Published : 06 Nov 2017 11:22 AM
Last Updated : 06 Nov 2017 11:22 AM

புல்லட் பிரியர்களை இணைக்கும் `ரைடர் மேனியா’

‘பு

ல்லட்’ இந்த ஒரு சொல் பலரையும் கட்டிப்போட்டுள்ளது. துப்பாக்கியிலிருந்து சீறும் புல்லட் அல்ல இது சாலைகளில் சீறிப் பாயும் புல்லட். இரு சக்கர வாகனங்களின் ஏகோபித்த ராஜாவாக வலம் வரும் ராயல் என்பீல்ட் மோட்டார் சைக்கிளுக்கு இன்றைக்கும் டிமாண்ட்தான்.

இந்தியச் சந்தையில் வெறுமனே மோட்டார் சைக்கிளை மட்டுமே விற்பனை செய்வதோடு தங்களது கடமை முடிந்துவிட்டது என்று நினைக்காமல், தங்களது தயாரிப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடையே ஒரு பந்தத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறது ராயல் என்பீல்ட்.

புல்லட் வாங்கினாலே நீண்ட தூரம் ஓட்டிச் செல்ல வேண்டும் என்ற ஆவல் அனைவருக்குமே ஏற்படும். வெறுமனே அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வதற்கா இதை வாங்கினோம் என்று கேட்போரும் உண்டு.

தங்களின் சுவாசமே புல்லட் மோட்டார் சைக்கிள்தான் என கங்கணம் கட்டிக் கொண்டு சதா சர்வகாலமும் புல்லட்டைப் பற்றிய சிந்தனையோடு வாழ்வோரும் உண்டு. புதிதாக புல்லட் வாங்கியவரையும், நீண்ட காலமாக இந்த பைக்கை உபயோகித்து நீண்ட தூர பயணங்கள் பல மேற்கொண்டவர்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு திருவிழாதான் `ரைடர் மேனியா’. ஆண்டுதோறும் இந்த விழாவை கோவாவில் நடத்துகிறது ராயல் என்பீல்டு நிறுவனம்.

நீண்ட தூர பயணத்துக்கு ஹிமாலயன் ராலி உள்ளிட்ட சாகச பயணம் தவிர்த்து இதுபோன்ற 3 நாள் ஒருங்கிணைப்பு விழாவையும் நடத்துகிறது.

இம்மாதம் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் கோவாவில் நடைபெற உள்ள ரைடர் மேனியாவில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து புல்லட் பிரியர்கள் தங்கள் இடத்திலிருந்து புல்லட்டை ஓட்டிக்கொண்டு பங்கேற்கின்றனர்.

சென்னையிலிருந்து ராயல் ஃபால்கன் கிளப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

பங்கேற்கும் குழுவின் தலைவர் அரவிந்த்துடன் உரையாடியதிலிருந்து…

மூன்றாவது ஆண்டாக இதில் கலந்து கொள்கிறேன். தந்தை காவல் துறையில் இருந்ததால் அவரிடம் இருந்ததே புல்லட் மோட்டார் சைக்கிள்தான். கல்லூரி காலங்களில் நண்பர்களுடன் மகாபலிபுரத்துக்கு புல்லட்டில் சென்றதுதான் முதல் நீண்ட தூர பயணம். வேலைக்குச் சேர்ந்த பிறகு வார இறுதி நாள்களில் நீண்ட தூரம் செல்லலாம் என நினைத்து குழுவாக சேர்ந்து கிளம்பினோம்.

ராயல் ஃபால்கன் கிளப்பில் உள்ள உறுப்பினர்கள் இணைந்து ஷிமோகா, தேக்கடி, மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஆரம்பித்தோம். கொல்லி மலை அனுபவத்தை விவரிக்க வார்த்தைகளே இருக்காது. அதிகபட்ச கொண்டை ஊசி வளைவுகள் (hairpin bends) கொண்ட அப்பாதையில் பயணிப்பதே தனி அனுபவம். நமது கையில் மோட்டார் சைக்கிள் இருக்கும்போது நாமே ராஜா என்ற அனுபவம், இயற்கை சூழலை ரசித்த படியான பயணம் உண்மையிலேயே சுகானுபவம்தான்.

இதற்கு முன்பு இரண்டு ஆண்டுகள் தனியாக பங்கேற்று இப்போது ராயல் ஃபால்கன் குழுவினரோடு செல்லப் போவதாக மகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார் சத்ருகன். சாதி, மதம், மொழி போன்ற வேறுபாடு ஏதுமின்றி அனைவரையும் இணைக்கும் திருவிழாதான் ரைடர் மேனியா. இப்போது சாலைகளின் தரம் மேம்பட்டுள்ளது. வார விடுமுறை நாள்களில் வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. முந்தைய என்பீல்ட் மோட்டார் சைக்கிளில் கியர் மாற்றுவது வலது கால் பகுதியில் இருக்கும். இதை மாற்றி வழக்கமான பிற மோட்டார் சைக்கிளைப் போல இடது கால் பகுதிக்கு மாற்றியதிலிருந்தே இது அனைவரும் விரும்பும் பைக்காக மாறிவிட்டது.

கால சூழலுக்கு ஏற்ப இதில் செய்யப்பட்ட மாற்றங்கள், செல்ஃப் ஸ்டார்ட்டர் போன்றவை இதன் ரசிகர் வட்டாரத்தை மேலும் விரிவுபடுத்திவிட்டது. ராயல் என்பீல்டு கிளப்புகள் இப்போது இந்தியா முழுவதும் உள்ளன. இதனால் பயணத்தின்போது உங்களுக்கு உதவ நண்பர்கள் எங்கேயும் இருப்பார்கள். அதேபோல விநியோகஸ்தர்களும் அதிகம் உள்ளனர். இதனால் பழுது நீக்குவதிலும் சிரமம் இருக்காது. பெரும்பாலும் கிளப்பில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் மோட்டார் சைக்கிள் பழுது நீக்குவது அத்துபடி. இதனால் பிரச்சினை இருக்காது. குழுவாக செல்லும்போது ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பு. எந்த சாலையில் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும் என்பது சொல்லித் தருவர். புதிதாக வருபவர்களை அடுத்து வருபவர்கள் கவனித்துக் கொள்வர். இதனால் பயணம் இனிமையானதாகவே இருக்கும்.

கோவாவில் நடைபெறும் மூன்று நாள் நிகழ்ச்சிகளும் இனிமையானவை. பலரும் தங்கள் விருப்பப்படி மாற்றியமைத்த ராயல் என்பீல்டு பைக்கை இங்கு கொண்டு வருவர். சில போட்டிகளும் நடத்தப்படும். மூன்று நாளும் இனிமையாகப் போகும். அடுத்த ஆண்டு எப்போது வரும் என்ற ஏக்கத்துடனே அனைவரும் பிரிவோம் என்றார் சத்ருகன்.

புல்லட் அதன் செயல்பாட்டில் மட்டுமல்ல நிறுவன பந்தமும் அனைவரையும் கட்டிப்போட்டுள்ளது என்று சொன்னால் அது நிஜம்தானே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x