Last Updated : 05 Nov, 2017 11:48 AM

 

Published : 05 Nov 2017 11:48 AM
Last Updated : 05 Nov 2017 11:48 AM

இல்லம் சங்கீதம் 08: ஈர்ப்புக்கும் காதலுக்கும் இடையே

அற்புதமான காதலை மட்டுமல்ல

அதை உன்னிடம் சொல்ல முடியாத

அதி அற்புதமான மௌனத்தையும்

நீதான் எனக்குத் தந்தாய்.

- தபூ சங்கர்

“அ

ம்மா.. செம்ம ஃபீலிங். டைம் மிஷின்ல ஏறி அப்டியே 23 வருஷம் பின்னாடி போயிட்டீங்க” - நித்யா கைதட்டி குதூகலித்தபோது, சாரதா முகத்தில் அந்த வயதுக்கு அரிதான வெட்கம் தோன்றியது. மஞ்சள் பூக்களைச் சொரியும் அந்த மரத்தடியில் அம்மாவும் பெண்ணுமாக உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தனர். திருமணத்துக்குக் காத்திருக்கும் மகள் நித்யாவிடம், தனது பருவ வயது நினைவுகளைத் தயக்கமின்றிப் பகிர்ந்துகொண்டிருந்தார் சாரதா.

தவிப்பும் அரவணைப்பும்

சாரதா - விஸ்வநாதன் தம்பதியின் ஒரே செல்ல மகள் நித்யா. திருமண ஏற்பாடுகளைத் தொடங்கிய கடந்த சில மாதங்களில் மகளின் போக்கு பெற்றோருக்குப் பிடிபடவில்லை. அமைந்த வரன்களை எல்லாம் ஏதாவது சொத்தைக் காரணங்களைச் சொல்லி நித்யா தட்டிக் கழித்தாள். கணவனின் யோசனைப்படி மகளைப் பல்வேறு இடங்களுக்குக் கூட்டிச்செல்ல ஆரம்பித்தார் சாரதா. அந்த வகையில் தாய்-மகளின் தற்போதைய விஜயம், சாரதாவும் விஸ்வநாதனும் இளம் பருவத்தில் கழித்த அந்தக் கிராமத்தில் நிலைகொண்டிருந்தது. ஊரின் நுழைவாயிலில் மரத்தடியில் இளநீர் பருகிக்கொண்டே அம்மாவின் பேச்சை சுவாரசியமாகக் கேட்கத் தொடங்கினாள் நித்யா.

அலைபாயும் ஈர்ப்பு

“அப்போ நான் பிளஸ் டூ முடிச்சு ரிசல்டுக்காகக் காத்திருந்தேன். தோழிகளுடன் டைப்பிங், தையல் கிளாஸ்னு சுத்திட்டிருந்தேன். கூடவே ஒருத்தன் ஹிப்பி தலையோட பஸ்ஸில் தொத்திக்கிட்டு வருவான். அவன் மேல எனக்கு ஒரு இது. லவ் எல்லாம் கிடையாது, அவனோட சேட்டைகளை மத்த பொண்ணுங்க மாதிரியே ரசிச்சதுண்டு, அவ்வளவுதான். ஆனா அந்தக் கிறுக்கன் அதையே சாக்கா எடுத்துக்கிட்டு என்னையும் அவனையும் இணைச்சு கிளப்பி விட்டுட்டான். விவகாரம் வீட்டில் வெடிச்சதும் கல்லூரிப் படிப்புக்குத் தடை போட்டுட்டாங்க. அப்போ குடும்ப நண்பரா பழகிட்டிருந்த உங்கப்பா, பெண்ணுக்குப் படிப்பு அவசியம்னு எனக்கு ஆதரவா வந்து நின்னார். படிப்பு முடிச்சு போட்டித் தேர்வுகளுக்காக உள்ளூர் நூலகத்தில் பழியாகக் கிடந்த அவருக்கும் என்னோட அப்பாவுக்கும் வாசிப்பு தொடர்பா பரிச்சயம் இருந்தது. அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு எல்லாம் ரெண்டு பேரும் கிளம்பிடுவாங்க. பிற்பாடு கல்லூரி படித்தபோதும், என்ன படிக்கலாம் எங்கே படிக்கலாம்னு நிறைய யோசனைகள் சொன்னார். ‘யார் இவரு, ஏன் இந்த அக்கறை’ன்னு அதன் பிறகுதான் அவரைக் கவனிக்க ஆரம்பிச்சேன்” என்ற சாரதாவைக் குறுகுறுவெனப் பார்த்தாள் நித்யா. தோளுக்கு வளர்ந்த மகள் தோழி அல்லவா? தயக்கமின்றி சாரதா தொடர்ந்தார்.

பாரம் இறக்கிய தாய்மடி

“மேலோட்டமான ஈர்ப்புகளுக்கு அப்பால் எனக்கானவரை அடையாளம் காணும் பக்குவம் வந்தபோது உங்கப்பா மனசுக்குள்ள ஆழமா உட்கார்ந்திருந்தாரு. ஆனா அடுத்த கட்டத்துக்குப் போக எனக்குத் தயக்கம். அவரை இழக்கவும் மனசில்லை. படிப்பு முடிஞ்சு கல்யாணப் பேச்செடுத்ததும் உங்க பாட்டிகிட்ட சரண்டர் ஆனேன். பெரியவங்களே பேசி ரெண்டு பேரையும் சேர்த்து வச்சாங்க. கல்யாணத்துக்கு அப்புறம்தான் சின்ன வயசிலேர்ந்து உங்கப்பா என்னை உருகிக் காதலிச்சது தெரியவந்தது. நல்ல குடும்பம், நம்மளை மதிச்சு தோழமையா பழகுற பொண்ணாச்சேன்னு அவரும் அப்போ தவிச்சிருக்காரு” சாரதா சொல்லச்சொல்ல நித்யா, “செமயா ஃபீல் பண்றீங்கம்மா..” என்று மறுபடியும் கேலிசெய்தாள். ஆனால், சில நிமிடங்களுக்குப் பிறகு சிந்தனை வயப்பட்டு அமைதியானாள். தனது இளம் வயதிலிருந்து பலவற்றையும் தொட்டுப் பேசி மகளை வழிக்குக் கொண்டுவரும் சாரதாவின் முயற்சிக்கு இறுதியாக வெற்றி கிடைத்தது.

நட்பின் வழி வளர்ந்த நேசம்

கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி ஒன்றில் நித்யாவும் கோகுலனும் சந்தித்து அதன் பின்னர் நட்பாகியிருக்கிறார்கள். ஒரு வருடப் புரிதலுக்குப் பிறகு நித்யாவுக்குள் காதல் மலர்ந்தது. கோகுலன் தன் வாழ்க்கையில் அங்கம் வகித்தால் நன்றாக இருக்கும் என நித்யா ஆசைப்பட்டாள். அவனும் சில நேரம் நட்புக் கோட்டுக்கு அப்பால் நேசம் பாராட்டுவதாகத் தெரிந்தாலும் அதை உறுதிப்படுத்த முடியாமல் நித்யா தடுமாறுகிறாள். மகள் திருமணப் பேச்சில் பிடிகொடுக்காமல் இருப்பதன் பின்னணி சாரதாவுக்குப் புரிந்ததும் பெருமூச்சுவிட்டார். தாயிடம் மனதைத் திறந்து எல்லாவற்றையும் கொட்டியதில் அவளும் சகஜமாகி இருந்தாள்.

அடுத்த நாளே விசுவநாதனும் சேர்ந்துகொள்ள சாரதா நித்யாவிடம் அடுத்தகட்டப் பகிர்வை ஆரம்பித்தார். கோகுலன் - நித்யா இடையேயான புரிதல், எதிர்பார்ப்பு, இருவருக்கும் இடையான உறவின் பொருள் என எல்லாவற்றையும் அவர்கள் விவாதித்தார்கள். ஓரளவு உண்மை புலப்பட்டபோதும் உறுதிப்படுத்தலுக்காகக் குடும்ப விழா என்ற பெயரில் நித்யாவின் நண்பர்கள் அனைவரையும் விசுவநாதன் வரச்செய்தார். கோகுலன் மற்றும் அவனுடைய நண்பர்களிடம் உரையாடியதில், தங்கள் மகள் போலவே கோகுலனும் தவிப்பதைக் கண்டுகொண்டனர்.

இதோ பெற்றோர் உதவியுடன் இல்லற வாழ்க்கையில் நித்யா, கோகுலனுடன் இணைய அந்தப் பின்னணியின் சுவாரசியங்களை அவனுக்குச் சொல்வதற்காகப் பூர்விகக் கிராமத்துக்கு நித்யா அழைத்துச் சென்றிருக்கிறாள். அதே இடத்தில் இளநீர் பருகியபடி கண்கள் விரிய நித்யா பேசுவதை ரசித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறான் கோகுலன்.

மேலோட்டமான ஈர்ப்பும் உள்ளார்ந்த நேசமும்

நித்யாவின் பெற்றோர் தங்கள் மகளின் மனதை அறிய இருவேறு முயற்சிகளில் இறங்கினர். ஆண் - பெண் உறவின் நெருக்கத்தை உரசிச் சொல்லும் இந்த ‘சிக்கிமுக்கி’ முயற்சிகளில் முதலாவது, நித்யா - கோகுலன் இடையேயானது சாதாரண எதிர்ப்பாலின ஈர்ப்பா என்று ஆராய்ந்தது. இந்த விசாரிப்புகள் திருமண பந்தத்தில் இணைய இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, திருமண வாழ்வின் தொடக்கத்தில் தங்களுக்கு இடையிலான உறவின் போக்கை உரசிப் பார்க்க விரும்புவோருக்குமானது.

மேலோட்டமான ஆண் -பெண் ஈர்ப்புகள், தொற்றிய வேகத்தில் வற்றிப்போகும் உணர்வுகள். காதல் அப்படியல்ல. ஆழ வேர்பாய்ச்சும் மரம் போன்றது. தொடக்கத்தில் உணர்வு கனிவதற்கும் போதுமான காலம் எடுத்துக்கொள்ளும்.

நேசம் மலர்வது மேலோட்டமான ஈர்ப்பில்கூடத் தொடங்கலாம். ஆனால், காதல் வேரூன்றிய பிறகு அதன் முக்கியத்துவம் குறைந்துவிடும்.

இன்ஃபாக்சுவேஷன், விசிட்டிங் கார்டு மட்டுமே. புரிதலைப் பொறுத்தே அதிலிருந்து அடுத்த நேச கட்டத்துக்கு நகர்வது சாத்தியமாகும்.

மேலோட்டமான ஈர்ப்புகளுக்கு ஆயுள் குறைவு. காதலின் ஆயுள் தனிநபரைப் பொறுத்து அவரின் ஆயுள் வரைக்கும் நீடிப்பதுண்டு.

பிரச்சினை எழுந்தால் முன்னது சிதறிப்போகும். பின்னதில் பிரச்சினை எழும்போதுதான் வலுவாகத் தலையெடுக்கும்.

முன்னதுக்கு நல்லவை மட்டுமே பிரதானமாகத் தெரியும். பின்னதில் நிறை குறைகள் எல்லாவற்றையும் உள்ளபடியே உள்வாங்கிக்கொள்வார்கள்.

சாதாரண ஈர்ப்பு சார்ந்த உறவு முறிந்துபோனால் இரண்டொரு நாளில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார்கள். ஆழமான காதலில் உறவு முறியாதவாறு கவனம் காப்பார்கள். மீறியும் உறவு முறிந்தால் அதன் சுவடு, இன்னொரு உறவு தானாக அமைந்த பிறகும் மனதின் ஆழத்தில் நீடிக்கும்.

மனதார நேசிப்பவர்கள் மத்தியில் தத்தம் இயல்புகளை மறைக்க மாட்டார்கள். மற்றவர் என்ன நினைப்பாரோ என்று தனது பழக்கவழக்கங்களையும் செயல்பாடுகளையும் ஒளிக்க மாட்டார்கள். மேலோட்டமான ஈர்ப்பில் இருப்பவர்கள் மத்தியில் பாவனைகளும் அலங்காரமுமே அதிகமிருக்கும்.

இதன் அடுத்த கட்டமாக நட்புக் கடலில் இருந்து நேச உறவை முத்தெடுப்பது குறித்து அடுத்த வாரம் பார்ப்போம்.

(மெல்லிசை ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x