Published : 26 Nov 2017 11:34 AM
Last Updated : 26 Nov 2017 11:34 AM

பாரம்பரியம்: வரலாற்றைக் காக்கும் மாணவிகள்

ரலாற்றைத் தெரிந்துகொண்டர்கள் காலம் காலமாய் அதைப் பிறருக்குக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழகம் தொடர்பான வாய்மொழி வரலாறு, செவிவழிச் செய்திகள், ஊர்களின் பெயர்க் காரணம், வரலாற்றுப் பின்னணி, நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் பாடல்கள், கதைகள், கலை, பண்பாடு ஆகியவற்றை மாணவர்கள் வழியாகப் பாதுகாக்க முடியும். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது.

அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றும் வே. ராஜகுரு 2010-ல் இந்த மன்றத்தைத் தொடங்கினார். இந்த மன்றத்தில் ஈடுபாடு காட்டிவரும் மாணவிகள் கல்வெட்டுகளைப் படிக்கவும் படியெடுக்கவும் ஓலைச்சுவடிகளைப் படிக்கவும் பழங்கால நாணயங்களைச் சேகரிக்கவும் பங்காற்றிவருகின்றனர்.

கோயில் திருடனைப் பிடித்த வீரன்

திருப்புல்லாணி கோயிலில் பலமுறை கொள்ளையடித்துச் சென்றும் மன்னரால் பிடிக்க முடியாத திருடனை தனி ஆளாய்ப் பிடித்துக் கொன்ற முத்துவீரப்பன் என்னும் வீரனைப் பாராட்டி சேதுபதி மன்னர் திருப்புல்லாணி கோயிலில் சிலை வைத்துள்ளார். இந்த வரலாற்றைத் தெரிந்துகொண்டு அவரது சிலையைத் தேடிக் கண்டுபிடித்து ஆவணப்படுத்தியுள்ளார் இப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி அபிநயா. இதே மாணவி தனது குலதெய்வமான பள்ளபச்சேரி கோவிந்தன் கோயிலில் உள்ள ஐந்து கழுமரங்கள் பற்றிய வரலாற்றையும் வழிபடும் முறைகளையும் நேரில் ஆய்வுசெய்து கட்டுரையாக எழுதியுள்ளார்.

புத்தகமாகும் ஓலைச்சுவடிகள்

மருத்துவர்களாய் இருந்த தன் முன்னோர்கள் பயன்படுத்திய மருத்துவ ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து, வாசித்துப் புத்தகமாகக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் விசாலி என்னும் மாணவி. இவர் நூறு ஆண்டுகளுக்கு முன்பே கருமாந்திரக் காரியத்துக்கு ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம் இருந்ததைக் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளார்.

தலையில்லாச் சிற்ப ஆய்வு

ராமநாதபுரம் அருகே பொக்கனாரேந்தல் அய்யனார் கோயிலில் தலை உடைந்த சமண தீர்த்தங்கரர் சிற்பம், சங்கஞ்செடி என்னும் மூலிகைச் செடி ஆகியவற்றை மாணவி அபர்ணா ஆய்வு செய்துவருகிறார். தாதனேந்தல் கிராமத்தில் இருந்த பல நூறு ஆண்டுகள் பழமையான மிஸ்வாக் எனும் உகாய் மரம், ராஜராஜசோழன் ஈழக்காசு, கும்மி, ஒயிலாட்டப் பாடல்களை மாணவி சினேகா ஆவணப்படுத்தியுள்ளார்.

ஊருணியை உருவாக்கியவர்

திருப்புல்லாணியில் உள்ள சேதுபதிகளின் அரண்மனையுடன் சேர்த்துச் சொல்லப்படும் பல வாய்மொழிக் கதைகளில் ஒன்றான ஆமினாவின் கதையை நஸ்ரியா பானு என்னும் மாணவி ஆவணப்படுத்தியுள்ளார். மதுவாசுகி என்னும் மாணவி திருப்புல்லாணி அருகே உள்ள பஞ்சந்தாங்கியில் உள்ள கட்டையத்தேவன் ஊருணி, கட்டையத்தேவர் என்னும் குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதியால் உருவாக்கப்பட்டதைக் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளார்.

தொடர் தேடலில் மாணவர்கள்

தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மாணவிகள் திருப்புல்லாணி, புல்லுகுடி, நரிப்பையூர், அறுநூற்றுமங்கலம் ஆகிய ஊர்க் கோயில்களில் உள்ள கல்வெட்டுகளை படியெடுத்து ஆவணப்படுத்தியுள்ளது மட்டுமின்றி சக மாணவ, மாணவிகளுக்கும் கல்வெட்டைப் படியெஎடுப்பது, படிப்பது பற்றிய செயல்விளக்கப் பயிற்சியையும் அளித்துவருகின்றனர்.

மதிப்பெண்கள் மட்டுமே மாணவர்களின் சாதனையாகப் பேசப்பட்டுவரும் இக்காலத்தில் மாணவிகள் வரலாற்றைப் பாதுகாக்கும் பணியின் மூலம் புதிய வரலாறு படைத்துவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x