளையும் மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.

அடிக்கடி தவறுவது

முதல் தாளில் செய்யுள் பகுதியில், ஒரே கதையமைப்பிலான 2 பாடங்கள் இடம்பெற்றிருப்பது சில மாணவர்களுக்குக் குழப்பம் தரும். உதாரணமாக, ‘பாண்டியன் பரிசு’, ‘கம்ப ராமாயணம்’ பாடப் பகுதிகளைச் சொல்லலாம். செய்யுள் அடியின் கீழ் கொடுக்கப்பட்ட விடை எழுதுக பகுதியில் ‘கடமை புரிந்தான் இவனே’ என்ற கேள்வி பாண்டியன் பரிசு பாடத்தின் வேலனைக் குறிக்கும். ஆனால், கம்ப ராமாயணத்திலிருந்து அனுமனைத் தவறாகப் புரிந்துகொண்டு மாணவர்கள் விடையளிக்கிறார்கள். அதேபோல தேவாரம் பாடிய மூவரில் ஒருவரைக் குறிக்கும் ‘சுந்தரர்’ என்பதையும், அனுமனைக் குறிக்கும் ‘சுந்தரன்’ என்பதையும் மாணவர்கள் அவசரத்தில் மாற்றி எழுதுகிறார்கள்.

‘பொருண்மொழி காஞ்சி துறை’ தொடர்பாகப் பதில் எழுதும்போது ‘இம்மை’ என்பற்குப் பதிலாக ‘இன்மை’ எனத் தவறாக எழுதுவார்கள். ‘யாரும் இல்லை தானே கள்வன்’ என்ற குறுந்தொகைப் பாடல் வரியை, சிலப்பதிகாரப் பாடல் வரியாகத் தவறுதலாக அடையாளம் காண்பார்கள். இரண்டாம் தாளில் துணைப்பாடப் பகுதியில் இடம்பெறும் ‘மகன்’ மற்றும் ‘மண்’ ஆகிய இரு வெவ்வேறு தலைப்புகளை குழம்பிக்கொள்வதும் உண்டு.

இப்படித் தவறுகளுக்கு இடமளிக்கும் பாடப்பகுதிகளை ஆசிரியர் உதவியுடன் தனிப் பட்டியலிட்டு வைத்துக்கொள்வது கடைசி நேரத் திருப்புதலுக்குப் பெரிதும் உதவும்.

பகுபத உறுப்பிலக்கணம், இலக்கணக் குறிப்பு, புணர்ச்சி விதி தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், இவற்றுக்கு இடையே பெரும்பாலான மாணவர்கள் மாற்றி எழுதிவிடுகிறார்கள். சராசரியாகப் படிக்கும் மாணவர்கள் இப்பகுதியில் அதிகம் தவறு செய்கின்றனர். அணிகள் தொடர்பாக விடையளிக்கையில், ‘எடுத்துக்காட்டு உவமை அணி’ என்பதை ‘எ.கா.உ அணி’ என்று சுருக்கமாகச் சிலர் எழுதுகிறார்கள். இது ‘எ.கா: அணி’ என்பதாகத் திருத்தும் ஆசிரியர் மதிப்பெண் குறைக்க வாய்ப்பளித்துவிடும்.

கூடுதல் விடை வீண்

முதல் தாளின் கடைசி வினாவாக வரும் திருக்குறள் குறித்த ‘கோடிட்ட வினாவினை நிரப்புக’ பகுதிக்குப் பதில் எழுதுகையில் விடையை மட்டுமே எழுதுகிறார்கள். ஆனால், வினாவில் உள்ள திருக்குறளை எழுதிப் பதிலுக்குரிய ஓரிரு சொற்களையும் சேர்த்து எழுதுவது நல்லது.

வினாத்தாளில் கேட்கப்பட்டதைவிடக் கூடுதல் வினாக்களுக்கு விடையளிப்பதைத் தவிர்க்க வேண்டும். விடைத்தாள் திருத்துபவர், முதல் வினாவில் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விடைகளுக்கு மட்டுமே மதிப்பெண் அளிப்பார். அடுத்து எழுதப்பட்ட விடைகள் மிகச் சரியாக இருந்தாலும் அவற்றுக்கு மதிப்பெண் கிடைக்காது.

உச்ச மதிப்பெண்கள் பெற

வினா வாரி மதிப்பெண் விவரங்கள் அடங்கிய ‘வினாத்தாள் வடிவமைப்பு’ குறித்து மாணவர்கள் அறிந்து வைத்திருப்பது அவசியம். 100 மதிப்பெண்களுக்கான தமிழ் முதல் தாளில், மதிப்பெண் குறைய அதிக வாய்ப்புள்ள கேள்வி எண் 19 வரையிலான பகுதிகளுக்கு மாணவர்கள் கூடுதல் கவனம் தர வேண்டும். மீதமுள்ள 60 மதிப்பெண்களுக்கு விடையளிப்பது ஒப்பீட்டளவில் மாணவர்களுக்குச் சுலபம்.

16 உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதும் பகுதியில் (கேள்வி எண் 33-48), 12 வினாக்கள் பாடத்தின் பின்பகுதியில் இருந்தும், ஏனைய 4 வினாக்கள் நூற்குறிப்பு, ஆசிரியர் குறிப்பு, அருஞ்சொற் பொருள், பாடல் வரி ஆகியவற்றில் இருந்தும் கேட்கிறார்கள். இந்த 4 வினாக்கள் மட்டும் பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்படுவதால் நன்றாகப் படிப்பவர்களும் அவற்றில் ஓரிரு மதிப்பெண் இழக்க வாய்ப்பாகிறது.

இரண்டாம் தாளுக்கான கவனக் குறிப்புகள்

தமிழ் 2 வினாத்தாள் 80 மதிப்பெண்களுக்கானது. தமிழ் முதல் தாளைவிட இரண்டாம் தாளைக் கணிசமான மாணவர்கள் சிரமமாகக் கருதுவதுடன், மதிப்பெண் குறையவும் வாய்ப்பளித்துவிடுவார்கள். குறிப்பாக, துணைப்பாடத்தில் நாடகம் மற்றும் கற்பனைப் பகுதிகளில் (கே.எண் 13-14) மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதால், ஏனைய 2 பகுதிகளான ‘கருப்பொருளும் சுவையும்’, ‘கதை மாந்தர் திறனாய்வு’ ஆகியவற்றுக்கு முன்னுரிமை தந்து விடையளிக்கலாம்.

கே.எண் 15, இலக்கிய நயம் பாராட்டல் பகுதியில் ‘குறிப்புச் சட்டகம், முன்னுரை, திரண்ட கருத்து, மையக் கருத்து’ ஆகியவற்றை எழுதுவதுடன் வினாவின் அனைத்து உள் தலைப்புகளுக்கும் பதில் அளித்து முடிவுரையுடன் முடிப்பது முழு மதிப்பெண் தரும்.

ஒரு மதிப்பெண்களுக்கான (கே.எண் 23-32) அடங்கிய ‘பொருள் வேறுபாட்டை உணர்த்தும்’ வினாவில் வாக்கியத்தில் அமைத்து எழுதுவது அவசியம். நிறுத்தற் குறிகளை இடும் வினாவுக்கு, உரைநடைப் பகுதியின் நிறுத்தற் குறிகள் அடங்கிய வாக்கியங்களை கண்டறிந்து அவற்றில் பயிற்சி பெற வேண்டும். இதேபோன்று பாடத்தின் பின்பகுதியில் உள்ள மொழிப் பயிற்சி வினாக்களில் அதிகத் திருப்புதல் அவசியமாகும்.

3jpg

தேர்ச்சி நிச்சயம்

1. இரண்டு மதிப்பெண் பகுதியில் ஓரிரு சொற்களில் விடையளிக்கும் (சுமார் 15) வினாக்களை மட்டும் படித்தாலே 4 மதிப்பெண் உறுதி.

2. மனப்பாடப் பகுதியில் 20 திருக்குறளையும் படித்தால் 8 மதிப்பெண்கள் உறுதி.

3. பாடத்தின் பின்னுள்ள ‘சரியான விடையளி’ பகுதியைப் படித்தால் 12 மதிப்பெண்களும், ‘பொருத்துக’ படித்தால் 4 மதிப்பெண்களும் நிச்சயம். 

4. மனப்பாடப் பகுதியில் ‘பா வகை’ எழுதினாலே 2 மதிப்பெண் பெறலாம்

5. கே.எண் 28, ‘அணி’ பகுதியில் என்ன அணி என்பதை எழுதினாலே 2 மதிப்பெண் உறுதி.

6. கே.எண் 27, திணை/துறை தொடர்பான வினாவில், ‘பொதுவியல் திணை’, ‘பொருண்மொழி காஞ்சி துறை’ ஆகிய இரண்டில் ஒன்று நிச்சயம் கேட்பார்கள். இந்த வகையில் 4 மதிப்பெண்கள் உறுதி.

7. புணர்ச்சி விதியில் சொற்களைப் பிரித்து எழுதினாலே 2 மதிப்பெண் பெறலாம்.

8. எட்டு மதிப்பெண் பகுதிக்கு, திருக்குறள் பாடப் பகுதியை மட்டும் படித்தாலே முழு மதிப்பெண் கிடைக்கும்.

8. சிற்றிலக்கியம் பகுதியின் 5 வினாக்களைப் படித்தால் 4 மதிப்பெண் வினாக்களில் இரண்டை உறுதியாக எழுதலாம்.

9. இதுவே இரண்டாம் தாளில் மொத்தமுள்ள 8 பாடங்களில் பாட எண்கள் 2, 3, 5, 7 ஆகியவற்றைப் படித்தாலே உரிய 30 மதிப்பெண்களை முழுமையாகப் பெறலாம். அதிலும், பாட எண் 2, 5-ல் தலா 2 கேள்விகள் கேட்கப்படுவதால், இவற்றைப் படித்தாலே 16 மதிப்பெண்களை நிச்சயம் பெறலாம்.

 10. முந்தைய வருடங்களின் வினாத்தாள்கள் அடிப்படையில் 1,2,3,4, 9 ஆகிய துணைப்பாடங்கள் முக்கியமானவை எனத் தெரியவருகின்றன. 10 துணைப் பாடங்களையும் படிக்காத மாணவர்கள், கடைசி நேரத்தில் இந்த 5 பாடங்களில் கவனம் செலுத்தினால் போதுமானது.

 

பாடக்குறிப்புகளை வழங்கியவர் வெ.ராமகிருஷ்ணன்,
முதுகலைத் தமிழாசிரியர்,
அரியலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x