Last Updated : 19 Dec, 2017 10:46 AM

 

Published : 19 Dec 2017 10:46 AM
Last Updated : 19 Dec 2017 10:46 AM

விடைபெறும் 2017: மாநில நிகழ்வுகள்

இந்த ஆண்டு மாநில அளவில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பு:

ஜல்லிக்கட்டை வென்றெடுத்த இளைஞர் போராட்டம்!

மிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டி, எருது விடுதல் உள்ளிட்டவற்றுக்கு உச்ச நீதிமன்றம் 2014-ல் தடை விதித்தது. அதன் பிறகு இரண்டாண்டுகளாக ஜல்லிக்கட்டை நடத்த விவசாயச் சங்கங்கள் கூட்டமைப்பு, பல்வேறு சமூக அமைப்புகள் குரல் கொடுத்துவந்தன. ஆனாலும், 2017-லும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை அடுத்து ‘வாடிவாசல் திறக்கும்வரை வீடு வாசல் செல்ல மாட்டோம்’ என்று தமிழக இளைஞர்கள் களமிறங்கினர்.

அரசியல் கட்சித் தலைமைகளின் முனைப்புகள் ஏதுமின்றி, குறிப்பிடத்தக்க தலைமை அடையாளங்கள் ஏதுமின்றித் தன்னிச்சையாக எழுந்தது இப்போராட்டம். சமூக இணையதளங்களின் வழியாக ஒருங்கிணைந்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் பெருந்திரளாகப் போராட்டத்தில் இறங்கியதால் ஊக்கம் பெற்றுப் பொதுமக்களும் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கில் திரண்டு போராடினர்.

ஜனவரி 16-ம் தேதி அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்தில் சிலர் கைதுசெய்யப்பட்டதை அடுத்து அவர்களை விடுதலை செய்யக் கோரியும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், ஜனவரி 17-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் அறவழிப் போராட்டத்தில் இறங்கினர். பிறகு மதுரை தமுக்கம் மைதானம், கோவை வ.உ.சி. மைதானம், திண்டுக்கல், திருச்சி, சேலம், வேலூர், புதுச்சேரி எனத் தமிழகம் முழுவதும் ஆறு நாட்களுக்கும் மேலாக போராட்டம் களம் கண்டது. இந்நிலையில், ஜனவரி 21-ம் தேதி தடையை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டம் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டு வாடி வாசல் திறக்கப்பட்டது.

எப்படியாவது இடைத்தேர்தல்

சென்னை ராதாகிருஷ்ணன் நகரில் (ஆர்.கே. நகர்) ஏப்ரல் 12 அன்று இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், பணப் பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தொடர்பாகச் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு டிசம்பர் 21 அன்று மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இம்முறை 131 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில் நடிகர் விஷால், தீபா உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 73 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அத்தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில் டிசம்பர் 11 அன்று 1,788 போலி வாக்காளர்கள் இருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 59 பேர் போட்டியிடுகின்றனர்.

துயரைச் சொன்ன துணிகரப் போராட்டம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மார்ச் மாதம் தொடங்கி 100 நாட்களுக்கும் மேலாகத் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். விவசாயக் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திய அவர்கள் தங்களுடைய துயரத்தை வெளிப்படுத்த இறந்த விவசாயிகளின் மண்டை ஓடுகளை வைத்தும் எலி, பாம்பு கறியை உண்டும் போராட்ட உத்திகளை முன்னெடுத்தார்கள். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த எதிர்வினையும் இல்லை.

2,200 ஆண்டுகள் பழமையான நாகரிகம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் 2,200 ஆண்டுகள் பழைமையானவை. அங்கே கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 72 மண்பாண்ட ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இருக்கின்றன. இதில் இயனன், உதிரன், வேந்தன், சாத்தன் போன்ற தமிழ்ப் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன என்று மாநிலங்களவையில் ஜூலை 27-ம் தேதி அறிவிக்கப்பட்டது. கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பொருட்களைக் கார்பன் காலக்கணிப்பு முறையில் அமெரிக்காவின் ‘பீட்டா அனலிட்டிக்’ (Beta Analytic) நிறுவனம் ஆய்வுசெய்தது.

வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் சில வருடங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட இரண்டாயிரம் அடிக்கு ஆழ்துளைக் கிணறு தோண்டி நிலத்தடியில் எரிபொருள் இருப்பதை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) கண்டுபிடித்தது. அதை அடுத்து, இந்திய அளவில் இயற்கை எரிவாயு எடுக்க ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது. நெடுவாசல், நன்னிலம், நரிமனம் உட்பட இந்தியா முழுவதும் 31 இடங்களில் இயற்கை எரிவாயு எடுக்க அந்நிறுவனங்களுக்குப் பிப்ரவரி 15 அன்று ஒப்புதல் அளித்தது.

ஆனால், இயற்கை எரிவாயுவான ஹைட்ரோகார்பன் எடுத்தால் அப்பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள், விவசாயம் பாதிக்கப்படும், நிலத்தடி நீரைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும் என்று நெடுவாசல், நல்லண்டார்கொல்லை, வடகாடு, கோட்டைக்காடு ஆகிய பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துப் பிப்ரவரி 16-ம் தேதி போராட்டத்தைத் தொடங்கினர். மத்திய, மாநில அரசுகள் இத்திட்டம் கைவிடப்படும் என்று உறுதியளித்தபோது 22 நாட்களுக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால், மார்ச் 27-ம் தேதி மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முழுவீச்சில் ஹைட்ரோ கார்பன் எடுக்கத் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கியது. இதனால் தீவிரமான இரண்டாம் கட்ட போராட்டத்தில் ஏப்ரல் 21-ம் தேதி முதல் நெடுவாசல் நாடியம்மன் கோயில் அருகே தொடர்ந்து 174 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை ஆதரித்த மாணவி வளர்மதி, மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பேராசிரியர் ஜெயராமன் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். சமுக அமைப்புகளின் தொடர் முயற்சியால் அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் இன்றுவரை ஹைட்ரோகார்பன் திட்டம் கைவிடப்படவில்லை.

தேசியப் பேரிடரை ஏற்படுத்திய புயல்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களை நவம்பர் மாதம் உலுக்கி எடுத்த பெருமழையை அடுத்து நவம்பர் 29-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தைப் பேரிடராகத் தாக்கியது ஒக்கி புயல். புயலில் சிக்கிய அம்மாவட்டத்தைச் சேர்ந்த 582 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர் என்றும், 4 ஆயிரம் ஹெக்டர் விவசாயப் பயிர், மரங்கள் சேதம் அடைந்துள்ளன என்றும், அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆனால், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான கடலோடிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. காணாமல்போன மீனவர்கள் மற்றும் இறந்த மீனவர்கள் குறித்துத் தலைமைச் செயலாளர், மீன்வளத்துறை அமைச்சர், துணை முதல்வர், முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முரண்பட்ட அறிக்கைகளைத் தந்துகொண்டிருக்கின்றனர். இதனால் இன்னல்களுக்கு உள்ளான மக்களை மீட்க ‘தேசியப் பேரிடர்’ மாவட்டமாகக் கன்னியாகுமரியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும், மீட்புப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்றும் பொதுமக்களும், எதிர்க் கட்சியினரும் வலியுறுத்திவருகின்றனர்.

2017 final logo -1அச்சத்தில் ஆழ்த்திய டெங்கு காய்ச்சல்!

ஏடிஸ் கொசுக்களால் பரப்பப்படும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தமிழகத்தில் 2010-ம் ஆண்டிலிருந்து இருக்கிறது. சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில்தான் இதன் தாக்கம் அதிகமாக இருந்துவருகிறது. அதிலும் 2012-ல் மட்டும் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். ஆனால், இந்த அண்டு 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று இருப்பதாகவும், 45 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் பொதுச் சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கிறது. இந்நிலையில், ஏடிஸ் கொசுப்புழுக்கள் உருவாவதற்குக் காரணமான சூழ்நிலையை ஏற்படுத்தியதாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ரூ. 3 கோடிவரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

> இசை பாரம்பரியக் கலாச்சாரத்துக்காக யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னை இடம்பிடித்தது. மொத்தம் 180 நகரங்கள் படைப்பாக்க வரிசையில் உள்ளன.

> தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் செப்டம்பர் மாதம் தேர்வுசெய்யப்பட்டவர்களில் கடலூரைச் சேர்ந்த தாட்சாயணி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பிரபா மோகன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த நஜ்ரியா ஆகிய மூன்று திருநங்கைகளும் காவலர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்கெனவே திருநங்கை பிரத்திகா யாஷினி சென்னை சூளைமேடு துணை ஆய்வாளராக அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார்.

> தமிழ்நாட்டின் 13-வது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 16-ம் தேதி பதவியேற்றார்

> தமிழக ஆளுநராக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பன்வாரி லால் புரோகித் அக்டோபர் 6-ம் தேதி பதவியேற்றார்.

> அபாயகரமான ரஷ்ய ஆன்லைன் ‘புளூ வேல் சாலன்ஞ்’ விளையாட்டு முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை செப்டம்பர் 4-ம்தேதி அறிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x