Published : 20 Nov 2017 09:57 AM
Last Updated : 20 Nov 2017 09:57 AM

அலசல்: பொருளாதாரத்தில் முன்னேற்றம் பொது சுகாதாரத்தில் ...

லக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு என்கிற தோற்றம் உள்ளது. இது இந்திய பொருளாதாரத்துக்கு ஆரோக்கியமான போக்காக இருக்கலாம். ஆனால் இதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்துடன் ஒப்பிடுகையில், மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மிகக் குறைவாக இருக்கிறது.

இந்திய மக்களின் பொது சுகாதாரம் மிக மோசமான நிலைமையில் இருப்பதை `வாட்டர் எய்ட்’ என்கிற தன்னார்வ அமைப்பு, உலக வங்கி ஆய்வுகள் வெளிக் கொண்டு வந்துள்ளன. குறிப்பாக இந்தியாவில் சுமார் 56 சதவீத மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதி இல்லை. இந்தியாவில் உள்ள நீர் நிலைகளில் சுமார் 70 சதவீத தண்ணீர் மக்கள் நேரடியாக பயன்படுத்த உகந்ததாக இல்லை. ஆனால் இங்குள்ள ஏழைகள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் அன்றாட தேவைகளுக்கு இதை விட்டால் வேறு வழி இல்லை என்றும் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

குறிப்பாக, இந்தியாவில் 70 சதவீத கிராமப்புற மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்கிறது உலக வங்கி ஆய்வு. மேலும் அனைவருக்குமான கழிப்பறை வசதியற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் பத்து இடங்களுக்குள் உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கான கழிப்பறை வசதிகளின் நிலைமை இன்னும் மோசம் என்று விவரிக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்கான முயற்சிகளிலும் இந்தியா பின் தங்கியுள்ளது.

2000-வது ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டு வரையில் அனைவருக்குமான கழிப்பறை வசதியில் 22.5 சதவீத வளர்ச்சியைத்தான் எட்டியுள்ளோம். ஆனால் மிகச் சிறிய நாடான லாவோஸில் 44 % வளர்ச்சியும், கம்போடியாவில் 36 % வளர்ச்சியும் எட்டப்பட்டுள்ளன. இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் திறந்தவெளி கழிப்பறை பயன்பாட்டை 26 சதவீதம்தான் இந்தியா குறைத்துள்ளது. அதாவது இந்தியாவில் மிக முக்கிய அடிப்படை பிரச்சினையான திறந்த வெளி கழிப்பறை பயன்பாட்டை குறைப்பதில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை.

அடிப்படை கழிவறை வசதி இல்லாத காரணத்தால் இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளில் இடைநிறுத்தம் அதிகரிக்கிறது. குறிப்பாக பெண் குழந்தைகள் குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் பள்ளியிலிருந்து நிறுத்தப்படுகின்றனர். நகர்ப் புறங்களில் பொதுக் கழிப்பறை வசதி குறைவினால் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் சுகாதார சீர்கேடுகளை சந்திக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து `ஸ்வாச் பாரத்’ என அரசு இதை தீவிர பிரச்சார இயக்கமான இந்தியா முழுவதும் கொண்டு செல்கிறது. 2019-ம் ஆண்டுக்குள் திறந்தவெளி கழிப்பறை பயன்பாட்டிலிருந்து மக்களை வெளியே கொண்டு வருவதும், அனைவருக்கும் சுத்தமான கழிப்பறை வசதி உருவாக்க வேண்டும் என்பதும் இந்த திட்டத்தில் நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு போதிய நிதி ஒதுக்கி முறையாக கண்காணிப்பது, செயல்படுத்துவதும் அவசியம். 73 கோடி மக்களுக்கு அடிப்படை கழிவறை வசதி இல்லை என்பது சாதாரணமாக கடந்து போகும் செய்தியல்ல. அல்லது இந்த ஆய்வுகள் உண்மையை வெளிக் கொண்டு வரும் ஆயுதங்களும் அல்ல. அனைவருக்கும் சுகாதாரமான கழிவறை வசதி என்பது அரசால் எட்ட முடியாத இலக்கும் அல்ல. அரசும், மக்களும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் திறந்த மனதுடன் செயல்பட்டால் இந்தியா இந்த விஷயத்தில் கூனிக் குறுக வேண்டிய அவசியமுமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x