Published : 25 Jul 2014 01:07 PM
Last Updated : 25 Jul 2014 01:07 PM

காதல் மன்னனைக் காணவில்லை!

கமலே விரும்பி ‘காதல் மன்னன் பட்டத்தை ஆர்யா வைத்துக்கொள்ளட்டும். எனக்கு ஆட்சேபம் இல்லை’ என்று அங்கீகரிக்கும் அளவுக்குக் கோலிவுட்டின் நிகழ்கால ரோமியோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார் ஆர்யா. த்ரிஷா - நயன்தாரா இருவரையும் தனது தம்பி சத்யா நடிக்கும் ‘அமர காவியம்’ படத்தின் இசை வெளியீட்டுக்கு அழைத்து வந்து ஊடகங்களைத் திரும்பிப் பார்க்க வைத்த குறும்பு ஹீரோ.

உள்ளம் கேட்குமே படத்தில் தொடங்கி 25 படங்களைக் கடந்துவிட்ட ஆர்யா,ஆக்‌ஷன் அவதார் எடுத்த படங்களில்கூட அவருக்காக உருவாக்கப்படும் காதல் காட்சிகளில் ஆர்யாவின் காதல் இளவரசன் இமேஜ் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும். இதனால் ஆர்யாவுக்கு ரசிகைகளின் எண்ணிக்கை அதிகம்.

ஆனால் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் ‘மீகாமன்’, எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் நடித்துவரும் ‘புறம்போக்கு’ ஆகிய படங்கள் வெளிவந்தபிறகு ஆர்யாவை விட்டுக் காதல் மன்னன் பிம்பம் கழன்றுகொள்ளும் என்கிறார்கள் அழுத்தம் திருத்தமாக. புறம்போக்கு படத்தில் பாலுச்சாமி என்ற சாதுவான சென்னை இளைஞராக அறிமுகமாகும் ஆர்யா, பாலு என்ற அடுத்த கட்ட பரிமாணத்துக்கு நகரும்போது அவரது ஆக் ஷன் கேரக்டர் அனல் பறக்கும் என்கிறார்கள். படத்தில் ஆர்யாவுக்கு இணையான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தாலும், படத்தின் ஆக்‌ஷன் அவதார் ஆர்யாதானாம். ‘பேராண்மை’ படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் புதிய அர்த்தம் கொடுத்த ஜனநாதன் இந்தப் படத்தின் ஆக்‌ஷனை யதார்த்தமாக அமைத்திருக்கும் அதே நேரம் இதுவரை இல்லாத பிரம்மாண்டத்துக்கு ஆர்யாவை நகர்த்திச் செல்கிறார்.

அதேபோல இயக்குநர் மகிழ்திருமேனி அவரது ‘தடையறத் தாக்க’ படத்தின் ஆக்‌ஷன் கதைக்களத்துக்காவே கொண்டாடப்பட்டார். அப்படிப்பட்டவர் ஆர்யாவை இயக்கும்போது, அவரை எப்படிப் பயன்படுத்தியிருப்பார்!? ” இதுவரை நான் நடிக்காத க்ரைம் த்ரில்லர். இந்தப் படத்துக்குப் பிறகு நானும் ஆக்‌ஷன் கேமில் இருப்பேன்” என்று சொல்லும் ஆர்யா, கடலையும் துறைமுகத்தையும் சார்ந்திருக்கும் நிழலுலக தாதா ஜோதி என்பவனை எதிர்த்துப் போராடும், ஒரு சாதாரண மீன்பிடிப் படகின் உரிமையாளன். இருக்கை நுனி த்ரில்லராகத் தயாராகியிருக்கும் ‘மீகாமன்’ படத்துக்குப் பிறகு ஆர்யா - ஏ.ஆர். முருகதாஸுடன் இணையப்போகிறார். அதற்கான அடித்தளமாக இந்த இரண்டு படங்களும் இருக்கும் என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x