Last Updated : 08 Dec, 2017 12:01 PM

 

Published : 08 Dec 2017 12:01 PM
Last Updated : 08 Dec 2017 12:01 PM

வாழ்வு இனிது: சொப்புப் பொம்மைகளில் மண்வாசனை சமையல்!

 

கு

ழந்தைப் பருவத்தின் நினைவுகளை அசைபோடுவது எல்லோருக்கும் பிடித்தமான விஷயம். அதுவும் சிறு வயதில் சொப்புச் சாமான்களை வைத்து சமையல் செய்து விளையாடிய நினைவு, எப்போதும் பசுமையாகவே நிலைத்திருக்கும். இந்த நினைவுகளுக்கு திரும்பவும் உயிர்கொடுத்தால் எப்படி இருக்கும்? அதைத்தான் ‘தி டைனி ஃபுட்ஸ்’(The Tiny Foods) என்ற யூடியூப் சேனல் செய்து வருகிறது.

இந்த நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சியாகத் திருவண்ணாமலையைச் சேர்ந்த தம்பதி என்.பி. ராம்குமாரும் ஆர். வளர்மதியும் இந்த சேனலை ஆரம்பித்திருக்கின்றனர். இந்த சேனலில், கிராமத்துச் சூழலின் பின்னணியில் சொப்புச் சாமான்களை வைத்து விதவிதமான உணவு வகைகளை உண்மையிலேயே சமைக்கின்றனர். ‘மினியேச்சர் குக்கிங்’ என்று அழைக்கப்படும் இந்த வகை சமையல் ஜப்பானில் மிகவும் பிரபலம்.

யூடியூப்பில் எப்போதுமே டிரெண்டிங்காக இருப்பவை சமையல் சேனல்களே. உலகம் முழுவதும் சமையல் வீடியோக்களைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துகொண்டு இருக்கிறது. இதை மனதில் வைத்துதான் ஏதாவது வித்தியாசமான, தனித்துவமான யூடியூப் சேனலை ஆரம்பிக்க வேண்டும் என்று யோசித்திருக்கிறது இந்தத் தம்பதி.

இது புதுமை

“யூடியூப்பில் உணவு தொடர்பான சேனல் ஒன்று தொடங்கலாம் என்ற யோசித்தபோது, என் மனைவி வளர்மதி தான் சொப்புச் சாமானில் சமைத்தால் வித்தியாசமாக இருக்கும் என்று சொன்னார். சொப்புச் சாமான்கள் எல்லோருடைய குழந்தைப் பருவ நினைவுகளுடன் இணைந்திருக்கும் விஷயம் என்பதால், எனக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. ஆனால், மொத்த சேனலையும் அப்படி வடிவமைக்கலாம் என்று திட்டமிடவில்லை. ஒரு நாள், எதேச்சையாக யூடியூப்பில் பிரபலமாக இருக்கும் ஜப்பான் ‘மினியேச்சர் குக்கிங்’ சேனல்களை என் மனைவி பார்த்துவிட்டு என்னிடம் காண்பித்தார்.

அந்த சேனல்களைப் பல லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். அந்த ‘மினியேச்சர் குக்கிங்’ சேனல்களின் வீடியோக்களைப் பார்த்த பிறகு, நாமும் ஏன் அப்படி ஒரு சேனலை இங்கே ஆரம்பிக்கக் கூடாது என்று யோசித்துதான் ‘தி டைனி ஃபுட்ஸ்’ சேனலை உருவாக்கினோம்” என்கிறார் ராம்குமார். தகவல் தொழில்நுட்பத்தில் எம்.எஸ். படித்திருக்கும் இவர், குடும்பத் தொழில் நிறுவனத்தை நிர்வகித்தபடி, இந்த சேனலையும் நிர்வகித்துவருகிறார். இந்த வீடியோக்களைப் படம் பிடிப்பதற்கான இடங்களை ஒவ்வொரு வாரமும் வித்தியாசமாகத் தேர்வு செய்கிறார் இவர்.

“இந்த ‘மினியேச்சர் குக்கிங்’ செய்வதற்குப் பொறுமை தேவை. பின்னணி ‘செட்’ எல்லாம் அமைத்து உணவைச் சமைத்து முடிக்க சிலமுறை ஐந்து மணி நேரம்கூட ஆகும். அதுதான் நாங்கள் எதிர்கொள்ளும் சவால். சொப்புச் சாமானில் சமைக்கும்போது ருசியிலும் சமையல் முறையிலும் எந்தச் சமரசமும் செய்துகொள்வதில்லை. சமைப்பதற்கு என்னென்ன பொருட்கள் தேவையோ அவற்றைப் பயன்படுத்தியே சமைக்கிறோம்.

ஆரம்பித்த ஒரு மாதத்தில் எங்கள் நண்பர்களும் ஊரில் இருப்பவர்களும் எங்களை வீடியோக்களைப் பார்த்துப் பாராடினார்கள். நமது குழந்தைப் பருவத்து நினைவுகளை நம்முடைய குழந்தைகளுடன் பார்த்து அசைபோட வைக்கும் நோக்கத்தில்தான் இந்த சேனலைத் தொடங்கினோம். அதற்கு வரவேற்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி” என்று சொல்கிறார் வளர்மதி.

சொப்புச் சமையல்

இந்த சேனல் ஆரம்பித்து ஒரு மாதம்தான் ஆகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு புதிய சமையல் வீடியோ பதிவேற்றப்படுகிறது. பிரியாணி, இட்லி-மீன்குழம்பு, ரொட்டி-இறால் தொக்கு, ‘சிக்கன் நக்கெட்ஸ்’, ‘சிக்கன் ஆம்லெட்’ போன்ற ஐந்து உணவு வகைகளைப் பதிவேற்றியிருக்கின்றனர். இதில், இவர்கள் செய்த பிரியாணி வீடியோ ஃபேஸ்புக்கில் டிரெண்டாகியிருக்கிறது.

இந்த வீடியோவை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பகிர்ந்திருக்கின்றனர். கிராமத்துச் சூழலின் பின்னணியில் நம்ம ஊர் மண்பாண்ட சொப்புச் சாமான்களில் சமைக்கப்படும் இந்தச் சமையல் வீடியோக்கள் குழந்தைகள், பெரியவர்கள் என இருதரப்பினரையும் கவரும் அம்சங்களுடன் இருக்கின்றன.

‘தி டைனி ஃபுட்ஸ்’ சேனலைப் பார்க்க: https://goo.gl/3EDYW2

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x