Published : 24 Dec 2017 11:11 AM
Last Updated : 24 Dec 2017 11:11 AM

பெண்ணுக்கு நீதி 15: புரிந்துகொண்டால் பிரிவு இல்லை

வசந்தத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்த இளைஞன் ஒருவன் ரயில் ஜன்னல் வழியே பார்த்துக் கத்தினான். “அப்பா! இங்கே பாருங்கள். மரங்கள் எல்லாம் வேகமாகப் பின்னால் ஓடுகின்றன”. சற்றுநேரம் கழித்து, “அப்பா, மேகங்கள் எல்லாம் எப்படி ஓடுகின்றன” என்று வாய்கொள்ளாச் சிரிப்புடன் குதூகலித்தான்.

பக்கத்தில் அமர்ந்திருந்த ஓர் இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாபமான முகத்துடன் அவனுடைய அப்பாவிடம் சொன்னார்கள், “ஏன் சார்! இந்தப் பையனை டாக்டரிடம் காட்டுவதுதானே”.

அதற்கு அந்த அப்பா சொன்னார், “டாக்டர் வீட்டில் இருந்துதான் வருகிறோம். இவன் கண்ணில் பார்வையில்லாமல் இருந்தது. இன்றுதான் கண்பார்வை கிடைத்தது”.

அந்தப் பையனுக்கு மனநலக் குறைவு என்பது அந்தத் தம்பதியரின் முன்முடிவு. இப்படித்தான் நம்மில் பலரும் முதல் நோக்கிலேயே ஒரு நபரைப் பற்றியோ ஒரு சம்பவம் குறித்தோ தீர்க்கமாக ஒரு முடிவெடுத்துவிடுகிறோம். குடும்பநல நீதிமன்றங்களின் விசாரணைக்கு வரும் பிரச்சினைகளும் அப்படியே. முதல்நோக்கில் தோன்றும் விஷயங்களுக்கும் விசாரணையின்போது/விசாரணைக்குப் பிறகு வெளிவரும் விஷயங்களுக்கும் இடையில் இமாலய வேறுபாடுகள் இருக்கும்.

நோய்க்கேற்ற மருத்தும்

ஒவ்வொரு வழக்குக்கான காரணமும் அதைத் தீர்க்கும் வகைப்பாடுகளும் வெவ்வேறாகத்தான் இருக்க முடியும் என்பதால்தான் குடும்பநல நிபுணர்கள், உளவியல் ஆலோசகர்கள், மனநல மருத்துவர்கள், ஆற்றுப்படுத்துநர்கள், சமசரத் தீர்வாளர்கள் போன்றவர்கள் உள்ளிட்ட அனைவரின் உதவியையும் நாடுவதற்கு குடும்பநல நீதிபதிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிரது.

வாதத்துக்கு எதிர்வாதம் என்று வாதிடும்போது பிறக்கும் பிடிவாதம், வாழ்க்கை நலனுக்கு விரோதமாக முடியுமே தவிர, ஆதரவாக இருக்க முடியாது. பொதுவான நீதிமன்றங்களில் கடைப்பிடிக்கப்படும் முறை, சாகசமான நடைமுறைகளைக் கொண்ட நீண்டதொரு பயணமாக இருக்கிறது. ஆனால், குடும்பநல நீதிமன்றத்திலோ சாவகாசமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதாவது, சம்பந்தப்பட்டவர்கள் நேருக்கு நேராகவோ நிபுணர்கள் மூலமாகவோ சமரசத் தீர்வர்கள் துணையுடனோ பகிரங்கமாக அல்லாமல் தனிப்பட்ட முறையில் அவர்களுக்குத் தேவையான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். தீர்வுகள் அவர்கள் மீது திணிக்கப்படுவதற்குப் பதிலாக அவர்கள் தாங்களாகவே தீர்வுகளைத் தேர்வுசெய்து அதை ஏற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. மேல்முறையீடு இல்லாமல், பண இழப்பு இல்லாமல், காலநேர விரயம் இல்லாமல், மனக்கசப்பு இல்லாமல், நீதிமன்ற கட்டணம் இல்லாமல், இசைந்த தீர்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். இதைத்தான் நீதியரசர் ஆர்.வி.ரவீந்திரன் இப்படிக் குறிப்பிட்டார்:

“எல்லா நோய்களுக்கும் அறுவை சிகிச்சை தேவையில்லை. நீதிமன்றத்தில் நீதிபதியின் தீர்ப்பு அறுவைசிகிச்சை போன்றது. சமரசம் போன்ற மருந்துகளால் குணமாகாத வழக்குகள் மட்டுமே, தீர்ப்பு எனும் அறுவைசிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.”

சமரசமே சிறந்த தீர்வு

நீதிமன்ற நடைமுறைகள் ஒரு யுத்தத்தைப் போன்றவை. ஒரு தரப்புக்கு மட்டுமே வெற்றி கிடைக்கும். ஆனால், சமரசம் என்பது சரித்திரத்தில் நாம் கண்ட சராசரி போர்க்களங்களைவிடச் சற்றே வேறுபட்டது. இங்கே வெற்றிக்கனியை இருதரப்புகளும் பகிர்ந்துகொள்ள முடியும். இதற்கு இணை சொல்வதென்றால் ஆப்பிரிக்க மண்ணில் ‘உபுண்டு’ என்றொரு தத்துவத்தைக் கூறலாம்.

இந்த தத்துவம் சொல்வதென்னவென்றால், ஆப்பிரிக்க மண்ணை ஆய்வு செய்யப்போன அயல்நாட்டு அறிஞர்கள், அங்கே கறுப்பினக் குழந்தைகளைக் கண்டார்கள். அவர்களிடம் நெருங்கிப் பழக எண்ணிய அவர்கள், குழந்தைகளைக் கூப்பிட்டார்கள். தூரத்தில் வைத்திருந்த ஒரு சாக்லேட் பெட்டியைச் சுட்டிக்காட்டினார்கள். அந்தக் குழந்தைகள் அனைவரும் அந்த சாக்லேட் பெட்டி வைக்கப்பட்டிருக்கும் இடம் நோக்கி வேகமாக ஓடிவர வேண்டும் என்றும், முதலில் வரும் குழந்தைக்கு அந்த சாக்லேட் சொந்தம் என்றும் விரல்களாலும் சைகைகளாலும் உணர்த்தினார்கள்.

அதற்கு ஒப்புக்கொண்டதுபோல வரிசையில் வந்து நின்ற அந்தக் குழந்தைகள், விசில் அடித்ததும் வேகமாக ஓடவில்லை. ஆச்சரியம் என்னவென்றால் ஒருவர் கையை அடுத்தவர் பிடித்துக்கொண்டு மெதுவாக நடந்து சென்று அந்த சாக்லெட் பெட்டி இருந்த இடத்தைத் தொட்டனர். பின்னர், அந்த சாக்லெட்டுகளை மெதுவாகப் பிரித்து அனைவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். ‘ஏன் ஓடி வரவில்லை’ என்று கேட்டதற்கு, அவர்கள் கோரஸாகச் சொன்ன பதில் ‘உபுண்டு’. உபுண்டு என்றால் ஜுலு மொழியில் ‘மனிதம்’ என்று அர்த்தம்.

மாற்றுமுறைத் தீர்வுகளான சமரசம் போன்றவை பெண்கள் தங்கள் வாழ்க்கைப் பாதையில் எதிர்ப்படும் சட்டப் பிரச்சினைகளைச் செலவுகள் அற்ற முறையில் குறைந்த காலத்தில் தீர்த்துக்கொள்ள வழிவகை செய்கின்றன.

நாட்டுப் பிரச்சினையை அகிம்சை முறையில் கத்தியின்றி ரத்தமின்றி தீர்க்க முடியும் என்று நிரூபித்த காந்தியாரின் தேசத்தில் அதேவிதமான அகிம்சைத் தத்துவத்தையொத்த சட்டமுறையான சமரசத் தீர்வு முறையே குடும்ப வழக்குகளுக்கு ஏற்றது. இதனால் குடும்பநல வழக்குகளில் தாமதம் என்பது தவிர்க்கப்படுகிறது. நீயின்றி நான் இல்லை என்று வாழ்ந்த நெருக்கமான உறவு, நீ யாரோ நான் யாரோ என்ற நிலையை நெருங்கும்போது, எல்லையற்ற கோபம், வேதனை, விரக்தி ஆகியவற்றோடு சேர்ந்து வினைபுரிய ஆரம்பித்துவிடுகிறது. பெரும்பாலும் தம்பதியரின் வீண் பிடிவாதமும் புரிந்துகொள்ளாத தன்மையும் எதிர்த்தரப்பினரைப் பழிவாங்கும் உணர்ச்சியும்தான், வழக்குகள் எப்போதுமே தொடர்கதையாகவே இருக்கக் காரணமாகிவிடுகின்றன.

(பாதைகள் விசாலமாகும்)
கட்டுரையாளர், முனைவர், நீதியரசர்
தொடர்புக்கு:judvimala@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x