Published : 15 Sep 2023 06:30 AM
Last Updated : 15 Sep 2023 06:30 AM

சட்டென்று முடிந்துவிட்ட வெற்றிக் கதை | அஞ்சலி - ஜி.மாரிமுத்து (1966 - 2023)

சினிமா வாய்ப்புகள் குறைந்துவிட்ட நடிகர்கள், தொலைக்காட்சி தொடர்களுக்குத் தாவுவதுதான் வழக்கம். ஆனால், முன்னணி நட்சத்திரங்களும் இயக்குநர்களும் தமது திரைப்படங்களில் ஒரு சிறு கதாபாத்திரத்திலாவது இடம்பெறச் செய்யும் அளவுக்கு, தமிழ் சினிமாவில் புகழுடன் இயங்கிக்கொண்டிருந்தபோதே திருச்செல்வம் இயக்கத்தில் ‘எதிர்நீச்சல்’ தொலைக்காட்சி நெடுந்தொடரில் பிரதான எதிர்மறைக் கதாபாத்திரத்தை ஏற்கத் துணிந்தார் மாரிமுத்து. குடும்ப கௌரவத்தையும் குடும்பத்தின் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக எதையும் செய்வது, குடும்பப் பெண்களை ஆண்களுக்கு அடங்கிப்போகவேண்டிய அடிமைகளாகக் கருதி சமையலறைக்குள் பூட்டிவைப்பது என நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளுடன் வாழ்ந்துவரும் குடும்பத் தலைவனைத் தொலைக்காட்சித் திரையில் உலவவிட்டார்.

பொதுவாகத் தொலைக்காட்சித் தொடர்களின் வில்லன்களைக் குடும்பப் பெண்கள் கரித்துக்கொட்டுவது போன்ற நகைச்சுவைக் காட்சிகளைத் திரைப்படங்களில் பார்த்திருப்போம். அந்தச் சித்தரிப்புக்கு முற்றிலும் மாறாக, தன் திரை ஆளுமையாலும் நடிப்பினாலும் ‘ஆதி குணசேகர’னை குடும்பப் பெண்கள் உட்பட அனைவராலும் ரசிக்கப்படும் கதாபாத்திரமாக மாற்றிக் காட்டினார் மாரிமுத்து. குறிப்பாக ’ “இந்தாம்மா ஏய்” என்று அவர் தன் வீட்டுப் பெண்களை அழைக்கும் விதம் புத்தாயிரத் தலைமுறையினரையும் அவருடைய ரசிகர்களாக்கியது.

ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தின் காட்சித் துணுக்குகள், யூடியூப் ‘ஷார்ட்ஸ்’களாகவும் இன்ஸ்டா ‘ரீல்ஸ்’களாகவும் வெளியிடப்பட்டு, ஆயிரக் கணக்கான ‘ஹார்ட்டின்’களையும் ‘கமண்ட்’களையும் அள்ளின. திரைப்பட வில்லன் கதாபாத்திரங்களுக்கும் அவற்றில் நடித்த நடிகர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. தொலைக்காட்சி வில்லன் கதாபாத்திரத்துக்கும் அதில் நடித்த நடிகருக்கும் இவ்வளவு பெரும் புகழ் கிடைத்தது இதுவே முதல் முறை.

இயக்குநராகும் போராட்டம்: ஆதி குணசேகரன் கதாபாத்திரத்துக்குக் கிடைத்த மிகப் பிரம்மாண்டமான வரவேற்பு, அதுவே மாரிமுத்துவின் அடையாளம் என்பது போல் ஆகிவிட்டது. ஆனால், அவர் அது மட்டுமல்ல. தேனி மாவட்டத்தில் பசுமலைத்தேறி என்னும் குக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் மாரிமுத்து. பொறியாளராக வேண்டும் என்கிற ஆசையில் இருந்தவருக்குள் 1985இல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘முதல் மரியாதை’ சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவை விதைத்தது. பாலிடெக்னிக் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, சென்னைக்கு ஓடிவந்து பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகச் சேர முயன்றார்.

பாரதிராஜாவிடம் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அவரிடம் இருந்த தமிழ் மொழித் தேர்ச்சியும் அழகான கையெழுத்தும் பாடலாசிரியர் வைரமுத்துவின் உதவியாளராகும் வாய்ப்பை அவருக்குப் பெற்றுத் தந்தன. இப்படியாக கோடம்பாக்கத்தின் கதவுகள் மாரிமுத்துவுக்குத் திறந்தன. அதையடுத்து ராஜ்கிரண், சீமான், வசந்த், மணி ரத்னம், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராகவும், துணை/இணை இயக்குநராகவும் பணியாற்றினார்.

நீண்ட காத்திருப்புக்கும் போராட்டங்களுக்கும் பிறகு, பிரசன்னா, உதயதாராவை நடிக்க வைத்து மாரிமுத்து இயக்கிய முதல் திரைப்படம் ‘கண்ணும் கண்ணும்’ வணிக வெற்றியைப் பெறவில்லை. அந்தப் படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் நகைச்சுவைப் பகுதி மட்டும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ‘கிணத்தக் கானோம்’ என்கிற காட்சி, வடிவேலுவின் புகழ்பெற்ற முத்திரை நகைச்சுவைக் காட்சிகளில் ஒன்றாக நிலைத்தது. இப்படத்தின் நகைச்சுவைப் பகுதியை எழுதியவர் மாரிமுத்துதான்.

இதன் பயனாக வடிவேலுவை வைத்து ஒரு முழு நீளப் படத்தை இயக்கும் வாய்ப்பு மாரிமுத்துவுக்கு அமைந்தது. ஆனால் அந்தப் படம் தொடக்கநிலையிலேயே கைவிடப்பட்டுவிட்டது. ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ‘புலிவால்’ என்னும் திரைப்படத்தை இயக்கினார். ‘சப்பா குரிஸு’ என்னும் மலையாளத் திரைப்படத்தின் மறு ஆக்கமான இந்தப் படமும் வெற்றியடையவில்லை. இதுவே மாரிமுத்து இயக்கிய கடைசித் திரைப்படமாகவும் ஆனது.

திசைமாறிய திரைப்பயணம்: இடைப்பட்ட காலத்தில் இயக்குநர் மிஸ்கினின் ‘யுத்தம் செய்’ (2011) திரைப்படத்தில் பெரும் பணம் ஈட்டும் பாலியல் குற்ற வலைப்பின்னலின் அங்கமாகச் செயல்படும் காவல்துறை ஆய்வாளராக நடித்திருந்தார் மாரிமுத்து. அந்தப் படத்தில் அவர் தோன்றும் முதல் காட்சியே அவரை ஒரு தேர்ந்த நடிகர் என்பதை உணர வைத்தது.

படத்தின் கதைப்படி மாரிமுத்துவால் ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட ஒரு வழக்கைத் தூசிதட்டும் நாயகன் சேரன், அது குறித்து அவரிடம் விசாரணை நடத்துவார். அதனால் கோபமும் எரிச்சலும் இருந்தாலும் அதை வெளியே காட்ட முடியாது. இதையெல்லாம் உள்ளே பூட்டிவைத்துக்கொண்டு பதில் அளிக்கும் வசன உச்சரிப்பிலும் உடல்மொழியிலும் ஏளனத்தையும் அதிகார மமதையையும் கச்சிதமாக வெளிப்படுத்தியிருப்பார் மாரிமுத்து.

தொடர்ந்து ‘ஜீவா’, ‘கிருமி’, ‘மருது’, ‘கடைக்குட்டி சிங்கம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறப்பாக நடித்திருந்தாலும், 2018இல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ மாரிமுத்துவைத் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக நிலைநிறுத்தியது எனலாம். நெல்லை மண்ணில் இடைநிலைச் சாதியைச் சேர்ந்தவராக, சாதிக் கட்டுப்பாடுகளை மீற முடியாமல், அதே நேரம் சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை குறித்த குற்ற உணர்வு கொண்டவராக, மாரிமுத்துவின் நடிப்பு, அவருக்குப் பரவலான பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது.

அதன் பிறகு நிறைய படங்களில் நடித்தார் மாரிமுத்து. கடந்த ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘விக்ரம்’, கடந்த மாதம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ ஆகிய படங்களிலும் சிறிய கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கும் நடிப்பைத் தந்திருந்தார். எத்தகைய கதாபாத்திரத்தை ஏற்றாலும் அதில் தன் இருப்பை ஆழமாகப் பதிய வைக்கும் வகையிலான நடிப்பைத் தரும் திறமைசாலியாக விளங்கினார்.

கலவையான கருத்தாளர்: மனதில் பட்டக் கருத்துக்களை ஒளிவுமறைவின்றிப் பேசிவிடும் துணிச்சலான சுபாவம், மாரிமுத்து அளித்த நேர்காணல்களில் வெளிப் பட்டது. நடிகர் என்பதைத் தாண்டி, அவர் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமானதற்கு இத்தகைய வெளிப்படையான பேச்சால் கிடைத்த பாராட்டுகளும் விமர்சனங்களும்கூட ஒருவகையில் காரணம் எனலாம்.

கடந்த ஆண்டு, ‘எதிர்நீச்சல்’ தொடரில், திருமணத்தில் மணப்பெண் நடனமாடுவது போன்ற விஷயங்களை அவர் கடுமையாகக் கண்டிப்பது போன்ற காட்சி இடம்பெற்று சமூக ஊடகங்களில் வைரலானது. அது பற்றி அவர் கொடுத்த பேட்டிகளில் அந்தக் காட்சியில் பெண்கள் ‘அடக்க ஒடுக்க’மாக இருக்க வேண்டும் என்று பேசிய வசனங்கள் தன் சொந்தக் கருத்தும்தான் என்றார். இதனால் பெரும் சர்ச்சையை எதிர்கொண்டார்.

சமூக ஊடகங்களில் ‘பூமர் அங்கிள்’ என்பதற்கான சின்னமாக முன்னிறுத்தப்பட்டார். அதே நேரம் கடவுள், மதம், சாதி, ஜாதகம். ஜோதிடம் ஆகியவற்றில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை மீண்டும் மீண்டும் அவர் பதிவுசெய்தார். நவீனத்துவத்துக்கு ஆதரவான கருத்துகளைக் கொண்டவராக வெளிப்பட்டார். தன் மகனுக்குச் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைக்க விரும்புவதாக அறிவித்தார்.

அதே நேரம் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிப்பவர் என்றும் கூறினார். இன்றைய இளைஞர்களுக்கு எந்த விஷயத்திலும் அக்கறையும் அர்ப்பணிப்பும் இல்லை என்று விமர்சித்துவந்தார். இப்படியாக சினிமாப் பிரபலங்கள் பேசத் தயங்கும் கருத்துகளைத் துணிச்சலாகப் பேசினார்.

சில மாதங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் ஜோசியர்கள் முன்னிலையில் ஜோசியத்துக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துகளைக் காத்திரமாக முன்வைத்துப் பேசியது அவருக்கு முற்போக்குத் தரப்பில் பல ஆதரவாளர் களைப் பெற்றுத் தந்தது. அவருடைய மறைவுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மின்விளக்கு உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத குக்கிராமத்தில் பிறந்து, மிகவும் பின் தங்கிய சூழலில் வளர்ந்து, மொழி, எழுத்து, சினிமா ஆகியவற்றின் மீதும் நவீனத்துவத்தின் மீதும் ஈர்ப்புகொண்டு நகரத்துக்கு வந்து போராடி வெற்றிபெற்றுப் புகழ் வெளிச்சத்தில் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி, டப்பிங் பணி செய்துகொண்டிருந்தபோதே மரணமடைந்துள்ளார் மாரிமுத்து, கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு. அவருடைய வாழ்க்கையில் நிறைய பாடங்கள் இருக்கின்றன.

மின்விளக்கு உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத குக்கிராமத்தில் பிறந்து, மிகவும் பின்தங்கிய சூழலில் வளர்ந்து, மொழி, எழுத்து, சினிமா ஆகியவற்றின் மீதும் நவீனத்துவத்தின் மீதும் ஈர்ப்புகொண்டு நகரத்துக்கு வந்து போராடி வெற்றிபெற்றுப் புகழ் வெளிச்சத்தில் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி, டப்பிங் பணி செய்துகொண்டிருந்தபோதே மரணமடைந்துள்ளார் மாரிமுத்து.

- gopalakrishnan.sn@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x