Published : 15 Oct 2017 12:30 pm

Updated : 15 Oct 2017 12:30 pm

 

Published : 15 Oct 2017 12:30 PM
Last Updated : 15 Oct 2017 12:30 PM

இல்லம் சங்கீதம் 05: புதிரும் அல்ல புனிதமும் அல்ல

05

பலிச்சோறு

படைப்பது போலிருக்கிறது


ஆவி பறக்கிற உன் காமம்

- கல்யாண்ஜி

திருமணமாகி பத்தே நாட்களில் கணவனிடம் கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டுக்கு வந்த மீராவை எல்லோரும் கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள். என்ன பிரச்சினை எனத் தெரியாமல் ஆளாளுக்கு அவல் மென்றனர். வேறு வழியின்றி மீரா வாய் திறந்தாள். கணவன் மேல் அவள் சொன்ன புகாரைக் கேட்டு விழுந்து சிரித்தவர்களில், மனஸ்தாபம் மறைந்த புகுந்த வீடும் சேர்ந்துகொண்டது.

மீராவின் கணவன் சிறு வயதிலிருந்தே இனிப்புப் பிரியன். அதன் பக்க விளைவாகத் தாவாயின் பக்கங்களில் தலா இரண்டு சொத்தைப் பற்கள் வைத்திருந்தான். அவன் மோகத்துடன் நெருங்கும் போதெல்லாம் மீராவுக்குக் குடலைப் புரட்டியதுதான் பிரச்சினை. பல் தேய்த்துவிட்டுப் படுக்கைக்கு வரலாமே என்பதைச் சுற்றிவளைத்து மீரா சொன்னதைத் தாப மயக்கத்தில் அவன் கேட்கவில்லை. தன்னிடம் முகம் சுளித்து விலகியவளிடம் ஒரு நாள் அவன் மூர்க்கமாக அணுக முயல, அவள் கோபத்துடன் தாய்வீடு திரும்பியிருக்கிறாள். சமாதானப் படலத்தைத் தொடர்ந்து முதல் காரியமாகப் புது மாப்பிள்ளையைப் பல் மருத்துவமனைக்கு மீராவே அழைத்துச் சென்றாள்.

முத்தத்தின் வீரியம், சத்தத்தைவிடச் சுத்தத்தையே அதிகம் சார்ந்திருக்கிறது. இது இருபாலருக்கும் பொருந்தும் என்றாலும் சுத்த உணர்வில் பெண்களே பல படிகள் மேலிருப்பார்கள். தங்கள் உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்வது பெண்களின் இயல்பு. வாய் துர்நாற்றம், வியர்வை துர்நாற்றம் போன்றவை அருவருப்பு அளிப்பதாலும் பெண் இணக்கம் கெடுவாள்.

அச்சம் தவிர்ப்போம்

பெண்ணின் மனநலன் சார்ந்த இடர்பாடுகளில் பாலுணர்வு குறித்த அச்சம் முக்கியமானது. மணமான புதிதில் உறவு குறித்த பயம் காரணமாக ஒத்துழைக்க மறுப்பதும், உறவை ஒத்திப்போடுவதும், காரணமின்றிக் கணவன் மீது கோபம் காட்டுவதுமாகச் சில பெண்கள் இருப்பார்கள். “பெற்றோர் வளர்ப்பில் பாலுணர்வு பற்றி மோசமான அபிப்பிராயம் புகட்டப்பட்டவர்கள், குழந்தைப் பருவத்தில் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானவர்கள், பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினரின் பாலுறவைப் பார்க்க நேரிட்டதால் பிஞ்சு மனதில் வெறுப்பு ஊறியவர்கள் போன்றோர் ஆண்-பெண் சேர்க்கை குறித்து மனதளவில் தடுமாற்றத்துடன் இருப்பார்கள். இவை தவிர்த்து அதீத சுத்தம் பார்க்கும் பெண்களும் தங்கள் உடல் தனித்தன்மை உடையதாக நம்பும் பெண்களும் அதைக் கணவன் என்கிற புதிய அந்நியன் அணுக உடன்பட மாட்டார்கள். கணவனிடம் பிரியம் இருந்தாலும் உறவினால் வலி உண்டாகுமோ என்ற பயத்தாலும் பல பெண்கள் தடுமாறித் தவிர்ப்பார்கள். இவர்களுக்குக் கணவனின் புரிதலுடன் கூடிய அன்பான அணுகுமுறை முதல் மனநல ஆலோசனை வரை தீர்வுகள் தேவைப்படும்” என்கிறார் மனநல மருத்துவர் கா.செந்தில்வேலன்.

கட்டுக்கதைகள் தேவையில்லை

மனரீதியான இடர்பாடுகள் ஆண்களுக்கும் உண்டு. இணையைத் தன்னால் திருப்தி செய்ய முடியுமா என்ற சந்தேகம் அவற்றில் முதன்மையானது. போலி மருத்துவப் பிரச்சாரங்கள், பகட்டு விளம்பரங்கள், சக ஆண்கள் பரப்பும் கட்டுக்கதைகள் ஆகியவையே இந்தச் சந்தேகத்தை ஆணிடம் விதைக்கின்றன. இதனால், பாலுறவை இயல்பானதாக அணுகாமல் இணையைத் திருப்திபடுத்தும் பணியாகவும் சுமையாகவும் நினைத்துச் சிலர் பயம் கொண்டிருப்பார்கள். கட்டாயத்துக்காகத் திருமணத்துக்குத் தலையசைத்துவிட்டுப் பின் தவிப்பார்கள். தன்னுடைய தயக்கம் தவறு என்பதை ஆண் உணர நாளாகும். அதுவரை தாம்பத்தியத்தில் ஆணின் தலை தப்புவது மனைவியாக வருபவரைப் பொறுத்தது. உடல்வாகு, உறவின் நீட்டிப்பு மற்றும் எண்ணிக்கை, சிறுவயது தடுமாற்றப் புலம்பல்கள் எனத் திருமணமான புதிதில் ஆணின் உற்சாகத்தைப் பறிக்கும் கட்டுக்கதைகளின் பட்டியல் நீண்டது. இவை தவிர மனைவியிடம் இயல்பான உடல் தூண்டல் கிடைக்காத ஆண், விலகலை உணரும்போதும் தாம்பத்தியம் விரிசல் காண நேரிடும். தம்பதியர் கூடுவதும் அதில் திருப்தியை உணர்வதும் சம்பந்தப்பட்ட இருவரின் தேவையையும் புரிதலையும் மட்டுமே பொறுத்தது. பாதிப்பு அதிகமாக இருந்தால் கவுன்சலிங் மூலம் தீர்வு காணலாம்.

பாலியல் அறிவு அவசியம்

மனநலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு அடுத்ததாகச் செயல்முறையாக்கத் தவிப்புகள் முக்கிய இடம் வகிக்கின்றன. ஆண்- பெண் உடற்கூறுகளை உள்ளடக்கிய அடிப்படைப் பாலியல் தெளிவில்லாத தம்பதியருக்கிடையே தாம்பத்தியம் படாத பாடு படும். மனதில் நேசமிருக்கும், உடலில் ஆசையிருக்கும், ஆனால் சாதாரண வேகத்தடைக்கே விபத்துக்குள்ளாவார்கள். பாலியல் அறிவு வறட்சியால் சில பெண்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். இனம் புரியாத உணர்வுகளின் தடையால் இறுதிச் சுற்றுக்கு வழியின்றி முன்விளையாட்டுகளுடன் இவர்களின் பயணம் முடிந்துவிடும்.

சொல்லித் தெரிவதில்லை

புதுமணத் தம்பதியர் காரணமின்றி பரஸ்பரம் குற்றம்சாட்டி முட்டிக்கொள்வதன் பின்னே படுக்கையறைத் தடுமாற்றங்களே முதன்மையாக இருக்கும். முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்களில் பாலியல் கல்வியை ஜாடைமாடையாக உணர்த்துவதற்கு என முதிர்ச்சியான உறவுகள் இருந்தன. இன்று அந்த இடத்தை இணையம் அபகரித்ததில் பலனைவிடக் கேடே மிகுந்திருக்கிறது. இவ்வாறான செய்முறை விளக்கங்களில் தடுமாறும் தம்பதிகளுக்குத் தீர்வு என்ன? சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை என்பதால் தானாகத் தெளியும்வரை அப்படியே விடலாம். தாம்பத்தியம் எனும் குழந்தை தட்டுத் தடுமாறி விழுந்து, எழுந்து, நடைபயில்வதை இருவருமே ரசிக்கலாம். தடுமாற்றத்தின் காலம் நீண்டால் மட்டுமே மருத்துவ ஆலோசனையை நாடலாம்.

தேவையில்லை பயம்

தாம்பத்தியத் தடுமாற்றங்களின் பட்டியலில் இறுதியாக வருபவை உடல் சார்ந்த பிரச்சினைகள். இதில் முதலாவது கன்னித்திரை எனப்படும் ‘ஹைமன்’ குறித்த கற்பிதம். இன்றைய நெருக்கடியான வாழ்க்கை ஓட்டத்தில் அவரவர் உடல்வாகைப் பொறுத்தே ஹைமன் எஞ்சியிருக்கும். இதில் பொருட்படுத்த ஏதுமில்லை. “புதுமணத் தம்பதியரின் கூடலில் பெண்ணைக் கவலைக்குள்ளாக்குவதில் பிரதானமானது ‘வெஜினஸ்மஸ்’ பிரச்சினை” என்று சொல்கிறார் மருத்துவர் செந்தில்வேலன். “இனம்புரியாத அச்சத்தால் பெண்ணின் இடுப்புத் தசைகள் இறுகுவதே ‘வெஜினஸ்மஸ்’. இந்த வகையில் ஆணின் பிரவேசத்தைப் பெண் முறியடிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்து, இருவருக்கும் மத்தியில் விரக்தி ஏற்படலாம். முன்விளையாட்டுகளுக்குப் போதிய நேரம் ஒதுக்குவதும், தேவையெனில் ஆண் தனக்கான உயவுப் பொருளை உபயோகிப்பதும் இதற்குத் தீர்வு” என்கிறார் அவர்.

“ஆணைப் பொறுத்தவரை முற்றுகையின்போதே முந்திரியாய் முந்திக்கொள்ளும் பிரச்சினை திருமணமான புதிதில் அடிக்கடி ஏற்படலாம். ஆனால், இந்தப் பிரச்சினை தொடர்ந்தாலோ இருவரின் திருப்திக்கு உலை வைப்பதாகத் தெரிந்தாலோ மருத்துவ ஆலோசனை அவசியம். மருந்து, மாத்திரைகளுடன் சில பிரத்யேகப் பயிற்சிகள் மூலம் இதைச் சரிசெய்யலாம்” என்றார் செந்தில்வேலன்.

15CHLRD_SENTHIL செந்தில் வேலன்

அலட்சியம் கூடாது

தாம்பத்திய உறவைக் கடமையாகக் கருதாமல், இருவருக்கும் இடையிலான தனித்துவ உறவுக்கு உரமிடும் வாய்ப்பாக எடுத்துக்கொள்வது அவசியம். மனதளவில் தயாராவதும், பிடித்தமான இசை, பேச்சு, சீண்டல்களில் நேரம் கழிப்பதும் வெஜினஸ்மஸ் இடையூறுகளை இயற்கையாகத் தகர்த்தெறியும். சரியான வியூகங்களே மனம் மற்றும் உடலின் தளர்வான நிலைகளுக்கு இருவரையும் கொண்டுசெல்லும். தம்பதியருக்கு இடையேயான உடல்சார் தேவைகள் உரிய வகையில் நிவர்த்தி செய்யப்படுவது அவசியம். புனிதம் என்றோ புதிர் என்றோ புறக்கணிப்பதும் விலகிச் செல்வதும் இல்லறத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்யலாம். அஸ்திவாரங்கள் வெளிப்பார்வைக்குப் புலப்படுவதில்லை என்பதற்காக அதன் கட்டுமானத்தில் அலட்சியம் காட்டுவோமா?

(மெல்லிசை ஒலிக்கும்)


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

ஊட்டி சுடும்! :

இன்றைய செய்தி
x