Last Updated : 30 Oct, 2017 11:06 AM

 

Published : 30 Oct 2017 11:06 AM
Last Updated : 30 Oct 2017 11:06 AM

நாதெள்ளா உணர்த்தும் பாடம் என்ன?

கடந்த வாரம் நாதெள்ளா சம்பத் ஜூவல்லரி கடை செய்தியில் இடம்பெற்றது. 70 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் நிறுவனம் கடந்த வாரம் கடையை மூடியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தங்க நகை சேமிப்புத் திட்டத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு பணத்தை திரும்பித் தர மறுத்தது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த கடையின் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்த ஒருவர், தனது சேமிப்பு காலம் முடிந்தவுடன் கடை மேலாளரை அணுகி நகை எடுப்பதற்கு அனுமதி கேட்டார். ஆனால் அவரது கோரிக்கைக்கு மேலாளர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. அதன்பிறகு அந்த நபர் காவல் நிலையத்துக்குச் சென்று கடை மேலாளர் மீதும் கடை மீது பணத்தை திரும்ப வழங்கச்சொல்லி புகார் அளித்துள்ளார்.

இதுவே தற்போது பெரிய பிரச்சினையாக வெடித்துள்ளது. இதேபோல் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்டவர்கள் நாதெள்ளா கடைக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். நாதெள்ளா சம்பத் ஜூவல்லரியின் நிர்வாக இயக்குநர் பிரபண்ணா குமார், நிறுவனம் பணச் சிக்கலில் இருந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் பிற சொத்துகளை விற்று வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நன்மையை விட ரிஸ்க் அதிகம்

ஜூவல்லரி கடைகள் வாடிக்கையாளர்களை தம் பக்கம் ஈர்ப்பதற்காக சில சலுகைகளுடன் தங்க சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அதாவது சேதாரம் இல்லாமல் நகை வழங்குவது, சேமிப்பு காலம் முடிகின்ற போது பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்குவது என பல்வேறு சிறப்பு சலுகைகளை ஜுவல்லரி கடைகள் வழங்கி வருகின்றன. சில ஜூவல்லரி கடைகள் கடைசி மாத தவணையை வாங்கிக் கொள்வதில்லை அல்லது கடைசி தவணையில் 55 சதவீதத்திலிருந்து 75 சதவீதம் வரையுமே பெற்றுக் கொள்கிறார்கள்.

பார்க்க சலுகைகள் வழங்குவது போல தெரிந்தாலும் இந்தத் திட்டங்களால் நன்மை கிடையாது. இதற்கு மிக சாதாரணமான காரணம், ஒருவேளை ஜூவல்லரி கடைக்காரர் பணத்தை தரவில்லை என்றால் சேமிப்புத்திட்டத்தை தொடங்கி பணம் செலுத்தி வரும் வாடிக்கையாளர்கள் உரிமை கோர முடியாது.

தங்க சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களை ரிசர்வ் வங்கியும் பாதுக்காக்க முடியாது. ஒழுங்குமுறை அமைப்பான செபியும் பாதுகாக்க முடியாது. ஆனால் நிறுவன சட்த்தில் இதற்கான வழிகள் இருக்கின்றன. ஆனால் இந்த விதிமுறைகள் அனைத்தும் நிறுவனமாக பதிவு செய்துள்ளவைக்கு மட்டுமே பொருந்தும். பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருந்து டெபாசிட் திட்டத்தை தொடங்கினாலும் கூட ஒரு ஆண்டுக்கு மேல் தொடர்ந்து டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே சோதனையிட முடியும். நிறுவனங்கள் சட்டத்தில் இதுபோன்ற பல ஓட்டைகள் இருப்பதை ஜூவல்லரி கடைக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அதாவது ஓர் ஆண்டு காலத்துக்குள்ளேயே பொருளோ சேவையோ வழங்கப்பட்டு விட்டால் அதற்காக செலுத்தப்படும் பேமெண்டுகள் டெபாசிட்டாக கருதப்படுவதில்லை. மாறாக முன்தொகையாக கருதப்படும். அதனால் பெரும்பாலான ஜூவல்லரி கடைக்காரர்கள் இந்த சட்ட ஓட்டையை பயன்படுத்தி 11 மாதத்துக்கு தங்க சேமிப்புத் திட்டங்களையே அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றனர். மேலும் 12-வது மாதத்தில் தங்க நகைகளை வாடிக்கையாளர்கள் வாங்குவது போல் திட்டங்களை உருவாக்கியுள்ளனர். ஒருவேளை தொகையை யாரும் கேட்காவிடில் அது நிறுவனத்துக்கே சென்று சேர்ந்து விடுகிறது. இதுபோன்று வசூலிக்கும் நிறுவனங்கள் நிறுவன சட்டத்தின் கீழ் பதிவு செய்திருந்தாலும் பணத்தை முன் தொகையாக வசூலிப்பதால் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டு முறைக்குள் வராது.

சில வழிகள்

ஒருவேளை ஜூவல்லரி கடைக்காரர்கள் பணத்தை திருப்பி வழங்கவில்லையென்றால் வாடிக்கையாளர்கள் பெரிதாக ஒன்றும் செய்துவிடமுடியாது. வாடிக்கையாளர்கள் காவல் துறையில் புகார் அளித்து ரசீதுகளை வைத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரமுடியும். மேலும் நிறுவனம் நிறுவனச் சட்டத்தின் கீழ் பதிவு செய்திருந்தால் உரிய ஆவணங்களை வைத்து சேவையை அளிக்கவில்லையென்று புகார் அளிக்க முடியும்.

இதுதவிர வேறு வழிகள் இல்லை. இருப்பினும் இந்தத் திட்டங்களில் சேராமல் தற்காத்துக் கொள்ளமுடியும். உதாரணமாக தங்க நகை சேமிப்புத் திட்டங்களுக்கு மாற்றாக கோல்ட் இடிஎப், தங்க மியூச்சுவல் பண்ட் திட்டம், மத்திய அரசின் சேமிப்புத் திட்டம் போன்றவை உள்ளன. இந்த திட்டங்கள் மிக பாதுகாப்பனதோடு மட்டுமல்லாமல் வெளிப்படையானவையாகும்

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x