Last Updated : 25 Nov, 2017 10:55 AM

 

Published : 25 Nov 2017 10:55 AM
Last Updated : 25 Nov 2017 10:55 AM

நவீனம் திளைக்கும் படிக்கட்டுகள்

டிக்கட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவமைக்கும் போக்கு இப்போது அதிகரித்திருக்கிறது. படிக்கட்டுகளின் பயன்பாடு என்பது ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்துக்கு அழைத்துச் செல்வதோடு இப்போது நின்றுவிடுவதில்லை. வீட்டின் தோற்றத்தை அழகாக்குவதற்கும் பொருட்களைச் சேகரித்துவைப்பதற்கும் படிக்கட்டுகள் பயன்படுகின்றன. அதனால், வீட்டை வடிவமைக்கும்போதே படிக்கட்டுகளைத் தனித்துவத்துடன் வடிவமைப்பதற்காகப் பலரும் மெனக்கெடுவதற்குத் தயாராக இருக்கின்றனர். வீட்டை நவீனத்துடன் வடிவமைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மிதக்கும் படிக்கட்டுகளைத் (Floating staircases) தேர்ந்தெடுப்பது பொருத்தமாக இருக்கும். இந்தப் படிக்கட்டுகளைத் தேர்ந்தெடுக்கும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

25chgow_staircase1

பளிங்குக் கற்கள், உலோகம், மரம், கண்ணாடி போன்ற பொருட்களில் மிதக்கும் படிக்கட்டுகளை வடிவமைக்கலாம். செலவைக் குறைக்க நினைப்பவர்கள் பளிங்குக் கற்களாலான படிக்கட்டுகளைத் தவிர்த்துவிடுவது சிறந்தது.

இந்த மிதக்கும் படிக்கட்டுகள், வீட்டுக்குள் காற்றோட்டத்தையும் வெளிச்சத்தையும் அதிகரிப்பதற்குப் பயன்படும்.

விளக்கு அலங்காரத்தை விரும்புபவர்கள், விளக்குகள் பொருத்தும் வசதியுடன் இருக்கும் மிதக்கும் படிக்கட்டுகளை வடிவமைக்கலாம். உங்கள் ரசனைக்கும் வீட்டின் வடிவமைப்புக்கும் பொருந்தும் வண்ண விளக்குகளை இந்தப் படிக்கட்டுகளில் பொருத்தலாம். இந்த அலங்காரத்தால் வீட்டின் சுவர், படிக்கட்டுகள் இரண்டுமே வண்ணங்களால் மிளிறும்.

ஆடம்பரத் தோற்றத்தை விரும்புபவர்கள் கண்ணாடியிலான மிதக்கும் படிக்கட்டுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்தப் படிக்கட்டுகளை அமைப்பதற்குக் குறைவான இடமே தேவைப்படும். இந்தப் படிக்கட்டுகள் வீட்டுக்குப் பிரகாசமான தோற்றத்தைக் கொடுக்கக்கூடியவை.

சுவரின் ஓரத்தில் பிடிமானம் அமைக்கப்பட்டு, இந்த மிதக்கும் படிக்கட்டுகள் வடிவமைக்கப்படுகின்றன. இதனால், சுவரில் படிக்கட்டுகள் மிதப்பதைப் போன்ற தோற்றம் உருவாகிறது. ஆனால், இந்தப் படிக்கட்டுகளைக் கட்டிடக் கலைஞரின் வழிகாட்டுதலும் தலையீடும் இல்லாமல் வடிவமைக்கக் கூடாது. இந்தப் படிக்கட்டுகளைச் சுவரின் தரத்தைப் பரிசோதித்த பிறகு அமைப்பதுதான் சிறந்தது.

இந்த மிதக்கும் படிக்கட்டுகளை வரவேற்பறையில் அமைக்கும்போது, வெளிப்படைத்தன்மையைக் கொண்ட பொருட்களைப் பயன்படுத்தலாம். கடினமான வடிவமைப்புகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.

இந்த மிதக்கும் படிக்கட்டுகளில் நேரான படிக்கட்டுகள், வளைவுப் படிக்கட்டுகள், சுழல் படிக்கட்டுகள், பெட்டி படிக்கட்டுகள் போன்ற பலவிதமான வடிவமைப்புகள் பிரபலமாக இருக்கின்றன. இந்த வடிவமைப்புகளில் வீட்டின் தோற்றத்துக்கும் உங்கள் ரசனைக்கும் பொருந்தும் வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

குழந்தைகளும் வயதானவர்களும் இருக்கும் வீட்டில் இந்த மிதக்கும் படிக்கட்டுகளைக் கைப்பிடியுடன்தான் அமைக்க வேண்டும். அப்போதுதான், குழந்தைகளும் வயதானவர்களும் இந்தப் படிக்கட்டுகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும். இந்த மிதக்கும் படிக்கட்டுகளில் உலோகத்தலான கைப்பிடியை அமைப்பது பொருத்தமானதாக இருக்கும்.

25chgow_staircase3right

ஜியோமெட்ரிக்’ படிக்கட்டுகள், ரிப்பன் படிக்கட்டுகள் எனப் பல வித்தியாசமான வடிவங்களிலும் இந்த மிதக்கும் படிக்கட்டுகளை அமைக்கலாம். இருபுறங்களிலும் கம்பிகளுடன் அமைக்கப்படும் மிதக்கும் படிக்கட்டுகள் இப்போது பிரபலமாக இருப்பதாக உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வீட்டின் சுவரின் வண்ணத்துக்குப் பொருந்தும்படி படிக்கட்டுகளின் வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இது வீட்டுக்குச் சுவாரசியமான தோற்றத்தைக் கொடுக்கும். உயரத்தைக் கண்டு அஞ்சுபவர்கள், இந்த மிதக்கும் படிக்கட்டுகளைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x