Published : 25 Dec 2017 03:46 PM
Last Updated : 25 Dec 2017 03:46 PM

மொபைல் சந்தையில் கோலோச்சும் டிராகன்

15 ஆண்டுகளுக்கு முன் கிராமத்தில் ஒரு வீட்டில் தொலைபேசி இருந்தாலே ஆச்சர்யமாக இருக்கும். மொத்த தெருவுக்கும் அந்த ஒரு தொலைபேசி இணைப்புதான். ஆனால் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் எளிமையாக எளிமையாக ஒரு வீட்டுக்குள்ளேயே 5 மொபைல் போன்கள், ஒருவரிடம் இரண்டு போன்கள் எனும் நிலைமைக்கு வந்துவிட்டது. அந்த அளவுக்கு தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. சர்வதேச சந்தையை எடுத்துப் பார்த்தால் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவே மிகப் பெரிய மொபைல் சந்தையாக இருக்கிறது. இந்த மொபைல் சந்தையை யார் பயன்படுத்திக் கொள்கிறார்கள்? தற்போது மொபைல் சந்தையில் கோலோச்சி நிற்பது யார்? இந்தியாவுக்கு அதனால் நன்மையா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் ஒரு புள்ளிவிவரம் வெளியாகியிருக்கிறது. அதாவது நடப்பு ஆண்டில் இந்தியாவில் விற்பனையான மொபைல் போன்களில் சீனா தயாரிப்புகள் 49 சதவீத சந்தையை பிடித்துள்ளதாக அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டை விட சீன நிறுவனங்களின் வருமானம் 180 சதவீதம் அதிகமாகியிருக்கிறது. இதை சாதாரண செய்தியாக கடந்து செல்ல முடியாது. ஏனெனில் இந்தியா மிகப் பெரிய நாடு. வளரும் நாடுகளில் மிகப் பெரிய சந்தையாக இந்தியா திகழ்ந்து வருகிறது. இந்த சந்தையில் உள்நாட்டு நிறுவனங்களை அச்சுறுத்தும் வகையில் சீன நிறுவனங்கள் மொபைல் விற்பனை சந்தையை பிடித்திருக்கின்றன.

நடப்பு ஆண்டை பொறுத்தவரை ஜியோமி, லெனோவோ-மோட்டரோலா, ஓப்போ ஆகிய சீன நிறுவனங்கள் மிகச் சிறப்பான விற்பனையை கண்டு வருகின்றன. இதைத் தவிர தென் கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனம் முன்னணியில் இருந்து வருகிறது. ஜியோமி நிறுவனம் மட்டும் இந்திய மொபைல் விற்பனையில் 23.5 சதவீத சந்தையை வைத்திருக்கிறது. சாம்சங் நிறுவனம் 23.5 சதவீத சந்தையை வைத்துள்ளது. இதுதவிர ஓப்போ 7.9 சதவீத சந்தையையும், லெனோவோ 9 சதவீத சந்தையையும் வைத்துள்ளன. இது முந்தைய ஆண்டுகளை விடமிக அதிகம்.

விற்பனை அதிகரிக்க காரணம்?

மொபைல் போன் சந்தையை பொறுத்தவரை குறைவான விலையில் தரமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினால்தான் வெற்றிபெற முடியும். இந்த உத்தியை சரியாக இந்த ஆண்டில் கையில் எடுத்தது ஜியோமி. ரெட்மி நோட் 4, ரெட்மி 4 மற்றும் ரெட்மி 4ஏ என்ற மூன்று மாடல்களை இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. இதில் ரெட்மி நோட் 4-2 ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி நினைவகத் திறனுடன் ரூ.9,999 என்ற விலையில் விற்பனையானது. இந்த ஆண்டில் ஒட்டுமொத்த மொபைல் சந்தையை திருப்பி போட்ட தயாரிப்பு இதுதான். அதுமட்டுமல்லாமல் ரெட்மி 4ஏ மாடலும் விலை குறைவாக இருந்த காரணத்தினால் நடுத்தர மக்களை எளிதாக சென்று சேர்ந்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னால் மொபைல் சந்தையில் முன்னணியில் இருந்த நோக்கியா நிறுவனத்தை கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்குத்தள்ளி தனக்கென முத்திரையை பதித்தது சாம்சங். இதுவரை மிகத் தரமான தயாரிப்புகளை கொடுத்து வந்த சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு தனது தயாரிப்பான நோட் 7 மாடலில் ஏற்பட்ட பேட்டரி கோளாறு காரணமாக கொஞ்சம் தடுமாறியது. ஆனால் புதுப்புது தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தியதும் மாறாக பிரீமியம் மொபைல் சந்தையை கையில் எடுத்ததும் சாம்சங் நிறுவனத்தை முன்னணியில் நிறுத்தியுள்ளது. தற்போது தனது ஆலை விரிவாக்கத்துக்காக இந்தியாவில் ரூ.4,915 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது.

இதுதவிர லெனோவோ, ஓப்போ மற்றும் விவோ நிறுவனங்களும் இந்திய சந்தையை மிக வலுவாக கைப்பற்றி வருகின்றன. தொடந்து முதலீடுகளையும் செய்துவருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் பெற வாய்ப்புள்ளது.

இந்திய நிறுவனங்களின் நிலை

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்து வந்தன. குறிப்பாக மைக்ரோமேக்ஸ், கார்பன் மொபைல்ஸ், லாவா, இண்டெக்ஸ் டெக்னாலஜீஸ் மற்றும் பிற உள்நாட்டு நிறுவனங்கள் இந்திய மொபைல் சந்தையில் 54 சதவீத சந்தையை வைத்திருந்தன. ஆனால் இன்றைக்கு கிட்டத்தட்ட 35 சதவீத சந்தையை இந்த நிறுவனங்கள் இழந்திருக்கின்றன. இதற்குக் காரணம் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தாததும் விற்பனை உத்திகளை நவீன வடிவத்துக்கு (இ-காமர்ஸ்) மாற்றாததும்தான் காரணம்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஜியோமி நிறுவனம் ஆன்லைன் முறையில் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. ஆனால் இந்திய நிறுவனங்கள் அதுபோன்றதொரு முயற்சியை பெரிதாக எடுக்கவில்லை. அதுபோல விளம்பர உத்திகளிலும் சீன நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை விட மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. முக்கியமாக கத்ரீனா கைப் ஜியோமி நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் ரண்வீர் சிங் விவோ நிறுவனத்துக்கும், தீபிகா படுகோனே ஓப்போ நிறுவனத்துக்கும் விளம்பர தூதராக இருந்து வருகின்றனர். ஆனால் இதுபோன்ற பெரிய முயற்சிகளை இந்திய நிறுவனங்கள் செய்ய தவறிவிட்டன. இத்தகைய காரணங்கள்தான் மொபைல் சந்தையை இந்திய நிறு வனங்கள் இழப்பதற்கு காரணமாக இருந்து வருகி றது.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 65 கோடி பேர் மொபைல் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 30 கோடி பேர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் மிகப் பெரிய வாய்ப்புள்ள சந்தையை சீன நிறுவனங்கள் ஆக்கிரமித்திருப்பது இந்தியாவின் தொழில்நுட்பத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது. இந்தியாவில் ஒரு நிறுவனம் கூடவா மிகப் பெரிய மொபைல் தயாரிப்பு நிறுவனமாக உருவாக முடியவில்லை என்ற ஏக்கமும் தொக்கி நிற்பதை தவிர்க்கமுடியவில்லை. திறந்த பொருளாதாரமாக மாறிவிட்ட பிறகு சீன தயாரிப்புகளை நாம் எதிர்ப்பதில் நியாயம் இருக்கமுடியாது. ஆனால் உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள நிறுவனங்களை தொழில் தொடங்க இந்தியாவுக்கு வாருங்கள் என்று தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார். மாறாக இந்தியாவில் இதுபோன்ற துறைகளில் இயங்கும் நிறுவனங்களை ஊக்குவித்து பல்வேறு சலுகைகளை வழங்கினாலே சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலைமை வராது.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x