Last Updated : 29 Dec, 2017 10:48 AM

 

Published : 29 Dec 2017 10:48 AM
Last Updated : 29 Dec 2017 10:48 AM

ஒளிரும் கண்கள் 15: காட்சிகள் ஒளிந்திருக்கும் இடம் கேமராவா?

ழகிய சிற்ப வேலைப்பாடுகள், கோயிலைச் சுற்றி அருமையான புல்தரை, உள்ளே நுழைந்ததும் உடலும் உள்ளமும் இலகுவாகும் தன்மையும் சூழலும் கொண்ட இடம் கங்கைகொண்ட சோழபுரம். பனி விழும் அதிகாலை 6 மணிக்கு அங்கு நிலவும் அமைதியும் குறைந்த ஒளியில் கோபுரம் தென்படும் காட்சியும் அற்புதமானவை!

கோபுரத்துக்குப் பின்னே மாலைச் சூரியன் நகர்ந்ததும், அந்த ஒளியில் சில படங்களை எடுத்துவிட்டுத் திரும்பும்போது எதிர்பாராத கடும் மழை. அவசர அவசரமாக கேமராவை உள்ளே பத்திரப்படுத்திவிட்டு, எங்கும் நகர முடியாமல் நுழைவாயிலில் தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த தகரக் கொட்டகையின் கீழே 15 பேர் நின்றிருந்தோம்.

ஒரு பக்கமாக வீசிய மழைக் காற்று எனது பின்பிறத்தையும் கேமரா பையையும் நனைத்தது. மேலே தகரக் கொட்டகை இடுக்கிலிருந்த ஓட்டையின் வழியே மழைநீர் சொட்ட ஆரம்பித்தது. கால் மணி நேரம் விடாமல் பெய்த மழையின் ஊடே வெயிலடித்து கோபுரத்துக்கு எதிர்த் திசையில் ஒரு பெரிய வானவில் கருமேகங்களுக்கிடையே பூத்திருந்தது. அந்தி மஞ்சள் வெயில் மழை மேகத்தைக் கிழித்துக்கொண்டு அங்கு படர, இதுவரை கங்கைகொண்ட சோழபுரத்தை அப்படிப்பட்ட ஒளியில் நான் பார்த்ததில்லை. ஒரு பிரம்மாண்டத் தைல வண்ண ஓவியம் என் கண் முன்னே தோன்றியது போலிருந்தது!

கேமராவைப் பையிலிருந்து எடுக்க நேரமில்லாமலும் அந்த ஒளியைத் தவறவிடக் கூடாது என்ற வேகத்தில் அலைபேசி கேமராவை எடுத்து அந்தக் காட்சியைப் பதிவுசெய்தேன். படத்தை எடுத்த உடன் மதியை மயக்கிய அந்த ஒளியும் மேகத்துக்குள் தன்னை மறைத்துக்கொண்டது. கேமராவில் எடுத்திருந்தால் இன்னும் தரமான படமாக அமைந்திருக்கும். ஒளிப்படம் எடுக்காமலே தவறவிடுவதைவிடச் சில விநாடிகளுக்குள் மறைந்துபோகக்கூடிய அந்தக் காட்சியை அலைபேசி கேமராவிலாவது பதிவுசெய்தோமே என்ற மகிழ்ச்சி இருந்தது!

இப்படி அவசர, அவசியத்துக்காக, கையடக்கமாக, எளிதாக, விரைவாகப் பதிவுசெய்வதற்கென்றே தரமான அலைபேசி கேமராவை வாங்கினேன். இதில் எவ்வகை ஒளியைப் பதிவுசெய்ய இயலும், எத்தகைய காட்சிகளைப் பதிவுசெய்வதற்கான சாத்தியம் உள்ளது, அசையும் உருவங்கள் - ஓடும் உருவங்களை எந்த அளவுக்குத் துல்லியமாகப் பதிவுசெய்ய இயலும் என்பது போன்ற பரிசோதனை முயற்சிகளைச் செய்துவருகிறேன்.

இதன் சாத்தியங்களைத் தெரிந்துகொண்டால் அந்த எல்லைகளுக்குள் அவசர, அவசியத்துக்குப் படங்களைப் பதிவுசெய்யலாம். இந்த அலைபேசி கேமராவை வாங்கி ஓர் ஆண்டுக்குள் பத்தாயிரக்கணக்கான படங்களுக்கு மேல் எடுத்துவிட்டேன், தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருக்கிறேன்!

18CHVAN_Photographer_selvan_14.jpgந. செல்வன்right

இங்கே இடம்பெற்றுள்ள ஒளிப்படங்கள் அனைத்தும் அலைபேசி கேமராவில் பதிவுசெய்யப்பட்டவை. உன்னிப்பாகப் பார்த்தாலும் கேமரா – அலைபேசி கேமரா படங்களுக்கு இடையிலான வேறுபாட்டைக் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

இதுவரை என்னுடனும் என் படங்களுடனும் பயணித்த உங்கள் அனைவருக்கும் நன்றி.

(நிறைவடைந்தது)
கட்டுரையாளர், ஓவியர் மற்றும்
ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: selvan.natesan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x