Published : 13 Nov 2017 11:18 AM
Last Updated : 13 Nov 2017 11:18 AM

இருவர்: சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா

இருவர் தலைப்பு பொருத்தமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆம், இன்று சர்வதேச தொழில்நுட்ப உலகத்தை கையில் வைத்திருக்கும் இரண்டு முக்கிய நபர்களை பற்றி பார்க்க இருக்கிறோம். ஒருவர் சுந்தர் பிச்சை. மற்றொருவர் சத்யா நாதெள்ளா. இவர்களுக்குள் நிறைய ஒற்றுமை இருக்கிறது. இருவருமே தென்னிந்தியர்கள். கிரிக்கெட் ரசிகர்கள். தொழில்நுட்பத்தில் தீவிர ஆர்வமுள்ளவர்கள். இவர்களின் வளர்ச்சி ஒட்டுமொத்த இந்தியாவுக்கு பெருமை என்றாலும் தென்னிந்தியர்களாக இருப்பதில் நமக்கு கூடுதல் மகிழ்ச்சி இருக்கும். இவர்களை பற்றி சில சுவாரசியமான தகவல்கள்….

சுந்தர் பிச்சை

பிறந்தது மதுரை மண்ணில். ஆனால் வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான்.

முழுப்பெயர் பிச்சை சுந்தரராஜன். அம்மா பெயர் லக்‌ஷ்மி. ஸ்டெனோகிராபராக பணியாற்றியவர். அப்பா ரகுநாத பிச்சை. எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயர். ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் பணியாற்றியவர்.

10-ம் வகுப்பு வரை அசோக் நகரில் உள்ள ஜவகர் வித்யாலயா பள்ளி. 12ம் வகுப்பு சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வான வாணி பள்ளி.

கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் மெட்டாலர்ஜிகல் தொழில்நுட்பத்தில் இளநிலை பட்டம். இங்குதான் அஞ்சலியுடன் ஏற்பட்ட நட்பு அவரையே நட்பு வாழ்க்கைத் துணைவியாக்கியது.

அமெரிக்காவில் எம்எஸ் படிக்க விருப்பம். தனது அப்பா சேர்த்து வைத்திருந்த பணத்தை எல்லாம் செலவு செய்தே அமெரிக்காவுக்கு படிக்கச் சென்றார்.

முதலில் மெகென்ஸி நிறுவனத்தில்தான் பணிபுரிந்தார். 2004-ம் ஆண்டுதான் கூகுள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். அந்த ஆண்டுதான் சுந்தர் பிச்சைக்கு திருப்பு முனை ஏற்படுத்திய ஆண்டு.

கூகுள் குரோம், குரோம் ஆப்ரேட்டிங் சிஸ்டம்ஸ், ஜிமெயில், மேம்ப்ஸ் என கூகுளின் முக்கிய தயாரிப்புகளுக்கு தலைமை தொழில்நுட்ப வல்லுநராக இருந்தார்.

சுந்தர் பிச்சைக்கு ஓர் ஆண்டு சம்பளம் மற்றும் சலுகைகளின் மதிப்பு 20 கோடி டாலர்.

அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1,285 கோடி

சமீபத்தில் யூடியுப்-ல் என்ன வீடியோ பார்த்தீர்கள் என்று கேட்டதற்கு கிரிகெட் வீரர் விராட் கோலி அடித்த சதத்தை பார்த்தேன் என்று கூறியிருக்கிறார்.

கிரிக்கெட் பிடித்தமான விளையாட்டு. ஜவகர் வித்யாலா பள்ளி அணியில் விளையாடி இருக்கிறார். பிடித்த வீரர் அப்போது சச்சின். தற்போது விராட் கோலி.

2014-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு பரிசீலிக்கப்பட்டார். ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை.

`ஆண்ட்ராய்டு ஒன்’ புராஜெக்ட் சுந்தர் பிச்சையின் மனசுக்கு நெருக்கமானது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பற்றி பயப்படத் தேவையில்லை. ஜெனிட்டிக்ஸ் துறை வளர்ந்த போது அரசு எப்படி கொள்கைகளை வகுத்ததோ அதேபோல் இதற்கு கொண்டுவரலாம் என்கிறார்.

2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக அறிவிக்கப்பட்டார்.

பிறந்தது ஹைதராபாத். அப்பா புக்கபுரம் நாதெள்ளா யுகாந்தர் ஐஏஎஸ் அதிகாரி. அம்மா பிரபாவதி யுகாந்தர்.

முழுப்பெயர் புக்கபுரம் நாதெள்ளா சத்யநாராயண சவுதாரி.

பெஹம்பட்டில் உள்ள ஹைதராபாத் பப்ளிக் பள்ளியில்தான் மேல்நிலை கல்வி.

பிறகு மணிப்பால் தொழில்நுட்ப கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படிப்பு

அப்பா சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராக சொல்லி கொண்டிருந்தார். இதிலிருந்து தப்பிப்பதற்காக அமெரிக்கா செல்லும் முடிவை எடுத்தார்.

சத்யா நாதெள்ளாவுக்கு டெல்லியில்தான் திருமணம் நடந்தது. எந்த பாதுகாப்பு வாகனங்களும் இல்லாமல் திருமணத்துக்கு வந்து வாழ்த்திச் சென்றவர் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ்.

சுந்தர் பிச்சையை போலவே இவரும் மிகத் தீவிர கிரிக்கெட் ரசிகர். பள்ளி அணியில் சிறந்த பேட்ஸ்மேனாக வளம் வந்திருக்கிறார்.

தனது தலைமைத்துவ பன்பை கிரிக்கெட்டிலிருந்தே பெற்றிருப்பதாக சத்யா ஒருமுறை கூறியுள்ளார்.

முதலில் சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தில் பணிபுரிந்திருக்கிறார்.

1992-ல் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்றைய முக்கிய வருவாயான கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தை உருவாக்கியதில் சத்யா முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.

அதற்கு பிறகு சத்யாவுக்கு ஏறுமுகம்தான். 2014-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி சத்யா நாதெள்ள மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார்.

மனைவி பெயர் அனுபமா. மொத்தம் மூன்று குழந்தைகள். அதில் ஒருவர் மாற்றுத் திறனாளி. அவருக்கு என்று தொழில்நுட்ப சாதனங்களை பிரத்யேகமாக உருவாக்கியிருக்கிறார் சத்யா.

சமீபத்தில் இவர் எழுதிய `ஹிட் ரெபரஷ்’ உலகம் முழுவதும் ஹிட்.

சத்யாவின் ஆண்டு வருமானம் 18 கோடி டாலர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x