Published : 17 Jan 2018 11:22 AM
Last Updated : 17 Jan 2018 11:22 AM

டிங்குவிடம் கேளுங்கள்: ஏன் நல்லதை நினைக்க வேண்டும்?

‘நல்லதை நினைத்து, நல்லதைச் செய்தால் நன்றாக இருக்கலாம்’ என்று சொல்கிறார்கள். அப்படி நல்லதை நினைத்த நல்லவர்களான மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங், சே குவேரா போன்றவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்குத்தானே பலியாகியிருக்கிறார்கள்! அப்படி என்றால் நாம் ஏன் நல்லதை நினைக்க வேண்டும் டிங்கு?

– சி. கலைச்செல்வன், 12-ம் வகுப்பு, அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வத்தலக்குண்டு.

- கார்த்திகேஸ்வரி, எஸ்.ஆர்.வி. பள்ளி, சமயபுரம்.

மிகவும் சுவாரசியமான கேள்வி! நான் இன்னொரு உயிருக்குத் தீங்கு விளைவிக்கமாட்டேன் என்று காந்தியைக் கொன்றவரும் மார்டின் லூதரைக் கொன்றவரும் சே குவேராவைக் கொன்றவரும் நினைத்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும்! அப்படி அவர்கள் நினைக்காததால்தானே இந்த நல்லவர்கள் கொல்லப்பட்டார்கள்.

17CHSUJ_MARTIN_LUTHER_KING_JR. மார்ட்டின் லூதர் கிங் right

அதேநேரம், நல்லதையே நினைத்த காந்தியின் எண்ணத்தால்தான் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது. மார்ட்டின் லூதர் கிங்கின் நல்லெண்ணத்தால்தான் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பெரும் விழிப்புணர்வு பெற்றார்கள். கியூபா சுதந்திரம் பெற்றதற்கு சே குவேரா ஒரு முக்கியமான காரணம்.

இன்றும் இந்த மூவரும் பல லட்சக்கணக்கானவர்களின் நாயகர்களாகவும் வழிகாட்டிகளாகவும் இருப்பதற்குக் காரணம், அவர்கள் நல்லதை நினைத்ததும் செய்ததும்தான். பல நூற்றாண்டுகள் கழிந்தாலும் அவர்கள் வரலாற்றில் நிலைத்திருப்பார்கள்.

ஆனால் அவர்களைக் கொன்ற தீயவர்கள் ஏற்கெனவே காணாமல் போய்விட்டார்கள். நன்மையே வென்றது. நன்மையே வெல்லும்.

நல்லதை நினைப்பதும் நல்லதைச் செய்வதும் உயர்ந்த பண்புகள். நான் நல்லது செய்தால் பதிலுக்கு எனக்கு என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்லாமல் யாராக இருந்தாலும் சரி, அவர் எனக்குக் கேடு செய்தாலும் சரி, நான் நல்லபடியே நடந்துகொள்வேன், இதுவே என் இயல்பு என்று இருப்பதே நம்மை மனிதர்களாக மாற்றுகிறது. அதனால் நாம் நல்லதைத்தானே நினைக்க வேண்டும் கலைச்செல்வன், கார்த்திகேஸ்வரி!

கதை கேட்பது நல்லதா, கதை படிப்பது நல்லதா?

–பிராங்க் ஜோயல், 4-ம் வகுப்பு, ஜெயின் வித்யாலயா, மதுரை.

இதில் நல்லது, கெட்டது என்ன இருக்கிறது பிராங்க் ஜோயல்? குரலில் ஏற்ற இறக்கதோடு அழகாகக் கதை சொல்லும்போது, கேட்க நன்றாகத்தான் இருக்கும். நடுவில் நம் சந்தேகங்களையும் கேட்க முடியும். ஆனால் வளர வளர கதை கேட்பதை விட, நாமே கதை படிக்க ஆரம்பித்துவிடுவோம். நம் விருப்பத்துக்கு ஏற்ப வேகமாகவோ மெதுவாகவோ கதையைப் படிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். கதையைப் படிக்கும்போது காட்சிகளைக் கற்பனை செய்துகொள்ளலாம். நாமே கதையைப் படிக்கும்போது இப்படி அதிக வசதிகள் கிடைக்கின்றன. அதனால் உங்கள் விருப்பப்படி கதை கேட்கவும் செய்யலாம், படிக்கவும் செய்யலாம்!

அலிகேட்டருக்கும் முதலைக்கும் என்ன வித்தியாசம், டிங்கு?

-கே. ராகசுதா, மேட்டுப்பாளையம்.

அலிகேட்டர் நன்னீர் நிலைகளில்தான் வாழும். முதலை நன்னீரிலும் உப்பு நீரிலும் வாழக்கூடியது. அலிகேட்டரின் வாய் U வடிவில் இருக்கும். முதலையின் வாய் V வடிவில் இருக்கும். அலிகேட்டர் வாயை மூடியிருக்கும்போது மேல்தாடைப் பற்கள் வெளியே தெரியும். முதலை வாயை மூடியிருக்கும்போது மேல்தாடை, கீழ்தாடைப் பற்கள் வெளியே தெரியும், ராகசுதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x