Published : 05 Dec 2017 11:42 AM
Last Updated : 05 Dec 2017 11:42 AM

மாணவர் மனம் நலமா? 07: கண்களைப் பார்த்துப் பேசுங்கள்!

என்னுடைய பள்ளிப் பருவம் கிராமப்புறத்தில் ஆண்கள் பள்ளியில் கழிந்தது. தற்போது நகர்ப்புறத்தில் இருக்கும் ஒரு கோ-எட் கல்லூரியில் படித்துவருகிறேன். இன்றுவரை என் வகுப்பு சக மாணவிகள் முதற்கொண்டு பெண்களிடம் சரிவரப் பேச முடியவில்லை. அது வெட்கமா, பயமா என்று தெரியவில்லை. தாழ்வு மனப்பான்மையால் ஒதுங்கிப்போகிறேன். எனக்கொரு வழி சொல்லுங்கள்.

- தனபால், ஆவுடையார் பாளையம். (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இரு பாலர் பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் மாணவ, மாணவிகள் வெளி உலகையும் புதிய சூழலையும் நிச்சயமாகத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார்கள். அன்றாட வாழ்வில் ஆணும் பெண்ணும் இணைந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே நிதர்சனம். அது பணிச் சூழலாக இருந்தாலும் சரி, குடும்பச் சூழலாக இருந்தாலும் சரி.

ஆக, இருபாலர் கல்வி முறை ஆரோக்கியமான சமூகத்துக்கான முன்னெடுப்பு எனலாம். இத்தகைய வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், புதிய சூழலில் புதிய மனிதர்களைப் பார்க்கும்போது கூச்சம் ஏற்படும். அதீத கூச்சத்தால் பதற்றம் ஏற்பட்டுப் பயம் என்ற நிலைக்குத் தள்ளப்படலாம்.

அதிலும் உங்களுக்குத் தடுமாற்றம் ஏற்படக் காரணம், அடிப்படையில் ஆண்கள் போட்டி மனப்பான்மையுடனும், சாதிக்கும் ஆசையுடனும், தீர்வு காண விரும்புபவர்களாகவும் இருக்கிறார்கள். வெட்கத்தோடு இருக்கும் ஆண்கள் தங்களை,தோற்றவர்களாகக் கருதுகிறார்கள். பெண்களோடு பேசுவதில் கூச்சம் அல்லது பயம் ஏற்படும் ஆண்கள், பெண்களின் கண்ணோட்டத்தில், தாங்கள் கவர்ச்சியற்றவர்களாகத் தோன்றுவதாக நினைத்துக்கொள்கிறார்கள்.

ஆனால், இப்படித்தான் ஆண் செயல்பட வேண்டும் என்பதும் ஆண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதும் காலங்காலமாகச் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டு ஆண்கள் மீதும் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் திணிக்கப்பட்ட ஒன்றாகும். அதனால், முதலாவதாக தாழ்வுமனப்பான்மையைத் தூக்கி எறியுங்கள்.

கூச்சத்தை எப்படித் தவிர்ப்பது?

எதிர்மறை விஷயங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, உங்களுடைய பலத்தை மனக்கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துங்கள். உதாசீனப்படுத்தப்படலாம் என்ற நினைப்புடன் தொடங்குங்கள். நாம் விழுந்த இடங்கள்தான் நல்ல அனுபவங்களின் ஆரம்பம் என்று எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய பிரச்சினையை அநாவசியமாக யாரிடமும் சொல்ல வேண்டாம். நாம் எதையாவது சொதப்பிவிடுவோம் என்று நினைக்க வேண்டாம். அவ்வாறு நேர்ந்தாலும் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. மற்றவர்கள் நம்முடைய சிறு குறைகளை மறக்கவும் மன்னிக்கவும் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விஷயங்களில் கூச்சம் இருக்கலாம். உங்களுக்குப் பெண்களிடம் பேசுவதில் கூச்சம் ஏற்படுவதால், இவற்றைச் செய்துபாருங்கள்.

பெண்களிடம் பழகத் தொடங்குவதற்கு முன்னதாக ஆரம்பத்தில், ஒரு நிலைக்கண்ணாடி முன்பு அல்லது ஒரு ஆணோடு பேசிப் பாருங்கள். பின்னர் ஒரு பெண்ணோடு உரையாடலைத் தொடரலாம்.

முதலில் சற்று அறிமுகமான, நட்பு பாராட்டும் ஒரு பெண்ணோடு பேசத் தொடங்குங்கள். நீங்கள் எவ்வாறு பேசுகிறீர்கள் என்று அந்தப் பெண்ணிடமிருந்து ஒரு ‘ஃபீட்பேக்’ பெறுங்கள். ஏதாவது குறை சொன்னால், அதை மறுபரிசீலனை செய்யுங்கள்.

கண்களைப் பார்த்துப் பேசப் பழகுங்கள். அதற்காக வில்லனைப் போல முறைத்துப் பார்க்க வேண்டாம். தன்னம்பிக்கையான உடல்மொழியுடன், உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு உரையாடுங்கள்.

உரையாடலின்போது புன்முறுவல் கொஞ்சம் கலந்திருக்கட்டும். அநாவசியமாக சிரித்து,செயற்கையாக நடித்து,வேறுவிதமான பட்டங்களைப் பெற வேண்டாம்.

உரையாடலின்போது அடுத்தவர்களிடம் பரிவு காட்டுங்கள். அவ்வாறு இருக்கும்போது அவர்கள் மகிழ்ச்சியுறுகிறார்கள். மற்றவர்கள் உங்களால் மகிழ்ச்சியுறும்போது, உங்களைப் பற்றிய உங்களின் சுயமதிப்பீடுகள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

மற்றவர்களால் நிராகரிக்கப்படுவோம் என்ற நினைப்பு வந்தாலும் அதை எதிர்கொள்ளுங்கள். சில நேரம் நீங்கள் நிராகரிக்கப்பட்டாலும் அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. அடுத்த முறை உங்களை சீர்படுத்திக்கொள்ள அந்த அனுபவம் உதவும்.

உரையாடலின்போது உங்களைப் பற்றிய சிந்தனையைத் தவிர்த்துவிட்டு உரையாடலில் கவனம் செலுத்துங்கள். பேசும் விதத்திலும் சுவாரசியத்திலும் பேசும் இருவரும் தங்களை மறக்க வேண்டும். உரையாடல்களில் மெல்ல மெல்ல உங்களை வெளிப்படுத்துவதன் மூலமாகக் கூச்சத்தைப் போக்கலாம். இது உளவியலில், படிப்படியான சுய வெளிப்பாடு (Graded Self Exposure) என்று அழைக்கப்படுகிறது.

அடுத்தவர்களிடம் நிறையப் பேசுங்கள். அதற்காக போரடித்துவிட வேண்டாம். அடுத்தவர் கவனத்துடன் கேட்கும் வகையில் உங்கள் உரையாடல் அமைய வேண்டும்.

சமூக நிகழ்வுகளில் பெண்களிடம் பேசுவதற்கு எப்போதும் தயாராக இருங்கள்.

நீங்கள் பேசுவது கேட்கப்பட வேண்டும் என்று எண்ணுவதற்கு முன்பாக,பெண்கள் பேசுவதை முதலில் கேட்கப் பழகிக்கொள்ளுங்கள். கவனத்துடன் கேட்பவர்களின் உரையாடல்கள்தான் மிகவும் கவனிக்கப்படுகின்றன அல்லது ரசிக்கப்படுகின்றன.

உரையாடலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களுடைய பதில்கள் நேர்மையாக இருக்கட்டும்.

இறுதியாக, கூச்சத்துக்கு முக்கியக் காரணம், ஒருவர் கொண்டிருக்கும் தவறான எண்ணங்கள்தான். உண்மைக்கு மாறான கருத்துகளைக் கண்டறியுங்கள். அவற்றை எதிர்கொண்டு சீர்படுத்துங்கள்.

நாளடைவில் கூச்சம் நீங்கள் அறியாத ஒன்றாக மாறிப்போகும்!

‘மாணவர் மனம் நலமா?’

கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் டி.வி. அசோகன் (தொடர்புக்கு: tvasokan@gmail.com). வாசகர்கள் தங்களுடையப் படிப்புத் தொடர்பான உளவியல் சந்தேகங்களைஇப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002,

மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x