Published : 06 Nov 2017 11:22 AM
Last Updated : 06 Nov 2017 11:22 AM

`ஸ்மார்ட்’டாக இருப்பது எப்படி?

ஞ்சாப் மாநிலம் பெர்சாபூர் நகரைச் சேர்ந்தவர் விபின் சர்மா. பார்தி ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர். இவரது மொபைல் எண்ணுக்கு 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துள்ளார். ரீசார்ஜ் செய்த அடுத்த நாள் அவரது மொபைல் இருப்பிலிருந்து ரூ.3 பிடித்தம் செய்துள்ளனர். அவர் வேறு எந்த எண்ணுக்கும் பேசாமல் இருந்த போதிலும் கூட இதேபோல் அடுத்த 12 நாட்களுக்கு ரூ.36-ஐ பிடித்தம் செய்துள்ளனர். வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு போன் செய்து ஏன் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்று கேட்கையில், கிரிக்கெட் அலர்ட் சேவை இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அவரை கேட்காமலேயே இந்த சேவையை ஆக்டிவேட் செய்திருக்கின்றனர். இதனையடுத்து மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு மையத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மீது விபின் சர்மா வழக்கு தொடர்ந்தார். வாடிக்கையாளரின் விருப்பத்தைக் கேட்காமல் இந்த சேவையை வழங்கி மோசடி செய்த குற்றத்துக்காக பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால் பல சந்தர்ப்பங்களில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளரை மிரட்டும் நடவடிக்கைகளும் வக்கீல் நோட்டீஸ்களை அனுப்பும் நடைமுறைகளையும் செய்து வருகின்றன. பெயர் வெளியிட விரும்பாத ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவர், அந்நிறுவனத்தின் வழக்கறிஞரிடமிருந்து வக்கீல் நோட்டீஸ் வந்துள்ளதாக தெரிவித்தார். இண்டர்நெட் டேட்டா சேவைக்கு பணம் செலுத்தாத காரணத்தினால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாடிக்கையாளர் தவணையைச் செலுத்தவில்லையென்றால் அவர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கையை நிறுவனங்கள் எடுக்கின்றன. இப்படி இரண்டு பக்கமும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால் வாடிக்கையாளர்கள் மீதான இந்த நடவடிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை நிறுவனங்கள் மேற்கொள்வதில்லை. அதேபோல பெறாத சேவைக்கு பணம் பிடித்தம் செய்யும்போது நிறுவனங்கள் மீது நடவடிக்கையை தொடங்குவது குறித்து வாடிக்கையாளர்களுக்கும் தெரிவதில்லை.

என்னென்ன நடைமுறைகள்?

சேவை தொடர்பான பிரச்சினைகள் எப்பொழுதெல்லாம் வருகிறதோ அப்போது தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு போன் செய்து உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். நீங்கள் புகாரை பதிவு செய்து போது உங்களுக்கு வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து `தனி வழக்குப் பதிவு எண்’ வழங்கப்படும். இ-மெயில் மூலமாகவும் நீங்கள் புகாரை தெரிவிக்க முடியும். டிராய் இணையதள தகவல்படி, புகார் தெரிவித்துள்ள மூன்று நாட்களுக்கு அந்த புகாரின் நிலையை வாடிக்கையாளரிடம் தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவிக்க வேண்டும். தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பதில் குறித்து வாடிக்கையாளர் திருப்தி அடையவில்லையெனில் அவர் மேல்முறையீட்டு ஆணையத்தை அணுக முடியும்.

ஆவணங்கள் முக்கியம்

தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்தோடு பிரச்சினை என்கிற போது பெரும்பாலும் நாம் வாடிக்கையாளர் சேவை மையத்துடன் போனில் மட்டுமே உரையாடுவோம். அதுபோன்ற சமயங்களில் நமது ஸ்மார்ட்போனில் ரெக்கார்டு செய்யும் வசதியுள்ள அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் நமது தொடர் உரையாடல் ஆவணமாக இருக்கும். பல நீதிமன்றங்கள் உரையாடல் ரெக்கார்டிங்கை ஏற்றுக் கொள்ளக்கூடிய சாட்சியாக கருதுகின்றன. அனைத்து உரையாடலையும் நீங்கள் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க முடியும். ஆனால் உரையாடல் தெளிவாகக் கேட்க வேண்டும்.

தொலைத்தொடர்பு நிறுவனத்திலிருந்து வக்கீல் நோட்டீஸ் வரும் பொழுது அதை அப்படியே விட்டுவிடாதீர்கள். உடனடியாக சட்டரீதியாக உங்களது பதிலை தெரிவியுங்கள். உங்களது தவணை தொகையை செலுத்த முடியாததற்கான காரணங்களை கூறி பதில் தெரிவியுங்கள். அனைத்து விவரங்களையும் தெரிவிப்பதன் மூலம் சட்ட ரீதியாக நீங்கள் தயாராக உள்ளீர்கள் என்பதை நிறுவனத்துக்கு மறைமுகமாக தெரிவிக்க முடியும். ஒருவேளை உரிமையியல் நீதிமன்றத்தில் நிறுவனம் வழக்கு தொடர்ந்தால் வழக்கறிஞர் மூலம் நீங்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். ஆனால் பெரும்பாலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வக்கீல் நோட்டீஸ் மூலமாகவே பிரச்சினையை அணுகுகின்றன.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும்பாலும் தவணைத் தொகையை தங்களது முகவர்கள் மூலம் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்கின்றன. ரசீதை பெற்றுக் கொண்டால் மட்டுமே முகவர்களிடம் பணம் செலுத்துங்கள். பின்வரும் காலங்களில் பிரச்சினை நேரும் போது முக்கியமான ஆவணமாக இதைக் காண்பிக்க முடியும். தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் நாம் எச்சரிக்கையோடும் விவரத்தோடும் இருந்தால் பல பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும்.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x