Last Updated : 12 Nov, 2017 01:09 PM

 

Published : 12 Nov 2017 01:09 PM
Last Updated : 12 Nov 2017 01:09 PM

கண்ணீரும் புன்னகையும்: கடம் மீனாட்சி அம்மா மறைவு

தென்னிந்தியாவின் தொன்மையான தாளவாத்தியமான ‘கடம்’ உருவாக்குபவரும் சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவருமான கே. மீனாட்சி நவம்பர் 6 அன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காலமானார். அவருக்கு வயது 75. இவர் 15 வயதிலிருந்து இசைக் கச்சேரிகளுக்கான ‘கடம்’ பானைகள் தயாரிப்பில் ஈடுபட்டுவந்தார். கடம் தயாரிப்பதில் புகழ்பெற்ற மானாமதுரையில் கடைசியாக இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரே குடும்பம் இவருடையது. அனுபவமும் தேர்ச்சியும் ஈடுபாடும் கடம் கருவிகளை உருவாக்குவதற்கு அடிப்படை. மீனாட்சி அம்மா, தன் மகன் ரமேஷின் துணையுடன் கடம் கருவிகளைச் செய்துவந்தார். தற்போது அவருடைய பேரன் ஹரிஹரன் இந்தப் பரம்பரைத் தொழிலைத் தொடர்கிறார். கடம் வித்வான் விக்கு விநாயக்ராம், உமாசங்கர், கிரிதர் உடுப்பா, சிவன்யா ராஜகோபால் ஆகியோர் மீனாட்சியிடம் தொடர்ந்து கடம் வாங்கும் வாடிக்கையாளர்கள். திரை இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டவர்களுக்குக் கடம் கருவிகளைத் தந்தவர் இவர்.

இணைய புகார்ப் பெட்டி

அரசு, அரசு சாரா நிறுவனங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல் புகார்களைக் கொடுக்க மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ‘ஷி-பாக்ஸ்’ இணைய புகார் சேவையைத் தொடங்கியுள்ளது. இது, அமைச்சகத்தின் இணையத்தளத்திலிருந்து செயல்படும். இந்தியாவில் எந்தப் பணியிடத்தில் ஒரு பெண் பாதிக்கப்பட்டாலும் அவர் இந்த சேவையில் புகார் செய்யலாம். நாள்தோறும் வரும் புகார்களை இந்த அமைச்சகத்தின் ஒரு பிரிவிலிருந்து கவனிப்பார்கள் என்று அமைச்சர் மேனகா காந்தி உறுதியளித்துள்ளார்.

பெரியவர்களான பிறகும் புகார் செய்யலாம்

குழந்தைகள் பலாத்காரத்தைக் குற்றப் புகாராகப் பதிவுசெய்ய, தற்போதிருக்கும் நடைமுறைகளைத் தளர்த்த நாடாளுமன்றத்தில் பேசவுள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். குழந்தைப் பருவத்தில் பலாத்காரத்துக்கு உள்ளானவர்கள் பெரியவர்களான பின்னரும் காவல்துறையில் புகார் செய்வதற்கான பிரச்சாரத்தை சேஞ்ச் இணையதளம் சார்பாக ஆய்வாளர் பூர்ணிமா கோவிந்தராஜுலு தொடங்கியதன் பின்னணியில் கனிமொழி இது குறித்துப் பேசியுள்ளார். குழந்தைப் பருவத்தில் இதுபோன்ற பிரச்சினைகளை அவர்களால் புரிந்துகொள்ளவோ சரியானபடி புகார் சொல்லவோ முடியாது என்பதைத் தனது சொந்த அனுபவம் மூலம் உணர்ந்ததாகவும் பூர்ணிமா கூறியுள்ளார். பாக்ஸோ (Pocso) சட்டத்தின்படி 2012-க்குப் பிறகு நடந்த கொடுமைகளை மட்டுமே புகாராக கொடுக்க முடியும் என்ற நிபந்தனை உள்ளது. அதற்கு முன் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட நிவாரணத்தைப் பெற முடியாது என்ற நிலைமை உள்ளது. அத்துடன் பாலியல் துன்புறுத்தல், வல்லுறவு ஆகியவற்றை நிரூபிப்பதற்கு இந்தச் சட்டத்தில் உள்ள விதிமுறைகளும் நடைமுறை சாத்தியமில்லாதது என்றும் சொல்லப்படுகிறது.

குத்துச்சண்டைக்குக் காண்டாமிருக இலச்சினை

உலக இளையோர் குத்துச்சண்டை மகளிர் போட்டிக்காக அசாமின் புகழ்பெற்ற ஒற்றைக்கொம்பு பெண் காண்டாமிருகமான குப்பியின் படம் இலச்சினையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய குத்துச்சண்டைக் கழகத்தின் தலைவர் அஜய் சிங், அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனாவால் ஆகியோர் இந்த இலச்சினையையும் பிரத்யேகப் பாட்டையும் வெளியிட்டுள்ளனர். இந்தப் போட்டி நவம்பர் 19 முதல் 26 வரை நடக்கவுள்ளது. குப்பி காண்டாமிருக இலச்சினை இந்தியப் பெண்களின் வீரத்தை வெளிப்படுத்துவதாக முதலமைச்சர் கூறியுள்ளார். இந்தப் போட்டிக்கான பிரத்யேக பாடலான ‘Make some noise’ ஏற்கெனவே பிரபலம் அடைந்துள்ளது. 38 நாடுகளைச் சேர்ந்த 200 குத்துச்சண்டை வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்குபெறவுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x