Published : 28 Jul 2014 09:12 AM
Last Updated : 28 Jul 2014 09:12 AM

ஆங்கிலம் அறிவோம்: கொள்கை அல்லது இயக்கம் எப்படி ‘காரணம்’ ஆகும்?

ஆங்கிலத்தில் cause என்றால் காரணம் என்றுதானே அர்த்தம்? அப்படித்தானே. ‘Loss of plenty of blood can cause death’. ‘Stress can cause heart attack’ போன்ற வாக்கியங்களைப் பயன்படுத்துகிறோம்.

Cause என்றால் ஒரு செயல் அல்லது சூழலுக்குக் காரணமாக அமையும் நபர் அல்லது பொருள் எனலாம். ‘The cause of the fire is not clear’ என்பது ஓர் உதாரணம். Cause என்பதற்குக் கிட்டத்தட்ட சமமான வார்த்தைகளாக origin, source, starting point போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

ஒரு நிகழ்வுக்குக் காரணமான சம்பவம், பொருள் அல்லது நபரை cause என்று குறிப்பிடலாம். The major cause of the road accidents is rash driving.

ஒரு குறிப்பிட்ட விதத்தில் நடந்து கொள்வதற்கான காரணத்தையும் cause என்று குறிப்பிடலாம். His exit was cause for happiness in the area என்பதுபோல்.

ஆக, சுற்றிச் சுற்றிக் ‘காரணம்’ என்ற பொருளைச் சுற்றித்தான் cause என்பதன் பொருள் வருகிறது.

வாசகர் ஒருவர் பல வாக்கியங்களை அனுப்பி, அவை ஒவ்வொன்றிலும் ஒரு வார்த்தையை அடிக்கோடிட்டு அதற்கான அர்த்தத்தை விளக்கக் கோரியிருக்கிறார். அவற்றில் ஒன்றான ‘Supporter of the Palestinian cause’ என்பதன் கடைசி வார்த்தையில் வாசகருக்குக் குழப்பம்.

வாசகரின் குழப்பத்திற்குக் காரணம் cause என்பதன் பொதுவான பொருளில் ​Palestinian cause என்பது பயன்படுத்தப்படவில்லையே என்பதாக இருக்க வேண்டும்.

Cause என்பது இங்கு வேறொரு பொருளில் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ஒரு கொள்கை அல்லது இயக்கத்துக்காக அர்ப்பணித்துக்கொண்டு அதைப் பாதுகாக்க முன்வருகிறீர்கள். அந்தக் கொள்கை அல்லது இயக்கத்தை cause எனலாம். வாசக நண்பர் குறிப்பிடும் வாக்கியத்தில் உள்ள cause என்பது இந்த வகைதான்.

புகைப்படங்களின் கீழ் Cuban Cause என்றும் Black Suffrage என்றும் குறிப்பிட்டிருப்பதுகூட இந்தப் பொருளில்தான். (Suffrage என்றால் வாக்குரிமை என்று பொருள்)

சில சமயம் because என்ற வார்த்தையைக்கூட cause என்று சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்கள்.

Poly-யின் பன்முகம்

ஆங்கிலத்தில் சில வார்த்தைகளின் அர்த்தங்களைப் புரிந்துகொண்டால், அவற்றுடன் இணைந்து வரும் பிற வார்த்தைகளையும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அந்த விதத்தில் Poly என்ற வார்த்தையைப் பார்க்கலாம்.

Poly என்றால் ‘பல’ என்று பொருள். Pentagon என்றால் ஆறு பக்கங்கள் கொண்ட உருவம் என்று அர்த்தம். Hexagon என்றால் ஆறு பக்கங்கள். Polygon என்றால்? இப்போது Poly என்றால் பல என்பது நமக்குத்​ தெரியும். எனவே பல பக்கங்கள் கொண்ட உருவம்தான் Polygon என்பதை உங்களால் யூகிக்க முடியும்.

Polytechnic என்றால்? பல தொழில் சார்ந்த கல்விகளைத் தரும் அமைப்பு. Polyclinic என்றால் பலவித வியாதிகளுக்கும் தீர்வளிக்க முயலும் மருத்துவ மையம். Polygamy என்றால் பலதார மணம் என்று அர்த்தம். ​Polyester என்று ஒரு வகைத் துணியைக் குறிப்பிடுகிறோம் அல்லவா, அதற்குப் பலவித (ரசாயனப் பிரிவைச் சேர்ந்த) எஸ்டர்களின் இணைப்பு என்று பொருள்.

Polymath என்றாலும் Polyhistor என்றாலும் ஒரே பொருள்தான் பரவலான அறிவாற்றல் கொண்டவர்.

Apprise - Appraise

Apprise என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? ‘தெரியப்படுத்துதல்’ என்று அர்த்தம். அதாவது Inform என்று பொருள். Apprise this information என்றால் இந்தத் தகவலைத் தெரியப்படுத்து என்று பொருள்.

சிலர் இந்த வார்த்தையை Appraise என்ற வார்த்தையுடன் சேர்த்துக் குழப்பிக்கொள்வதுண்டு. எனவே Appraise என்ற – அதிகப்படியாக ஒரு a நடுவில் சேர்க்கப்பட்ட – வார்த்தைக்கான அர்த்தத்தையும் தெரிந்துகொள்ளலாம். பாராட்டுதல் என்ற அர்த்தம் தரும் Praise என்ற வார்த்தை உள்ளடக்கியிருப்பதால் அதே அர்த்தத்தைத்தான இதுவும் தரும் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. Appraise என்றால் மதிப்பிடுதல் என்று அர்த்தம்.

அதனால்தான் நிறுவனங்களில் ஊழியர்களை மதிப்பிடும் முறையை Appraisal என்று குறிப்பிடுகிறார்கள். ஊழியர்களின் திறமைகளை மதிப்பிடும் Performance Appraisal பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களே? நகைகளை மதிப்பிடுபவரை Jewel Appraiser என்றும், நிலங்களை மதிப்பிடுபவரை Land Appraiser என்றும் குறிப்பிடுவதை நீங்கள் அறிவீர்கள்தானே?

வாசகர் ஒருவர் ‘நானான நானில்லை தாயே’ என்ற வாக்கியத்தை ஆங்கிலத்தில் எப்படி எழுதலாம் என்று கேட்டிருந்தார். ஒரு திரைப்பாடலின் தொடக்க வரி இது. எளிமையாகத்தானே இருக்கிறது என்று தோன்றியது. ஆனால் யோசித்துப் பார்த்தால், அதற்கான கீ​ழே உள்ள இருவித மொழி பெயர்ப்புகளும் உணர்த்தும் அர்த்தங்களுக்கிடையே உள்ள மெல்லிய வேறுபாட்டை உணர முடிகிறதா?

1) O Mother, I Am Not What I Am

2) O Mother, I Am Not As I Was

கொஞ்சம் நேரமும், அதிக ஆர்வமும் இருப்பவர்கள் கீழே உள்ள மொழிபெயர்ப்புகள் எந்தத் திரைப் பாடல்களின் தொ​டக்க வரிகள் என்பதை யோசிக்கலாமே. (இரண்டும் கமலஹாசன் வாயசைத்த பாடல்கள்)

1) If You Focus Only On Stone, God Will Be Invisible.

2) Oh, The Jewel Among Women, Oh The Angel Of Forest, Sing A Song

தொடர்புக்கு:

aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x