Last Updated : 02 Oct, 2017 03:15 PM

 

Published : 02 Oct 2017 03:15 PM
Last Updated : 02 Oct 2017 03:15 PM

சபாஷ் சாணக்கியா: எனக்குத் தெரியாதா?

உங்கள் அலுவலகத்தில் ஒரு தவறான முடிவு கூட எடுக்காத பணியாளர் யாரேனும் இருக்கிறார்களா? அவர்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்களா?

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. வேலை ஏதாவது செய்தால் தவறும் ஏதாவது நடக்கத் தானே செய்யும்? உண்மையைச் சொல்லப் போனால், ஒருவர் தவறே செய்யவில்லை என்றால், அவர் தேவையான ரிஸ்க் எடுக்கவில்லை என்றுதானே பொருள்?

அண்ணே, பணி செய்யும் பொழுது கவனமாக இருந்தும் தவறு நடந்து விட்டால் தவறில்லை! என்ன, அது ஏன் நடந்தது, எதிர்காலத்தில் அதை எப்படித் தவிர்ப்பது எனத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மின்சார பல்பு தயாரிக்கும் வழியை ஆராய்ந்த தாமஸ் ஆல்வா எடிஸன் பல முறை முயற்சி செய்ய வேண்டியதாயிற்று அவரைக் கேட்டதற்கு, `நான் ஒன்றும் தோல்வி அடையவில்லை.1000 செய்யக்கூடாத முறைகளைத் தெரிந்து கொண்டேன் ' என்றாராம்!

`நாம் நமது வெற்றிகளில் இருந்து கற்றுக் கொள்வதை விடதோல்விகளில் இருந்துதான் பல உபயோகமான பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம்’ என்று தொழிலில் பெரும் வெற்றி கண்ட விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி போன்றவர்கள் சொல்கிறார்கள்!

ஆனால், நாம் நமது தவறுகளில் இருந்து மட்டுமே பாடம் கற்றுக் கொண்டால் போதுமா? அந்த மாதிரி சூழ்நிலைகளில் மற்றவர்கள் செய்த தவறுகள் என்ன எனத் தெரிந்து கொண்டு அத்தவறுகளையும் நாம் தவிர்க்க வேண்டுமில்லையா?

நீங்கள் NPA பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். வங்கிகளின் கடன்களில் வட்டியோ, தவணையோ 90 நாட்களுக்கு மேல் வராவிட்டால் அது வாராக்கடன் (Non performing Asset- NPA).

அது சரி, SMA என்னெவென்று தெரியுமா? ஒரு கடன் வாராக்கடன் ஆவதற்கு முன்பே வங்கிகள் விழித்துக் கொண்டு விட வேண்டும், 90 நாட்கள் வரை காத்திருக்கக் கூடாது, முன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதற்காக ரிசர்வ் வங்கி SMA (Special Mention Accounts) எனும் முறையைக் கொண்டு வந்துள்ளது.

வட்டியோ, தவணையோ 30 நாட்கள் வரை தாமதமாகி இருந்தால் SMA-0 என்றும், 31- 60 நாட்கள் தாமதமாகி விட்டால் SMA-1 என்றும், 61-90 தாமத மாகி விட்டால் SMA-2 என்றும் அழைக்கப்படுகின்றன.

மேலும் வங்கிகள் இவ்விபரங்களை ரிசர்வ் வங்கிக்குத் தெரிவிப்பதால், இவ்விபரங்களை மற்ற வங்கிகளும் தெரிந்து கொள்ள முடியும். இதனால், சரியாக நடந்து கொள்ளாத கடன்காரர்களைக் குறித்த தகவல் பரிமாற்றம் எளிதாகிவிட்டது.

பின்னே என்னங்க? அந்த வங்கியை ஏமாற்றியவர் இவர், நாம் இனி இவருக்குக் கடன் கொடுக்கக்கூடாதென மற்ற வங்கிகள் எச்சரிக்கையாக இருக்க முடியுமில்லையா?

அவ்வளவு எதுக்குங்க? `இங்கு பெயிண்ட் ஈரமாக உள்ளது, தொட வேண்டாம்’ என அறிவிப்பு வைத்திருந்தாலும், அதைத் தொட்டுப் பார்த்து, பெயிண்ட்டை ஒட்டிக் கொண்டுவிட்டு, அந்தக் கறையைப் போக்க அவஸ்தைப்படுபவர்கள் தானே அதிகம்?

சரியில்லாத நிதி நிறுவனங்களில் பணம் போட்டால் போய்விடும் என்பதைப் பேப்பரில் பார்த்து தெரிந்து கொண்டால் போதாதா? `அது ஏதோ ஓரிரு இடத்தில் நடந்து விட்டது. எனக்குத் தெரியாதா, நான் பார்த்துக்கிறேன்’ என்றால் சொந்தப் பணம் அல்லவா போய் விடும்? இப்பவெல்லாம் ஒரு புது மாதிரி மோசடி நடக்கிறது. திடீரென்று உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். அதில் யாரும் உரிமை கொண்டாடாத ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது சுமார் 6.5கோடி ரூபாய் அனாமத்துக் கணக்கில் இருப்பதாகவும், நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கு விபரங்களைப் பகிர்ந்து கொண்டால் உடனே உங்களுக்கு பணத்தை அனுப்பி வைப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கும்.

அடடே நமக்கு எதிர்பாராத இடத்திலிருந்து பெரிய பணம் வரப்போகிறது என்று இன்றைய ராசிபலனில் படித்தது உண்மையாகி விட்டது என மகிழ்ந்து, சிலர் உடனே விபரங்களை அனுப்பி வைத்து விடுவார்கள்!

மோசடிக் கும்பல் வங்கிக் கணக்கு விபரங்களைத் தெரிந்து கொண்டு, உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வழித்து எடுத்து விடுவார்கள்!

இப்படிப்பட்ட மின்னஞ்சல்களின் வலைகளில் விழாதீர்கள் என வங்கிகள் படிச்சுப் படிச்சுச் சொல்கின்றன. ஆனால் சிலருக்குத் தாமே அனுபவப்படும் வரை நம்பிக்கை வருவதில்லை!

ஐயா, மற்றவர்கள் தவறுகளில் இருந்து சுதாரித்துக் கொண்டால் தானே நாம் நட்டப்படாமல், தப்பிக்கலாம்?

காரில் சீட் பெல்ட் போடா விட்டால், பாதுகாப்புக்குள்ள பலூன் வேலை செய்யாது என்பதைப் படித்து தெரிந்து கொள்வது தானே நல்லது? விபத்துக்குள்ளாகி அடிபட்டா தெரிந்து கொள்வது?

`மற்றவர்கள் செய்யும் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்வதே நல்லது.எல்லாத் தவறுகளையும் நாமே செய்து பாடம் கற்றுக்கொள்வதற்கு நம் வாழ்நாள் போதாது!’ எனும் சாணக்கியரின் கூற்று அனுபவ பூர்வமானது!

- சோம.வீரப்பன்

somaiah.veerappan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x