Last Updated : 01 Nov, 2017 10:56 AM

 

Published : 01 Nov 2017 10:56 AM
Last Updated : 01 Nov 2017 10:56 AM

பூமி என்னும் சொர்க்கம் 17: கார்பன் டை ஆக்சைடு கெட்ட வாயுவா?

கா

ர்பன் டை ஆக்சைடு வாயு (கரியமில வாயு) பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. நாம் வெளியே விடும் மூச்சுக் காற்றில் கார்பன் டை ஆக்சைடு வாயு உள்ளது. நாம் எதை எரித்தாலும் கார்பன் டை ஆக்சைடு தோன்றுகிறது.

தொழிற்சாலைகளின் புகைக் கூண்டிலிருந்து கார்பன் டை ஆக்சைடு வெளிப்படுகிறது. கார், பஸ். டூ வீலர்கள், லாரி, விமானம், கப்பல் என இன்ஜின் உள்ள எல்லா வாகனங்களிலிருந்தும் கார்பன் டை ஆக்சைடு வெளிப்படுகிறது.

செடி, கொடி, மரம் என எல்லாத் தாவரங்களும் பகல் நேரங்களில் கார்பன் டை ஆக்சைடு வாயுவை எடுத்துக்கொள்கின்றன. காற்று மண்டலத்தில் சேரும் கார்பன் டை ஆக்சைடு வாயுவில் கணிசமான பகுதி இப்படித் தாவரங்கள் மூலம் அகற்றப்படுகிறது. கடல் வாழ் தாவரங்களும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை எடுத்துக்கொள்கின்றன. கடல்களிலும் ஓரளவு கார்பன் டை ஆக்சைடு வாயு சேருகிறது.

ஆனால் மனிதர்கள் மின்சார உற்பத்திக்காக நிலக்கரியை நிறைய எரிக்கிறார்கள். பெட்ரோல், டீசல் உபயோகம் அதிகரிப்பதாலும் நிறைய கார்பன் டை ஆக்சைடு காற்று மண்டலத்தில் சேருகிறது.

சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் தொழில் புரட்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து காற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு சேர்மானம் அதிகரிக்கத் தொடங்கியது. தொழில் புரட்சிக்கு முன்னர் காற்று மண்டலத்தில் இருந்த கார்பன் டை ஆக்சைடு அளவுடன் ஒப்பிட்டால் இப்போது அது கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதன் விளைவு என்ன?

கார்பன் டை ஆக்சைடுக்கு ஒரு குணம் உண்டு. அந்த வாயுவும் மேலும் சில வாயுக்களும் வானில் மிக உயரத்துக்குச் சென்றதும் பூமிக்கு மேலே ஒரு கண்ணாடிப் பலகை அமைத்ததுபோலச் செயல்பட ஆரம்பிக்கின்றன. அதாவது பூமி ஒரேயடியாகக் குளிர்ந்து போய்விடாதபடி அவை தடுக்கின்றன. இது பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக நடந்துவருகிறது.

பகலில் பூமியில் ஒரு பாதியானது சூரியனிடமிருந்து வெப்பத்தைப் பெறுகிறது. இரவு வந்ததும் பகலில் பெற்ற வெப்பம் முழுவதும் விண்வெளிக்குச் சென்று விடுமேயானால் பூமியில் அனைவரும் குளிரில் விறைத்து இறந்து போய் விடுவார்கள். அப்படி ஏற்படாமல் கார்பன் டை ஆக்சைடு வாயுவும் வேறு சில வாயுக்களும் தடுக்கின்றன.

ஆனால் காற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு சேர்மானம் அதிகரித்துக் கொண்டே போனால் பூமியின் சராசரி வெப்பம் மெல்ல உயர்ந்து கொண்டே போகும். ஏற்கெனவே அப்படி ஏற்பட்டு வருவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இப்போதைய நிலைமை தொடருமானால் பூமியில் பருவ நிலைமைகள் விபரீத அளவுக்கு மாறிவிடும். வட, தென் துருவங்களில் உள்ள பெரும் பனிக்கட்டிப் பாளங்கள் உருக ஆரம்பிக்கும். இதனால் கடல் மட்டம் உயர ஆரம்பிக்கும். தீவு நாடுகள் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளது. கடலோர நகரங்களுக்கும் ஆபத்து ஏற்படலாம்.

புயல்கள் அதிகரிக்கும். தேவையில்லாத காலங்களில் பேய் மழை பெய்யும். வேறிடங்களில் வறட்சி அதிகரிக்கும். இப்படியாகப் பருவ நிலைமைகள் கண்டபடி மாறினால் உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும். உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படும். கலவரங்கள் மூளும். பட்டினிச் சாவுகள் ஏற்படும்.

பூமியின் சராசரி வெப்பம் அதிகரிக்காமல் தடுக்க வேண்டுமானால் அதாவது கார்பன் டை ஆக்சைடு சேர்மானம் மேலும் அதிகரிக்காமல் தடுக்க வேண்டுமானால் நிலக்கரி உபயோகம், பெட்ரோல், டீசல் உபயோகம் ஆகியவற்றை உலகம் தழுவிய அளவில் குறைத்துக் கொண்டாக வேண்டும்.

இதில் அரசுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதால் உலக நாடுகள் கடந்த பல ஆண்டுகளாக அவ்வப்போது மாநாடு நடத்தி வந்தன. 2015-ம் ஆண்டில் பாரிஸ் நகரில் கூடி உலக அளவிலான உடன்பாட்டில் கையெழுத்திட்டன.

நிலக்கரிக்குப் பதில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரத்தைத் தயாரிப்பதை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டது. காற்று மூலமும் மின்சாரம் உற்பத்தி, பெட்ரோல், டீசலுக்குப் பதில் மின்சார மூலம் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்ட்து. இந்த நோக்கில்தான் ஆலைகள், வீடுகள் ஆகியவற்றின் கூரைகளில் சூரிய மின் உற்பத்தி தகடுகள் பொருத்தப்படுகின்றன. மின்சார கார்களும் பஸ்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

பாரிஸ் உடன்பாடு தங்களைப் பாதிக்கும் என்று கூறி அமெரிக்கா இப்போது அதிலிருந்து விலக முற்பட்டுள்ளது. ஆனாலும் இந்தியா உட்பட உலகின் மற்ற நாடுகள் பாரிஸ் உடன்பாட்டை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளன.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: nramadurai@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x