Published : 01 Jan 2018 12:15 PM
Last Updated : 01 Jan 2018 12:15 PM

ஸ்மார்ட்போனிலிருந்து ஆட்டோமொபைலுக்கு மாறும் சாம்சங்!

மி

ன்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபடுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது. எதிர்காலத்தில் புழக்கத்துக்கு வரும் கார்களுக்கான இன்ஜினை தயாரிப்பது குறித்து இந்நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.

ஸ்மார்ட்போன் மற்றும் சிப் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சாம்சங், இத்தொழிலுக்கான வளர்ச்சி வாய்ப்பு குறைந்து வருவதை அடுத்து மாற்றுத் தொழிலில் தடம் பதிக்க பரிசீலித்து வருகிறது. அனைத்துக்கும் தலைமை ஏற்க உறுதியான தலைவர் இல்லாததும் நிறுவனத்தை தள்ளாட்டத்துக்கு உள்ளாக்கியுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் காட்டுவதை நிறுவனத்தின் புதிய நிர்வாகியான யோங் ஷோன் தெரிவித்துள்ளார்.

சிப் விற்பனையைப் பொறுத்தமட்டில் நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு லாபத்தில் 60 சதவீதமாக உள்ளது. இது வரும் ஆண்டுகளில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஆட்டோமொபைல் துறையின் வருமானம் 2030-ம் ஆண்டில் 64,500 கோடி டாலரை என்றும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 95 சதவீத கார்கள் தானியங்கி முறையில் செயல்படுவதாக இருக்கும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கார்களுக்கான பொழுதுபோக்கு கருவிகளை தயாரிக்கும் ஹர்மான் நிறுவனத்தில் 800 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனம் ஃபோக்ஸ்வேகன், ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பொழுதுபோக்கு கருவிகளை தயாரித்து சப்ளை செய்கிறது. அதேபோல தானியங்கி கார்களுக்கான உதிரி பாகங்களை தயாரித்தளிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்து கணிசமான பங்குகளைப் பெற சாம்சங் முயற்சி செய்யலாம். இதுபோன்ற கார்களில் பயன்படுத்தப்படும் ரேடார் சென்ஸார், கார் பாதுகாப்பு கருவிகளை பிரத்யேகமாக தயாரிக்கும் டிடிடெக் நிறுவனத்தில் சாம்சங் முதலீடு செய்துள்ளது.

சாம்சங் நிறுவனத்துக்கு போட்டி நிறுவனமாகத் திகழ்கிறது டெல்பி. இந்நிறுவனமும் எதிர்கால கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. சாம்சங் நிறுவனமும் தற்போது இந்த வழியைப் பின்பற்ற திட்டமிட்டுள்ளது. அதேபோல செமி கண்டக்டர்களைத் தயாரிப்பது மற்றும் பேட்டரி வாகனங்களுக்குத் தேவையான பொருள்களைத் தயாரிப்பது குறித்த பரிசீலனையும் உள்ளது.

ஆட்டோமொபைல் துறைக்கு மாற முடிவு செய்தாலும், அதை உறுதியாக எடுக்க முடியாத சூழலே நிலவுகிறது. நிறுவனத்தின் தலைவர் ஜே ஒய் லீ, லஞ்சம் அளித்த குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வெளியேறியுள்ளனர். மேலும் நிறுவனங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையில் மிகவும் தேர்ந்த நிறுவனமாக சாம்சங் இதுவரை உருவாகாததும் அந்நிறுவனத்துக்குள்ள பாதகமான அம்சமாகும்.

இருப்பினும் தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாகிகள், நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டி கட்டாயத்தில் உள்ளனர். ஆட்டோமொபைல் துறையில் இறங்குவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த வாய்ப்பை சாம்சங் தவற விடாது என்று நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x