Last Updated : 28 Jan, 2018 11:40 AM

 

Published : 28 Jan 2018 11:40 AM
Last Updated : 28 Jan 2018 11:40 AM

இல்லம் சங்கீதம் 20: இல்லறத்தில் ஆர்வம் குறையுமா?

சுகித்து நீ உறங்குகிறாய்

என் விழிகளுக்குள் தூசியாக…

- லஷ்மி சாகம்பரி

பக்கத்து வீட்டு இளைஞனிடம் சிரித்துப் பேசும் மனைவி சரண்யாவையே பார்த்தபடி இருந்தான் ராஜேந்திரன். அந்தச் சிரிப்பு மாறாமல் வீட்டுக்குள் நுழைந்த சரண்யா, சோர்வாக அமர்ந்திருக்கும் ராஜேந்திரனின் தோளில் கைகளை மாலையாக்கினாள். அவளது கரங்களைத் தவிர்க்கும் ராஜேந்திரனின் முனைப்பு, சரண்யாவின் மலர்ந்த முகத்தை நெருக்கத்தில் பார்த்ததும் முடங்கிப்போனது. கள்ளம் கபடமில்லாத அந்த முகம் அவன் மனதைப் பிசைந்தது. கண நேரமானாலும் மனைவி மீது தோன்றி மறைந்த சந்தேகம் அவனைக் குற்றவுணர்வில் தள்ளியது.

கலக்கமும் நடுக்கமும்

தன் விழிகளைத் துழாவும் அவளது பார்வையில் அந்த விஷம எண்ணம் புலப்பட்டுவிடுமோ என்று பார்வையைத் தவிர்த்தான். தன்னிடமிருந்து கணவன் விடுபட ஆயத்தமானதைப் புரிந்துகொண்ட சரண்யா, “நேத்து மாதிரி பட்டுனு கையைத் தட்டி விடாதீங்க, கஷ்டமாயிருக்கு” என்றாள். முகத்தில் மலர்ச்சி குறையாமல் சொல்லிச் செல்லும் மனைவியைப் பார்த்து ராஜேந்திரன் மேலும் வெட்கினான்.

நேற்று இரவு வழக்கம்போல் தன்னை அணைத்துக்கொண்ட அவளது கரங்களை அவன் தட்டிவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டது ஞாபகம் வந்தது.

நேற்று மனைவியைத் தவிர்த்த தனது கரங்களை இப்போது விரோதம் பொங்கப் பார்த்தான். கைவிரல்கள் லேசாக நடுங்குவதுபோல் தெரியவர, மறுபடியும் அந்தப் பயம் மனதைக் கவ்வியது. தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். சற்றுத் தூரம் சென்ற பிறகே அவனுக்கு ஆசுவாசம் கிடைத்தது.

நடந்தபடியே மறுபடியும் விரல்களை உயர்த்திப் பார்த்தான். ‘இதுதான் நரம்புத் தளர்ச்சியா? அன்பு மனைவியின் ஆசை விரல்களைத் தட்டிவிட்டதற்கு இதுவும் ஒரு காரணமா? மனைவி மீது எனக்கு நாட்டம் குறைந்துவிட்டதா? அக்கா என்று வளையவரும் இளைஞனிடம் இயல்பாகப் பேசியவள் மீது சந்தேகம் வந்ததற்கு என் நாட்டக் குறைவுதான் காரணமா? மனதில் விழுந்த கறையுடன் இனி மனைவி முகத்தை எப்படி ஏறிடுவது? சரண்யாவுடன் சந்தோஷமான மண வாழ்க்கையை இனியும் தொடர முடியுமா?’ - இப்படி மனதில் அலைமோதும் விசனங்களில் கடைசியாகத் தொக்கிய கவலை ராஜேந்திரனுக்கு மிரட்சி தந்தது. அருகிலிருந்த தேநீர்க் கடையில் ஒதுங்கினான்.

அங்கே அவனைச் சந்தித்த சக தொழிலாளர்களுடன் உரையாட ஆரம்பித்ததில் தன்னிடமிருந்தே தனக்கு விடுதலை கிடைத்ததாக ராஜேந்திரன் பெருமூச்சு விட்டான்.

பதற்றம் கூட்டிய மன உளைச்சல்

சரண்யாவுக்கும் ராஜேந்திரனுக்கும் மணமாகி பத்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் மனைவியை ராஜேந்திரன் மனதாரக் கொண்டாடுவான். குடும்பத்தில் மட்டுமல்ல; பணியாற்றும் தொழிற்சாலையிலும் ராஜேந்திரனுக்கு நல்ல பெயர். நிர்வாகத்திடமும் சக தொழிலாளர்கள் மத்தியிலும் நம்பிக்கையையும் சம்பாதித்திருந்தான்.

அதுவே வினையாகவும் மாறியது. தொழிலாளர் பிரச்சினை ஒன்றில் ராஜேந்திரன் உரக்கக் குரல் கொடுத்ததை நிர்வாகம் ரசிக்கவில்லை. பணியில் லேசாக அவன் சறுக்கியதைப் பயன்படுத்தி அவன் மீது பாய்ந்தது. விசாரணை என்ற பெயரில் ராஜேந்திரன் ஒரு மாதமாக அலைகழிக்கப்படுகிறான்.

வெளியில் காட்டிக்கொள்ளவில்லையே தவிர உள்ளுக்குள் அவன் அரண்டிருந்தான். அதன் பக்கவிளைவுகளாக வீட்டுக்குள்ளும் தன் உடலுக்குள்ளும் இயல்பு கெட்டிருந்தான். நேற்றும் அப்படித்தான் அலுவலகக் குழப்பத்தின் உச்சத்தில் உழன்று கொண்டிருந்தவன், ஆசை மனைவியின் கைகளைத் தட்டிவிட்டிருக்கிறான். மன உளைச்சலை உடலின் உபத்திரவமாகப் புரிந்துகொண்டு கூடுதலாகக் குழம்பித் தவிக்கிறான்.

மீண்ட உற்சாகம்

மறுநாள் சோர்வுடன் வேலைக்குச் சென்ற ராஜேந்திரன், வீடு திரும்பும்போது தனது உற்சாகத்தை மீட்டிருந்தான். தொழிலாளர்கள் ஒன்று திரண்டு ராஜேந்திரன் பின் நின்றதில் நிர்வாகம் பயந்தது. ராஜேந்திரனை அனுசரிக்கும் முடிவுடன் அவனுக்குப் புதிய மரியாதைகளைத் தந்தது. அவன் மீதான புகார்கள் போன இடம் தெரியவில்லை. ராஜேந்திரன் புல்லரிக்கத் தன் விரல்களை உயர்த்திப் பார்த்தபோது, ஒரு மாத நடுக்கம் தொலைந்ததை ஆச்சரியமாக உறுதிசெய்தான். மனதை அரித்த கவலைகள் அனைத்தையும் தலைமுழுகியவனாகப் புதிய தெம்புடன் வீடு திரும்பினான்.

கணவனை சரண்யா வரவேற்றபோது, மனைவியை அருகில் அமர்த்தி தனது ஒரு மாதத் தடுமாற்றங்களை விளக்கினான். அவன் கேசம் கோதியவாறே காது கொடுத்த சரண்யா, கடைசியில் கணவன் ‘சாரி’ என்றதைப் பழைய புன்னகையுடன் ஏற்றுக்கொண்டாள்.

தற்காலிகத் தடுமாற்றம்

ஒரு மாதமாகத் தன்னைப் படுத்தியெடுத்த உளைச்சல்களில் இருந்து ராஜேந்திரன் முழுமையாக விடுபட்டிருந்தான். மனைவியிடம் நாட்டம் இழந்ததுக்குத் தான் பயந்ததுபோல உடல் பிரச்சினை காரணமல்ல என்பதையும் அவனால் உணர முடிந்தது.

தம்பதியரில் ஒருவருக்கு உடலோ மனதோ சரியில்லாது போனால், அவர்களது இல்லறம் தற்காலிகமாகத் தடுமாறக்கூடும். இல்லறத்தில் நாட்டம் குறைவதற்கு இதுபோன்ற உடல், மனம் சார்ந்தவற்றுடன் வேறுபல காரணங்களும் உண்டு. கணவன், மனைவி அந்தரங்க உறவைப் பாதிக்கும், அவர்களுக்கு இடையிலான தனித்துவ நெருக்கத்துக்கு வேட்டுவைக்கும் இந்த நாட்டக் குறைவை ஆராய்ந்து அதிலிருந்து விடுபட முயல்வது இல்லறத்துக்கு ஆரோக்கியம் சேர்க்கும்.

பேசித் தீர்க்கலாம்

ராஜேந்திரனைப் போல நடைமுறைப் பிரச்சினைகளால் அல்லாடுபவர்களுக்கான கவலை, பதற்றம், குழப்பம், மன அழுத்தம் போன்றவை பரவலான காரணங்கள். இவற்றுடன் போதிய உறக்கம் இல்லாதது, வேறு பல உடல் உபாதைகள், அவற்றுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளின் பக்க விளைவு, ஹார்மோன் சுரப்புகளில் சமநிலை தடுமாற்றம், அதிகப்படி உடல் எடை, அளவுக்கு மீறிய உடல் உழைப்பு போன்றவை பிரதான காரணங்கள். ஆண்களின் புரோஸ்டேட் தொடர்பான பிரச்சினைகள், பெண்களின் மாதச் சுழற்சி அவதிகள், கருத்தரிப்பு குறித்த கவலைகள் என இவை வேறுபடவும் செய்யலாம்.

தன்னம்பிக்கை குறைவு, அதீத எதிர்மறை எண்ணங்களில் அலைக்கழிவது, மனதளவில் நெருக்கம் இல்லாதது, கணவன் மனைவிக்கு இடையே பேசித் தீர்க்காத பிரச்சினைகள், சந்தேக உணர்வு, நடைமுறைக்குப் புறம்பான எதிர்பார்ப்புகள், இணையிடம் தென்படும் அதிகப்படியான எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ய முடியுமா என்ற சந்தேகம், இணையிடம் போதுமான தூண்டல் கிடைக்காதது, ஈர்ப்பு குறைந்துபோனதாக உள்ளுக்குள் தொடரும் குமுறல் போன்றவை நாட்டக் குறைவுக்கான பிற காரணிகளில் சேரும்.

இருவரில் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ இந்த நாட்டக் குறைவு அவ்வப்போது எட்டிப்பார்க்கலாம். கூடலில் ஒருவருக்கு மிகையான நாட்டமும் மற்றவருக்கு அந்த அளவு இல்லாததுமான சமநிலைத் தடுமாற்றமும் இதில் சேர்த்தி. இந்த நாட்டக் குறைவுக் காரணிகளில் பலவும் தம்பதியர் பேசித் தீர்ப்பதன் மூலமாகவோ நாள் போக்கில் தாமாக சரியாகக்கூடியதாகவோ இருக்கும். இணையருக்குள் இணக்கம் கெடும் அளவுக்குப் பாதிப்புகள் தொடர்ந்தால் தேவையான மருத்துவ ஆலோசனையை நாடுவது அவசியம்.

(மெல்லிசை ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x