Last Updated : 29 Dec, 2017 10:29 AM

 

Published : 29 Dec 2017 10:29 AM
Last Updated : 29 Dec 2017 10:29 AM

ஹாலிவுட் ஜன்னல்: இசைக்கப்படாத காதல்

னிதர்களது மனப் புதிர்களின் ஊடாக வாழ்க்கை வழங்கும் மாற்றங்கள், அந்த வாய்ப்புகளில் பொதிந்திருக்கும் சவால்கள் ஆகிய இரண்டுமே சுவாரசியமானவை. ஆருயிர்க் காதலும் லட்சியக் கனவும் எதிரெதிர் முனைகளில் இருந்து அலைகழிக்க, அவற்றுக்கு இடையே தனக்கான வாழ்க்கையைக் கண்டடைய தடுமாறுபவனின் கதையே ‘ஃபார்எவர் மை கேர்ள்’ திரைப்படம்.

நகரவாசிகளான நாயகனும் நாயகியும் பள்ளிப் பருவம்தொட்டு காதல் வானில் சிறகடிப்பவர்கள். நாயகனுக்கு இன்னொரு காதலியும் உண்டு என்னும் அளவுக்கு அவன் இசையை நேசிக்கிறான். ஒரு கட்டத்தில் பாடகனாகும் அவனது ஆசையே காதலியைப் பிரியவும் காரணமாகிறது. மணமகள் கோலத்தில் அவளைத் தவிக்கவிட்டு, புகழுக்காக ஊரைவிட்டு ஓடுகிறான். சில ஆண்டுகளில் இசையுலகின் சூப்பர்ஸ்டார் ஆகவும் வளர்கிறான்.

8 ஆண்டுகள் கழித்து ஆருயிர் நண்பனின் இறுதிச் சடங்கைக் காரணமாக்கி காலம் அவனைச் சொந்த ஊரில் கொண்டுவந்து நிறுத்துகிறது. அங்கே கைவிட்டு வந்த காதலியையும் அவளது சுட்டிப் பெண் குழந்தையையும் சந்திக்கிறான். பாதியில் பரிதவிக்கவிட்டு வந்த காதலும் காதலியும் அவன் வாழ்க்கையில் நிகழ்த்திய மாற்றம் என்ன, துரத்தும் இசையுலகக் கனவின் சவால்களை அவன் எதிர்கொண்டது எப்படி என்பதை இப்படத்தில் இசையும் காதலுமாய்க் கலந்து சொல்லி இருக்கிறார்கள்.

ஹைதி மெக்லாக்லின் (Heidi McLaughlin) என்பவர் இதே தலைப்பில் எழுதிய நாவலில், திரைக்கதைக்காகச் சில மாற்றங்களைச் செய்து பெதனி ஆஷ்டன் வுல்ஃப் (Bethany Ashton Wolf) என்பவர் ‘ஃபார்எவர் மை கேர்ள்’ படத்தை இயக்கி உள்ளார். அலெக்ஸ் ரோ, ஜெஸ்ஸிகா ரோத், அபி ரைடர் ஃபோர்ட்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

காதல் சூழ் வாழ்வைப் படமாக்குவதில் பெண் இயக்குநர்கள் பார்வையிலான அழகியல் அலாதியானது. குடும்பம், குழந்தை என்று காதலின் மையமாய் அவர்கள் எழுப்பும் சித்திரம் நாடு, மொழி, கலாச்சார எல்லைகளுக்கு அப்பால் ரசனையூட்டுபவை. திரைக்கதைக்காகப் பெயர் பெற்ற பெண் இயக்குநரான பெதனி ஆஷ்டனின் இத்திரைப்படம் ஜனவரி 19 அன்று வெளியாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x