Published : 01 Apr 2014 11:28 am

Updated : 01 Apr 2014 12:15 pm

 

Published : 01 Apr 2014 11:28 AM
Last Updated : 01 Apr 2014 12:15 PM

எடையைக் குறைக்கவும் சர்க்கரையைத் தடுக்கவும் என்ன வழி?

என் வயது 21. எனது உயரம் 158 செ.மீ., எடை 76 கிலோ. என் எடையைக் குறைக்க ஆசைப்படுகிறேன். என் அப்பாவுக்குக் கடந்த 23 வருடங்களாகச் சர்க்கரை நோய் இருக்கிறது. எனக்குச் சர்க்கரை நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். அதற்கு என் எடையைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?

- எலிசா பொன்ஸி, மின்னஞ்சல் மூலம்


நீரிழிவு நோய் வராமல் தடுக்க அல்லது தள்ளிப் போட உடல் எடையை நீங்கள் கண்டிப்பாகக் குறைத்தே ஆகவேண்டும். தடாலடியாக அது நடக்காது. உணவும் உடற்பயிற்சியும், யோகாசனப் பயிற்சியும்தான் உடல் எடையைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்க முடியும்.

கொல்லிமலையில் அல்லது அமேசான் காட்டில் இருந்து ஒரு அரிய மூலிகை வந்து ஸீரோ சைஸ் இடுப்பைத் தந்துவிடாதா எனக் கனவு காண்பது புத்திசாலித்தனமல்ல.

உணவில் பால், தயிர், இனிப்பு, எண்ணெயில் பொரித்தவை ஆகியவற்றை அறவே தவிர்த்து விடுங்கள். நிறைய மோர் குடியுங்கள். பட்டை தீட்டிய தானியங்களைச் சாப்பிடாதீர்கள். அது அரிசி கோதுமையாக இருந்தாலும் சரி, தினை, வரகு, சாமை எனச் சிறுதானியங்களாக இருந்தாலும் சரி. பட்டை தீட்டித் தவிட்டை நீக்கிவிட்டால் பலனும் குறையும். உடலில் வேகமாகச் சர்க்கரையைச் சேர்க்கத் தொடங்கும். பழுப்பு அரிசி, வண்ணப் பாரம்பரிய அரிசிகள், பட்டை தீட்டாத தினை, வரகு சாமையில் மதிய உணவு அமையட்டும்.

புளிக்குப் பதிலாகக் குடம்புளி பயன்படுத்துங்கள். குடம்புளியின் hydroxy citric acid சத்து உடல் எடையைக் குறைக்க உதவுவதாக மருத்துவ அறிவியல் சொல்கிறது.

சிறிய வெங்காயம் சேர்த்த கம்பங்கூழ், கொள்ளு ரசம், கோகம் பழம் எனும் குடம்புளி ஜூஸ், வெந்தய-கறிவேப்பிலை பொடி இவையெல்லாம் எடை குறைக்க உதவும் உணவு வகைகள்.

தீவிர நடைப் பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் dynamic yoga எனும் ஆசனப் பயிற்சித் திட்டத்தையும் கடைப்பிடித்தால் எதிர்பார்த்தபடி எடை குறையும். உணவுக் கட்டுப்பாட்டு, உடற்பயிற்சி காரணமாக உடல் களைப்படையாது உற்சாகமாக இருக்க யோகாசனங்கள் கைகொடுக்கும்.

எனது மகளுக்கு 13 வயது. அவளுக்கு 9 வயதிலிருந்தே முடி நரைக்கத் தொடங்கிவிட்டது. இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? எனக்கு இது மிகப் பெரிய கவலையாக இருக்கிறது.

- வி.விஜய்குமார், மின்னஞ்சல் மூலம்

இளநரைக்குப் பித்தமும் ஒரு காரணம். பலருக்கும் இது இயல்பாக மாறிவிடும். அதிகம் அச்சப்படத் தேவையில்லை. அதிக அளவில் இருந்தால், கரிசலாங்கண்ணி சேர்த்த கூந்தல் தைலத்தை அருகில் உள்ள மருத்துவரை அணுகிப் பெற்று, பயன்படுத்துங்கள்.

உணவில் இரும்புச்சத்தும், கூந்தல் அதிகம் செழித்து வளர அவசியமான கனிம உயிர்ச்சத்தும் நிறைந்த கீரைகள், பெரு நெல்லிக்காய், அத்திப்பழம், மாதுளை, காய்ந்த திராட்சை, கம்பு ஆகியவற்றைத் தினசரி சாப்பிடக் கொடுத்து வாருங்கள். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கத்தை இந்தக் கோடையில் இருந்து தொடங்குங்கள்.

தலைக்கு எண்ணெய் தேய்ப்பதை அவமானமாகவும், நாகரிகமற்ற செயலாகவும் நவீன நாகரிகம் மாற்றிவிட்டது. அதுவும் தலையில் பிசுபிசுப்பு இருப்பது ஏதோ நோய் போல, அழுக்கு போல, ஒழுங்கீனம் போல நவீன வாழ்வு சித்தரித்து விட்டது. பிசுபிசுப்பற்ற எண்ணெயின் சந்தைக்காக, எண்ணெய்க்குப் பெயர் மாற்றி கண்டிஷனர் என்று விற்கப்படும் பொருளின் வணிகத்துக்காக, தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பழக்கம் வழக்கொழிந்துவருகிறது.

எண்ணெய் தேய்ப்பது கூந்தலுக்கு மட்டுமல்ல. கூந்தல் மயிர்க்கால்களின் வழியாக மூளை முதலான உள்ளுறுப்புகளின் பித்தம் போக்கும் நலவாழ்வுப் பயிற்சியும் சிகிச்சையும் என்பதை உணர்ந்து சொன்னது, தமிழ் மருத்துவ வாழ்க்கைமுறை. அதை மீட்டெடுக்க வேண்டியது நம் கடமை.

உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குத் தீர்வு

பிரபல மருத்துவரும் எழுத்தாளருமான கு. சிவராமன், உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட அனைத்து கேள்விகளையும் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு உரிய பதில் கிடைக்கும்.

மின்னஞ்சல்: nalamvaazha@kslmedia.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002


மருத்துவர் கு.சிவராமன்கேள்வி பதில்கள்நலம் நலமறிய ஆவல்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

weekly-updates

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x