Last Updated : 01 Dec, 2017 10:54 AM

 

Published : 01 Dec 2017 10:54 AM
Last Updated : 01 Dec 2017 10:54 AM

நடிக்கும்போதே மரணம்

எம்ஜிஆர் படத்தின் கதாநாயகன் எஸ் எம் குமரேசன்

எம்

ஜிஆர் கதாநாயகனாக பிரபலம்பெறத் தொடங்கிவிட்ட காலத்தில் அவர் துணை கதாபாத்திரத்திலும், அவரைவிட வயதில் இளையவர் ஒருவர் கதாநாயகனாகவும் நடித்தார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? அந்தப் படத்தின் பெயர் ‘அபிமன்யு’.

குமரி மாவட்டம் சுசீந்திரத்தைச் சேர்ந்த எஸ்.எம்.குமரேசன்தான் அந்தக் கதாநாயகன் நடிகர். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் நாடக கம்பெனியில் சிறுவனாக சேர்ந்து, பல்வேறு இதிகாச நாடகங்களில் நடித்தவர். நாடகங்கள் மூலம் புகழ்பெற்ற தனது பதினேழாவது வயதில், ‘அபிமன்யு’ படத்தின் நாயகன் ஆனார். அந்த ஒரு படமே அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.

1948-ல் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ‘அபிமன்யு’ படத்தில், வீர அபிமன்யுவாக எஸ்.எம்.குமரேசனும், அவரது தந்தை அர்ச்சுனராக எம்ஜிஆரும், கிருஷ்ணர் வேடத்தில் பி.வி. நரசிம்ம பாரதியும், பலராமனாக எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியும் நடித்துக் கலக்கியிருந்தனர்.

s.m.kumaresan @ murugan ‘வள்ளித் திருமணம்’ நாடகத்தில் முருகனாக குமரேசன் கிரீடம் ஏற்படுத்திய காயம்

‘அபிமன்யு’ படப்பிடிப்பின்போது நடந்த சுவாரசியமான தகவலைச் சொல்கிறார் எஸ்.எம்.குமரேசனின் மகன் மோகன்தாஸ் காந்தி. “படத்தின் இயக்குநர் ஏ.காசிலிங்கம், நடத்திய கதாநாயகன் தேர்வில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்பட அன்றைய ராஜபார்ட் நடிகர்கள் நிறையபேர் பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால், வாய்ப்பு அப்பாவுக்குத்தான் கிடைத்தது. படத்தின் இறுதியில் ‘அபிமன்யு’ போர்க்களத்தில் இறப்பது போலவும், அவரது தலையை மடியில் தூக்கிவைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர் அழுவது போன்றும் படம் பிடித்திருக்கிறார்கள்.

அப்போது, எம்.ஜி.ஆர் அணிந்திருந்த கனமான உலோக வார்ப்படத்தில் செய்யப்பட்ட கிரீடம் அப்பாவின் முகத்தில் விழுந்துவிட்டது. அதனால் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியிருக்கிறது. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அப்பா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். இளகிய மனம்கொண்ட எம்.ஜி.ஆர், தன்னால்தானே இப்படி ஆகிவிட்டது என்று அப்பாவை அருகில் இருந்து பார்த்துக்கொண்டார். இறக்கும் வரையில் அப்பாவின் மூக்கருகே அந்தத் தழும்பு இருந்தது” என்கிறார்.

கலைஞரின் எழுத்தும் எம்.எஸ்.வி.யின் மெட்டும்

“ ‘அபிமன்யு’ படத்தில் இன்னொரு சுவாரசியம் என்ன தெரியுமா?” என்று தொடர்ந்தார் குமரேசனின் மற்றொரு மகனான விவேகானந்தன். “அந்தப் படத்துக்கு ஏ.எஸ்.ஏ.சாமியுடன் இணைந்து கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதினார். ஆனால், அவரது பெயர் படத்தின் டைட்டிலில் இடம்பெறவில்லை. படத்தில் தனது பெயர் வரும் என்று ஆசையாக மனைவியைத் திரைப்படத்துக்கு அழைத்துச்சென்று ஏமாந்துபோனதாகக் கருணாநிதியே எழுதியிருக்கிறார்.

அடுத்து அதே ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ‘ராஜகுமாரி’ படத்திலும், கருணாநிதி பணியாற்றினார். இந்தப் படத்தின் டைட்டிலில்தான் முதன்முறையாக, ‘வசனம்: ஏ.எஸ்.ஏ.சாமி- உதவி: மு.கருணாநிதி' என அவரது பெயர் வெளியானது. ‘அபிமன்யு’ படத்துக்கு இசையமைத்தவர்கள் எஸ்.எம்.சுப்பையா நாயுடு - சி.ஆர்.சுப்பராமன். ‘புது வசந்தமாமே வாழ்விலே’ என்ற பாடல் திருச்சி லோகநாதன்-யூ, ஆர்.ஜீவரத்தினம் குரல்களில் மிகப் பிரபலமானது. இப்பாடலுக்கு உண்மையில் இசையமைத்தவர் சுப்பராமனிடம் உதவியாளராக பணிபுரிந்த ஒரு இளைஞன்.

அவர்தான் பின்னாளில் ‘மெல்லிசை மன்னராக’ப் புகழ்பெற்ற எம்.எஸ்.விஸ்வநாதன். திரைப்படத்துக்கென அவர் முதன்முதலில் மெட்டமைத்தது இந்தப் பாடலுக்குத்தான் என்பதை எம்.எஸ்.வி. நினைவு கூர்ந்திருக்கிறார்” என்றதும் திரை, நாடகம் இரண்டிலும் இடைவிடாமல் இயங்கிய தனது தந்தையின் கலையுலகப் பங்களிப்புக் குறித்து விவரித்துச் சென்றார் மோகன் தாஸ்.

திரையும் நாடகமும்

“ ‘அபுமன்யு’ படத்துக்குப் பின்னர் ‘தன அமராவதி’, ‘விகடயோகி’, ‘ஓடாதே நில்’, ‘கலியுகம்’, ‘பாவக்குட்டி’(மலையாளம்) உட்பட பல படங்களில் அப்பா நடித்திருக்கிறார். அவர் கதாநாயகனாக நடித்து 1947-ல் வெளியான ‘தன அமராவதி’ படத்தில்தான், நகைச்சுவை நடிகராக சந்திரபாபு முதன்முதலில் அறிமுகமானார். திறமை இருந்தும் சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற கோபத்தில் ஸ்டுடியோ வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற சந்திரபாபுவை அழைத்த அந்நாள் இலக்கியவாதி, இயக்குநர் பி.எஸ்.ராமையா அழைத்து அவருக்கு சினிமா வாய்ப்பு கொடுத்தார்.

அந்தப் படத்தில் நடித்த நட்பின் பொருட்டு அப்பாவின் பல நாடகங்களைக் காண சந்திரபாபு வந்திருக்கிறார். சினிமாவைவிட அப்பா நாடகத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். சினிமாவில் புகழோடு இருந்தபோதும் ஆயிரக்கணக்கான மேடைகள் ஏறியிருக்கிறார். மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கோயில் விழாக்களில் அப்பாவின் குழுவினர் நடிக்கும் ‘வள்ளி திருமணம்’, ‘சத்யவான் சாவித்ரி’, ‘பவளக்கொடி’ உள்ளிட்ட பல நாடகங்கள் பாரம்பரியமாக மேடையேறிக்கொண்டேயிருந்தன.

1960-ல் பழனியில் நடந்த அரசுப் பொருட்காட்சியில் அப்பாவின் ‘வள்ளித் திருமணம்’ நாடகம் நடத்தப்பட்டது. அதில் வள்ளியின் தோழியாக நடிக்கும் வாய்ப்பை கே.ஆர்.விஜயாவுக்கு கொடுத்து ஊக்குவித்திருக்கிறார் அப்பா. இப்படிப் பல கலைஞர்கள் அவரது நாடகங்களில் நடித்து உயர்ந்திருக்கிறார்கள்” என்கிறார்.

s.m.kumaresan 1 ‘ஓடாதே நில்’ படத்தில் rightநடிக்கும்போதே மாரடைப்பு

“அப்பாவுடன் நடிகர் முத்துராமனின் மனைவி சுலோச்சனா, கலைஞர் கருணாநிதியின் துணைவியார் தர்மாம்பாள் (ராஜாத்தி அம்மாள்), நாகேஷ் மனைவி ரெஜினா, கே.ஆர்.விஜயா போன்றோரும் நாடகத்தில் நடித்திருக்கிறார்கள். இறக்கும் தருவாயில்கூட அவரது கால்சீட் டைரி நிரம்பியிருந்தது. 1977-ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் ‘வள்ளி திருமணம்’ நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அப்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு, நாடகத்தைப் பாதியில் நிறுத்தக்கூடாது என்று பிடிவாதமாக முழு நாடகத்தையும் நடத்தி முடித்தபிறகே மருத்துவமனைக்கு அரை மயக்கத்தில் வந்து, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இறக்கும்போது அவருக்கு 47 வயது.” என்ற விவேகானந்த பாஸ்கரன், “ யாரும் கேட்டுக் கொடுக்காமல், யாருக்கு என்ன உதவி செய்யவேண்டும் என்று தேடித்தேடி உதவி செய்யும் குணம் அவரிடம் இருந்ததால் தனக்கென்று அவர் எதையும் வைத்துக்கொள்ளாமல் இருந்துவிட்டார்” என்று நினைவு கூர்ந்தார்.

சினிமாவில் சம்பாதித்த பணத்தையெல்லாம் கொட்டி, எஸ்.எம்.கே பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய குமரேசன், சிவாஜி கணேசன், சரோஜா தேவி நடித்த ‘வானவில்’, தாமே கதாநாயகனாக நடித்துத் தயாரித்த ‘மூங்கில் பாலம்’ ஆகிய படங்கள் கடைசிவரை வெளியாகவே இல்லை. இதனால் குமரேசன் பெருத்த நஷ்டமடைந்திருக்கிறார்.

எஸ்.எம்.குமரேசனுக்கு, ஜீவானந்தம், சிவக்குமார், மோகன்தாஸ் காந்தி, சுரேஷ்பாபு காமராஜ், ஜவஹர், பாலமுரளி கிருஷ்ணா, விவேகானந்தன் என்ற 7 மகன்களும், சுபாஷினி என்ற மகளும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பரதநாட்டியம், கதக், இசை என்று கலைத்துறை சார்ந்த பணிகளிலேயே ஈடுபட்டிருக்கிறார்கள். மோகன்தாஸ் காந்தி பாரீஸில் உள்ள சார்ட்டிகோல்ட் விமான நிலையத்தில் அதிகாரியாக இருக்கிறார். அவரது மனைவி சர்மிளா ஒரு கதக் கலைஞர். விவேகானந்த பாஸ்கரன், சென்னையில் பரதக்ஷேத்ரா என்ற பெயரில் மூன்று இடங்களில் நடனப் பள்ளிகளை நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x