Published : 09 Oct 2017 10:22 AM
Last Updated : 09 Oct 2017 10:22 AM

ஆப்பிளை குறிவைக்கும் கூகுள்

டந்த செப்டம்பர் மாதம் தொழில்நுட்ப மாதம் என்றே அழைத்தனர் டெக் ஆர்வலர்கள். ஆப்பிள், சாம்சங் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி சந்தையைக் கவர்ந்தன. அந்தத் தயாரிப்புகள் குறித்து விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் பிக்ஸல் போன், பிக்ஸல் புக், புதிய கூகுள் ஹோம், டே ட்ரீம் வியூ, பிக்ஸல் பட்ஸ், கூகுள் கிளிப் என பல புதிய தயாரிப்புகளை கடந்த வாரம் அறிமுகப்படுத்தி சர்வதேச அளவில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது கூகுள். ஒரே நேரத்தில் இத்தனை பொருட்களை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியதில்லை. அதுமட்டுமல்லாமல் இந்தத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஹார்டுவேர் துறையில் கூகுள் முழு வீச்சாக இறங்கத் தொடங்கிவிட்டது .

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை கூகுள் மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே. உதாரணமாக டிரைவர் இல்லாத காரை சோதனை செய்துவருவதாக புகைப்படங்கள் வெளிவந்தன. இதற்கு அடுத்தக் கட்டமாக மக்கள் பயன்பாட்டு சாதனங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் வெளிப்பாடுதான் தற்போது வெளியாகியுள்ள பொருட்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பது.

ஆப்பிள் ஒவ்வொரு ஆண்டும் புதிய பொருட்களை அறிமுகப்படுத்தும் போது தனது தயாரிப்புகளின் தொழில்நுட்ப அம்சங்கள் அதாவது பிராசசரின் வேகம் எவ்வளவு, திரையின் திறன் குறித்து தலைமை அதிகாரிகள் கூறுவார்கள். ஆனால் கடந்த வாரம் கூகுள் தனது பொருட்களை அறிமுகப்படுத்தும் போது இவைகளைப்பற்றி அவ்வளவாக கூறவில்லை. மாறாக கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பேசும் போது, ``இந்த தயாரிப்புகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் மேப் மற்றும் மொழிமாற்றத்தில் எவ்வாறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும். நிறுவனத்துக்கு இது முக்கியமான தருணம். ஹார்டுவேர், சாப்ட்வேர் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என மூன்றையும் இணைத்து புதிய பொருட்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்’’ என்று பேசியுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை உலகம் முழுவதும் பல்வேறு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தினாலும் இயங்குதள அளவிலேயே கூகுளின் வெற்றி இருந்து வந்தது. ஆனால் ஆப்பிள் நிறுவனம் இயங்குதளம் மற்றும் ஹார்டுவேர் என அனைத்திலும் முன்னணியாக இருந்து வருகிறது. ஸ்மார்ட்போன், ஐபேட் மற்ற தொழில்நுட்ப சாதனங்கள் என அனைத்திலும் ஆப்பிள் முன்னணியாக திகழ்கிறது. இதற்கு போட்டியாகத்தான் தற்போது ஹார்டுவேர் துறையில் தீவிரமாக கூகுள் இறங்கியுள்ளது.

மிகச் சிறப்பான ஆண்ட்ராய்டு இயங்குதளம், செயற்கை நுண்ணறிவு மற்றும் வடிவமைப்பு போன்றவை நிச்சயம் ஆப்பிள் நிறுவனத்துக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் சந்தையை பிடிக்கும் நோக்கத்திலேயே கூகுள் நிறுவனத்தின் நகர்வுகள் இருக்கின்றன. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x