Published : 14 Nov 2017 11:40 AM
Last Updated : 14 Nov 2017 11:40 AM

வேலை வேண்டுமா? - மத்திய அரசு ஜுனியர் இன்ஜினீயர் பணி

த்திய அரசின் பொதுப்பணித் துறை, மத்திய நீர்வள ஆணையம், அஞ்சல் துறை, மத்திய நீர் மின் ஆராய்ச்சி நிலையம், தேசியத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் உள்பட மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் ஜுனியர் இன்ஜினீயர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமன முறையில் அவை நிரப்பப்பட உள்ளன.

யாருக்கு வாய்ப்பு?

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் பொறியியல் ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. சம்பந்தப்பட்ட பிரிவில் பொறியியல் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். சில பிரிவுகளுக்குப் பொறியியல் பட்டப் படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். வயதுவரம்பைப் பொறுத்தவரையில், குறிப்பிட்ட துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்ப 27, 30, 32 என வெவ்வேறு வயதுவரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எனினும், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்குக் கூடுதலாக 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு உண்டு. தற்போது பி.சி., எம்.பி.சி. வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஓ.பி.சி. தகுதிச் சான்று பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் முதல் தாள் அப்ஜெக்டிவ் முறையில் அமைந்திருக்கும். இத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். இதில் ரீசனிங், பொது அறிவு, பொறியியல் ஆகியவற்றில் இருந்து 200 கேள்விகள் இடம்பெறும். முதல் தாளில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டத் தேர்வான இரண்டாம் தாள் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இரண்டாம் தாள், விரிவாக விடை அளிக்கும்வகையில் (written) இருக்கும். உரிய கல்வித் தகுதியும் வயதும் உடையவர்கள் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தைப் (www.ssc.nic.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன்வழியில் தாள் 1 தேர்வு பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. 2-ம் தாள் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x