Published : 22 Sep 2023 06:18 AM
Last Updated : 22 Sep 2023 06:18 AM

இயக்குநரின் குரல்: ஒரு சாமானியனின் ‘பயோபிக்’!

“கடந்த மாதம், நாங்குநேரியில் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவரையும் அவரது தங்கையையும், உடன் படிக்கும் மாணவர்கள் வீடு தேடிச் சென்று கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஒரு வருடத்துக்கு முன்பு ‘சீரன்’ படத்துக்காக இதேபோன்ற காட்சியை எடுத்தோம்.

இது கற்பனையாக எழுதப்பட்டக் காட்சியல்ல; இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஜேம்ஸ் கார்த்திக்கின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம். மொத்தப் படமுமே அவரது சொந்த வாழ்க்கைதான்” என்று பேசத் தொடங்கினார் விரைவில் ரிலீஸாகவிருக்கும் அப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் துரை கே.முருகன்.

பிரபலங்களின் வாழ்க்கையை ’பயோபிக்’ படமாக எடுப்பது வழக்கம். பிரபலமல்லாத ஒருவரின் வாழ்க்கையை எந்தத் துணிச்சலில் படமாக்க நினைத்தீர்கள்? - பிரபலங்களின் வாழ்க்கையை ‘பயோபிக்’ ஆக எடுப்பதுபோல், சாதாரண மனிதர்களின் வாழ்க்கையையும் ‘பயோபிக்’ ஆக எடுக்கும் பழக்கம் ஹாலிவுட்டில் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உதாரணத்துக்கு, 29 ஆண்டுகளுக்கு முன் ராபர்ட் ஜெமெக்கிஸ் இயக்கத்தில், டாம் ஹேங்க்ஸ் நடித்து, அவருக்குச் சிறந்த நடிகர் உட்பட 6 ஆஸ்கர்களை வென்று கொடுத்த படம் ‘ஃபாரஸ்ட் கம்ப்’.

அதில் ஒரு சாமானிய மனிதனின் அசாதாரண வாழ்க்கை வரலாறுதான் கதை. இயக்குநர் எம்.ராஜேஷிடம் பல படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணி புரிந்தபின் எனது முதல் படத்துக்கான கதையுடன் தயாரிப்பாளரைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது இரண்டு படங்களின் இணைத் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கார்த்திக்கை சந்தித்தேன்.

அவரது பின்புலத்தைத் தெரிந்து கொள்வதற்காக அவரைப் பற்றிக் கேட்டபோது, அவர் தனது சொந்த வாழ்க்கைக் கதையைச் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல, ஒவ்வொரு சம்பவமும் என் மனத்திரையில் உணர்வைத் தூண்டும் காட்சியாக விரிந்தது. இதில் கொஞ்சம் கமர்ஷியல் சேர்த்து எடுத்தால், அப்படியே தமிழ் சினிமாவின் ’ஃபாரஸ்ட் கம்ப்’ ஆகிவிடும் என்று நம்பினேன். அதுதான் நடந்திருக்கிறது.

என்ன கதை? - ஆதிக்க சாதியைச் சேர்ந்த நாயகனின் தந்தை, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். அவர் அந்த ஊரின் காவல் தெய்வக் கோயிலில் சாமியாடி. அதனால், சாமியாடும் உரிமையைப் பறித்துக்கொண்டு அவரை அந்த ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கிறார்கள். மகன் வளர்ந்து, பெரியவனாகி அப்பா இழந்த பாரம்பரிய உரிமையை எப்படி மீட்டெடுக்கிறார், சாதியச் சமூகத்தில் அதற்கு அவர் எவ்வளவு பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது என்பதுதான் கதை.

யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்? - அப்பா - மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் கதாநாயகனாக நடித்துள்ள ஜேம்ஸ் கார்த்திக்குக்கு இது மூன்றாவது படம். இப்படத்தில் அவருக்கு இனியா ஜோடியாக இரண்டு பரிமாணங்களில் நடித்திருக்கிறார். ஆடுகளம் நரேன், சென்ராயன் ஆகியோர் எதிர்மறைக் கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இவர்களுடன் சோனியா அகர்வால், அருந்ததி நாயர் கதையில் திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஜேம்ஸ் கார்த்திக் - இனியா ஆகியோரின் பள்ளிப் பருவத்து பிளாஷ் பேக்கில் ஆஜித்தும் கிரிஷா குரூப்பும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ‘சூப்பர் குட்’ சுப்ரமணி, ‘பரியேறும் பெருமாள்’ வெங்கடேஷ், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி எனக் கடந்த 5 ஆண்டுகளில் பிரபலமான குணச்சித்திர நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x