Last Updated : 19 Nov, 2017 11:34 AM

 

Published : 19 Nov 2017 11:34 AM
Last Updated : 19 Nov 2017 11:34 AM

இல்லம் சங்கீதம் 10: சந்தோஷம் தேடும் வாழ்வு

காற்றில் அலைக்கழியும்

வண்ணத்துப் பூச்சிகள்

காலில் காட்டைத் தூக்கிக்கொண்டு

அலைகின்றன.

- தேவதச்சன்

“சந்தோஷமா இருக்கியா..?” தெருவைக் கடக்கையில் யாரோ யாரிடமோ விசாரித்தது காதில் விழுந்தது. அந்தக் கேள்வியுடன் விஜி யோசித்துக்கொண்டே வீட்டுக்கு வந்தாள். கண்ணாடி பார்த்து நெற்றி வியர்வையை ஒற்றும்போது தனது பிம்பத்திடம் அதே கேள்வியைக் கேட்டுப் பார்த்தாள்.

கவனிப்பாரற்ற குமுறல்கள்

அப்போது அவளுக்குப் பத்தோ பதினொன்றோ வயதிருக்கும். திருமணமாகி கணவன் ஊரில் வசித்த கோமதி அத்தை பல காலம் கழித்து ஊர் திரும்பியிருந்தார். தெருவின் பழகிய வீட்டுப் பெண்களைச் சந்திக்கச் சிறுமியான விஜியை அழைத்துக்கொண்டு வலம்வந்தார். அப்போதுதான் அந்தக் கேள்வி விஜிக்குப் பரிச்சயமானது. “நல்லா இருக்கியா?” என்பதான பொதுவான நல விசாரிப்புகளுக்கு அப்பால் வயதில் மூத்த சில பெண்கள் குரல் தாழ்த்தி, அத்தையின் தலைவருடி, “சந்தோஷமா இருக்கியா கோமதி?” என்று கேட்பார்கள். அவர்களுக்கெல்லாம் வெட்கம் மின்ன சின்னச் சிரிப்பை மட்டுமே கோமதி பதிலாகத் தருவார். அந்தக் கிழவிகள் தண்டட்டிகள் துள்ள அத்தையின் முகத்தை விரல்களால் வழித்து திருஷ்டி கழிப்பார்கள். ஆண்டுகள் சென்ற பிறகே அந்தக் கேள்விக்கான முழுமையான அர்த்தம் விஜிக்கு விளங்கியது.

விஜிக்கு மாப்பிள்ளை தேடும்போது சரவணனைப் பரிந்துரைத்தவர் கோமதி அத்தைதான். அந்த அத்தையைத் திருமணத்துக்குப் பின்னர் ஒன்றிரண்டுமுறை சந்தித்ததோடு சரி. அதன் பின்னரான குடும்ப நெருக்கடியில் வடஇந்திய நகரம் ஒன்றுக்குக் குடிபெயர்ந்த கோமதியை அவளும் மறந்திருந்தாள். விஜிக்கு இப்போது ஏனோ அவரைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அவரைச் சந்திக்க நேர்ந்தால் அவர், “சந்தோஷமா இருக்கியா?” எனக் கேட்டுவைத்தால் என்ன சொல்வதென யோசித்தாள். வெளியே வெயில் மறைந்து மழைக்கான அறிகுறிகள் கூடின. ஜன்னலில் ஊடுருவி தேகம் தழுவிய ஈரக்காற்று விஜிக்கு இதம் சேர்க்கவில்லை. உடலும் உள்ளமும் தொடர்ந்து குமுறிக்கொண்டிருந்தன.

எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்

சரவணன், சராசரியான கணவன். சாப்பாடு, தொழில், உறக்கம் என அவனது அன்றாட வாழ்க்கை கழியும். மனைவியின் எதிர்பார்ப்புகளை அவன் பொருட்டாகவே கருதியதில்லை. விஜியும் திருமணமான புதிதில் அதிகம் எதிர்பார்க்கவில்லை. குழந்தைகள் பிறந்து அவர்களைப் பராமரிப்பதில் ஆண்டுகள் உருண்டோடின. இப்போது குழந்தைகள் பள்ளிக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர். தனிமையும் வெறுமையும் சுயத்தைத் தரிசிக்கவும் விசாரிக்கவும் வாய்ப்பளித்தன. விஜியை அழுத்திக்கிடந்த இல்லற எதிர்பார்ப்புகள் மெதுவாகத் தலையெடுத்தன.

சரவணனின் சாப்பாட்டு வழக்கம் வித்தியாசமானது. மதியம் போலவே இரவிலும் சோறு வடித்து சாம்பார், ரசம், மோருடன் கூட்டுப் பொரியல் தயாராக இருக்க வேண்டும். சாப்பிட ஆரம்பித்துவிட்டால் ஒரு இயந்திரமாகவே மாறிவிடுவான். ருசித்து ரசித்து உண்பதோ, நன்றாக இருக்கிறது-இல்லை என்று சொல்வதோ மனைவி சாப்பிட்டாளா என்ற விசாரிப்போ குறைந்தபட்சம் பரிவான பார்வையோகூடக் கிடைக்காது. இரவில் கணவன் நெருங்கும்போதெல்லாம் இப்படி அவன் சாப்பாட்டை அள்ளித் தெளித்துச் சடங்காக விழுங்குவதும் எச்சில் கையை உதறி விலகுவதுமே விஜிக்கு நினைவிலாடும்.

திணிக்கப்படும் சமரசங்கள்

மனைவி என்பவள் தன்னைப் போன்றே சதையும் ரத்தமுமாக இருப்பவள். அவளுக்குப் பிடித்தது, பிடிக்காதது என்று சிலது இருக்கும். அன்றைய தினம் அவளுக்கு விருப்பமோ விருப்பமின்மையோ இருக்கலாம். இப்படி எதையும் அந்தக் கணவன் யோசித்ததில்லை. தினமும் அவனது இயந்திரகதியிலான அணுகுமுறை தொடர்ந்தபோது விஜிக்கு வெறுத்துப்போனது. குடும்ப நலன் கருதி இயல்பாக இருக்க முயன்றாள். சரவணனைப் பொறுத்தவரை இவையெல்லாம் அவனது சுபாவம் என்று ஒதுக்க முடியாது.

வெளியிடங்களிலும் நண்பர்களுடன் இருக்கையிலும் கலகலப்பாகவே இருப்பான். வீடு, மனைவி என்றால் மட்டும் அப்படியொரு அலட்சியம் தொற்றிக்கொள்ளும். ஆணின் இந்த அலட்சியத்துடன் பெண்ணின் மீது திணிக்கப்படும் தியாக சமரசங்களும் அவளது பித்யேக விருப்பங்களைப் பொசுக்குகின்றன. ‘குடும்பத் தலைவி’, ‘குழந்தைகளின் தாய்’, ‘கணவனுக்கான பணிவிடை ஒன்றே பிறப்பின் பாக்கியம்’ என்பன போன்ற பிம்பங்கள் வாயிலாக சமரசங்கள் திணிக்கப்படுகின்றன.

சரவணனைப் பொறுத்தவரை இந்த அலட்சியங்களும் கற்பித சமரசங்களும் பெரும் குற்றங்கள் அல்ல. ஆனால், நாளாவட்டத்தில் குடும்பத்தின் அச்சாணியை அவை அசைத்துப் பார்த்துவிடும் என்று அறியாதிருந்தான்.

தடுமாற்றம் தேவையில்லை

அன்றைக்கு சற்று முன்னதாகவே சரவணன் வீடு திரும்பினான். குழந்தைகளின் வீட்டுப் பாடத்தில் மும்முரமாக இருந்த விஜி, சரவணன் உடன் வந்த பெண்மணியைத் தாமதமாகவே ஏறிட்டாள். நரைத்த ‘பாப்’ தலை அடையாளத்தை மறைத்தாலும் அந்தச் சிரிக்கும் கண்கள் காட்டிக்கொடுத்தன. ‘அட கோமதி அத்தை!’ பல வருட இடைவெளிக்குப் பின்னர் மலேசியாவிலிருந்து திரும்பிய அத்தை எப்படியோ விசாரித்து, சரவணனைப் பிடித்து வீடு வந்திருக்கிறார்.

பரஸ்பர விசாரிப்புகளுக்கு நடுவே விஜியின் முகத்தைப் படிக்க முயன்ற அத்தை, பின்னர் அந்தக் கேள்வியை சரவணனிடம் கேட்டாள். “விஜியைச் சந்தோஷமா வச்சிருக்கியா சரவணா?”. இந்தக் கேள்விக்குக் கோமதியின் தோளில் சாய்ந்து கண்ணீர் விடும் மனைவியை புரிந்தும் புரியாமல் பார்த்தான் சரவணன். அவனைப் பொருட்படுத்தாத விஜி விம்மலாக வெடித்தாள்.

இல்லறத்தின் இனிமையான ஓட்டத்துக்கு இத்தனை தடுமாற்றங்கள் தேவையில்லை. இந்த உதாரணத்தில் கண்ட அலட்சியம் வேறு சில இல்லங்களில் மனைவியால் கணவனுக்கு இழைக்கப்படுவதாகக்கூட இருக்கலாம். பொதுவிலான இனிமைக்கும் இணக்கத்துக்கும் ஆணோ பெண்ணோ தத்தம் பீடங்களை விட்டுச் சற்றே இறங்கிவருவதும், அடிப்படையான புரிதலுமே போதும். விஜி - சரவணன் போன்ற தம்பதிகள் தங்கள் இல்லறத்தைப் புதுப்பிக்க, உயிர்ப்போடு வைத்திருக்க என்ன செய்யலாம் என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

(மெல்லிசை ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x