Published : 13 Dec 2017 11:55 AM
Last Updated : 13 Dec 2017 11:55 AM

கதை: நரி ருசித்த அப்பம்!

 

மீ

னாட்சி பாட்டி வயலூரில் இட்லி கடை வைத்து நடத்திவந்தார். அவர் சமைக்கும் பலகாரங்கள் மிகவும் சுவையாக இருக்கும். விலையும் குறைவாக இருக்கும். அதனால் பக்கத்து ஊரில் இருந்து கூட இட்லி வாங்கிச் செல்வார்கள். கடையில் எப்பொழுதும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

பாட்டிக்கு அடுப்பு எரிக்க, சுள்ளிகளைக் கொண்டுவந்து தருவது அவரது பேரன் குருபரன்தான். ஆனால் அவர் காய்ச்சலில் படுத்துவிட்டதால், இன்று பாட்டியே காட்டுக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது. மதியச் சாப்பாட்டுக்கு ஆப்பமும் தேங்காய்ப்பாலும் எடுத்துக்கொண்டார்.

ஒரு மரத்தில் தூக்குச் சட்டியை வைத்துவிட்டு, சுள்ளிகளை எடுக்க ஆரம்பித்தார் பாட்டி. அருகில் இருந்த புதருக்குள் குள்ளநரி ஒன்று பசியோடு இருந்தது. வயதாகிவிட்டதால், முன்புபோல் வேட்டையாட முடியவில்லை. பாட்டியின் ஆப்பம், தேங்காய்ப் பால் வாசம் அதன் மூக்கைத் துளைத்தது. சத்தம் இல்லாமல், தூக்குச் சட்டியை எடுத்துக்கொண்டு புதருக்குள் மறைந்துகொண்டது.

ஒரு கட்டு சுள்ளிகளைச் சேகரித்த பாட்டி, சாப்பிட வந்தார். தூக்குச் சட்டியைத் தேடினார்.

“ஐயோ… தூக்குச் சட்டியைக் காணோமே? யார் எடுத்திருப்பாங்க? ஏதாவது விலங்கு தூக்கிக்கொண்டு போயிருக்கலாம். இன்னிக்குப் பட்டினிதான்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, மீண்டும் சுள்ளிகளைச் சேகரிக்க ஆரம்பித்தார் பாட்டி.

வயிறு நிறைய சாப்பிட்டு முடித்தது குள்ளநரி.

“என்ன ஒரு சுவை! அடடா! இவங்க பின்னாடியே போய் வீட்டைக் கண்டுபிடிக்கலாம். தினமும் இட்லியும் ஆப்பமும் சாப்பிடலாம்” என்று முடிவு செய்த குள்ளநரி, பாட்டியைப் பின்தொடர்ந்தது.

வீட்டுக்குச் சென்றதும் கதவைச் சாத்திக்கொண்டார் பாட்டி. குள்ளநரி பக்கத்து வயலில் ஒளிந்துகொண்டது. சிறிது நேரத்தில் கதவு திறந்தது. யாரும் கவனிக்காதபோது வீட்டுக்குள் நுழைந்தது. அங்கிருந்த நெல்குதிரில் ஒளிந்துகொண்டது.

காலையில் இட்லியும் ஆப்பமும் செய்து, ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட்டு குளிக்கச் சென்றார் பாட்டி. அந்த நேரம் நெல்குதிரிலிருந்து வெளியே வந்து, இட்லியையும் ஆப்பத்தையும் திருப்தியாகச் சாப்பிட்டது. பிறகு வயலை நோக்கி ஓடிவிட்டது குள்ளநரி.

இப்படித் தினமும் இரவில் நெல்குதிரில் ஒளிவதும் காலையில் சாப்பிட்டுவிட்டு வயலுக்கு ஓடுவதுமாக இருந்தது.

பாட்டிக்குப் பலகாரங்கள் காணாமல் போவது குறித்து கவலையாக இருந்தது. ”குருபரா, யாராவது நான் போனதுக்கு அப்புறம் வீட்டுக்குள்ளே வந்தாங்களா?” என்று கேட்டார்.

”யாரும் வரலையே! அப்படி வந்தால் என்னைத் தாண்டிதான் சமையல்கட்டுக்குப் போகமுடியும்.”

”சரி, இன்னிக்கு எப்படியும் இதைக் கண்டுபிடிச்சே ஆகணும். நான் வெளியில் போற மாதிரி கிளம்பி, ஒளிந்திருந்து ஜன்னல் வழியா பார்க்கிறேன்” என்றார் பாட்டி.

இது தெரியாத குள்ளநரி, யாரும் இல்லை என்ற மகிழ்ச்சியோடு சமையலறைக்குள் நுழைந்து சாப்பிட ஆரம்பித்தது. அதைப் பார்த்ததும் பாட்டிக்குப் பகீரென்றது. “இது என்ன வீட்டுக்குள்ளேயே குடிவந்துவிட்டது… இதுக்கு ஒரு முடிவு கட்டறேன்” என்று செயலில் இறங்கினார்.

முட்களை உடைத்து நெல்குதிருக்குள்ளே போட்டு வைத்தார். அன்று இரவு குதிருக்குள் குதித்த நரி, வலி தாங்காமல் அலறியது. உடனே சுதாரித்துக்கொண்டது. ‘இப்ப வெளியில் போனால் மாட்டிடுவேன். வலியைப் பொறுத்துக்கொண்டால் நாளை பலகாரங்களைச் சாப்பிட்டுவிட்டுப் போகலாம்’ என்று நினைத்தது குள்ளநரி.

பாட்டிக்கு நரியின் திட்டம் புரிந்தது. மறுநாள் காலை பலகாரங்களைச் சுட்டு முடித்துவிட்டு, தோசைக் கல்லை அடுப்பில் வைத்தார். பக்கத்து அடுப்பில் கொதிக்கும் எண்ணெயை வைத்துவிட்டு, வெளியே கிளம்பினார்.

ஆப்பம் சாப்பிடும் ஆசையில் குள்ளநரி நெல்குதிரிலிருந்து வெளியே வந்தது. கறுப்பாக ஏதோ புது பலகாரம் என்று நினைத்து, தோசைக்கல்லில் வாயை வைத்தது. வாய் புண்ணாகிவிட்டது. உடனே தண்ணீர் என்று நினைத்து கொதிக்கும் எண்ணெயில் வாயை விட்டது. வலி உயிர் போனது. வீட்டை விட்டு வெளியே வந்தது.

வாசலில் குருபரனும் கொல்லையில் பாட்டியும் தடியோடு நிற்பதைப் பார்த்து பயந்துவிட்டது.’இனி ஆப்பமும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்’ என்று நினைத்தபடி பாய்ந்து ஓடியது.

ஓவியங்கள்: பிரபுராம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x