Last Updated : 26 Dec, 2017 12:07 PM

 

Published : 26 Dec 2017 12:07 PM
Last Updated : 26 Dec 2017 12:07 PM

சேதி தெரியுமா? - உலக வங்கியுடன் இந்தியா ஒப்பந்தம்

இந்தியாவின் ‘ஸ்ட்ரைவ்’ (STRIVE) திட்டத்துக்காக 12.5 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 800 கோடி) கடன் வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. மத்திய நிதி அமைச்சகம், உலக வங்கி இடையே இந்த நிதி ஒப்பந்தம் டிசம்பர் 19 அன்று கையெழுத்தானது. இந்த ‘ஸ்ட்ரைவ்’ (Skills Training for Industrial Value Enhancement) திட்டம், இந்தியாவின் தொழில்துறை பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்தும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 12,000 தொழில் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில், இந்தத் திட்டத்தின் மூலம் 300 தொழில் பயிற்சி நிறுவனங்கள் நேரடியாகப் பயன்பெறப் போகின்றன. 2022-ம் ஆண்டு நவம்பரில் இந்தத் திட்டம் நிறைவடைகிறது.

மாணவர்களுக்கு வெளியுறவுக் கொள்கைகள்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்திய வெளியுறவு கொள்கைகளை நாடு முழுவதும் இருக்கும் மாணவர்களிடம் கொண்டுசெல்லும் நோக்கத்தில் ‘SAMEEP’ (Students and MEA Engagement Programme) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டத்துக்காக, வெளியுறவுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் அனைவரும் விடுமுறையில் தாங்கள் படித்த கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். மாணவர்களை நேரடியாகச் சந்தித்து இந்திய வெளியுறவுக் கொள்கைகளைப் பற்றிய தெளிவை ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முன்னெடுத்துள்ளது. தன்னார்வ நோக்கத்தில் செயல்படும் இந்தத் திட்டத்தில் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தங்கள் தனிப்பட்ட அனுபவங்களையும் மாணவர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியா, சுவிட்சர்லாந்து இடையே ஒப்பந்தம்

இந்தியா, சுவிட்சர்லாந்து இடையே கறுப்புப் பணம் தொடர்பான தகவல் பரிமாற்றத்துக்கான ஒப்பந்தம் டிசம்பர் 21 அன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் வரும் ஜனவரி 1 முதல் வரி தொடர்பான தகவல்கள் இருதரப்பு நாடுகளிடையே பகிர்ந்துகொள்ளப்படும் என்று சி.பி.டி.டி. (Central Board of Direct Taxes) தெரிவித்தது. இந்த ஒப்பந்தம் சி.பி.டி.டி. தலைவர் சுஷில் சந்திரா, இந்தியாவுக்கான சுவிஸ் தூதர் அன்ட்ரியாஸ் பாம் இடையே கையெழுத்தானது. 2018-ம் ஆண்டிலிருந்து சேகரிக்கப்படும் வரி தகவல்கள் 2019-ம் ஆண்டு முதல் பகிர்ந்துகொள்ளப்பட இருக்கிறது.

ஜெருசலேம்: ஐ.நா. தீர்மானம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரித்ததை எதிர்த்து ஐ.நா. பொதுச்சபையில் டிசம்பர் 21 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவின் முடிவை எதிர்த்து ஐ.நா.வில் துருக்கி, ஏமென் ஆகிய நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட 128 நாடுகள் ஆதரித்திருந்தன. இஸ்ரேல், கவுதமாலா, தோகோ உள்ளிட்ட 9 நாடுகள் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. 35 நாடுகள் வாக்கெடுப்பைத் தவிர்த்திருந்தன. ஐ.நா.வின் இந்தத் தீர்மானத்தை பாலஸ்தீனத் தலைவர்கள் வரவேற்றனர்.

இடம் பெயர்தலில் முதலிடம்

இடம் பெயர்ந்து அயல்நாடுகளில் வாழ்பவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்று ஐ.நா.வின் இடப்பெயர்வு அறிக்கை -2018 தெரிவித்திருக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த 1.56 கோடிப் பேர் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள் என்று சர்வதேச இடப்பெயர்வு மையம் (International Organisation for Migration) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையின்படி, இந்தியாவைத் தொடர்ந்து மெக்ஸிகோ (2-வது இடம்), ரஷ்யா (3-வது), சீனா (4-வது), வங்கதேசம் (5-வது), பாகிஸ்தான் (6-வது) போன்ற நாடுகள் இடப்பெயர்தலில் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. இந்தியர்கள் அதிக அளவில் வளைகுடா நாடுகளில் (22 சதவீதம் - 35 லட்சம்) வசிக்கிறார்கள் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ரயில் பல்கலைக்கழகம்

குஜராத்தின் வடோதரா மாவட்டத்தில் தேசிய ரயில் போக்குவரத்துப் பல்கலைக்கழகம் (National Rail and Transport University) அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை டிசம்பர் 20 அன்று ஒப்புதல் அளித்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்தத் திட்டத்துக்கான ஒப்புதல் அனைத்தும் 2018 ஏப்ரல் மாதத்துக்குள் வழங்கப்படும் என்று அரசுத் தரப்பு தெரிவித்திருக்கிறது. 2018 ஜூலையில், இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழு விதிகள் 2016-ன் படி, இந்த ரயில் பல்கலைக்கழகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகச் செயல்படவிருக்கிறது. இந்திய ரயில் போக்குவரத்தை நவீனப்படுத்துவது இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

‘ஐ.ஐ.எம்.’ மசோதா நிறைவேற்றம்

இந்திய மேலாண்மைக் கழகத்துக்கு (Indian Institute of Management) முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்குப் பதிலாகப் பட்டப் படிப்புகளை வழங்குவதற்கான அதிகாரத்தை அளிக்கும் மசோதா மாநிலங்களவையில் டிசம்பர் 19 அன்று நிறைவேற்றப்பட்டது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 2017 பிப்ரவரி 9 அன்றுஅறிமுகப்படுத்திய இந்த மசோதா, ஒருமனதாக மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றத்தால், இந்தியாவுக்கு வெளியே ‘ஐ.ஐ.எம்.’ மையங்கள் அமைப்பதற்கான அதிகாரமும் இந்திய மேலாண்மைக் கழகத்துக்குக் கிடைத்திருக்கிறது. இந்த மசோதாவின் நிறைவேற்றத்தால், இந்திய மேலாண்மைக் கழகத்தின் செயல்பாடுகளில் இனி அரசின் தலையீடுகள் இருக்காது.

உலக வர்த்தகர்கள் சந்திப்பு

உலக வர்த்தக அமைப்பைச் சேர்ந்த 40 உறுப்பினர் நாடுகளுக்கான சந்திப்பை இந்தியா 2018 பிப்ரவரியில் ஒருங்கிணைக்கவிருப்பதாக டிசம்பர் 19 அன்று தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். உணவுப் பாதுகாப்பு, முதலீடு வசதிகள், இணைய வணிகத்துக்கான விதிகளை உருவாக்குதல், பாலினச் சமத்துவத்தை ஊக்குவித்தல், மீன்வளத் துறை மீதான மானியத்தைக் குறைத்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்படவிருக்கிறது. அத்துடன், இந்தியாவின் விவசாயத் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x