Published : 15 Oct 2017 12:33 PM
Last Updated : 15 Oct 2017 12:33 PM

எசப்பாட்டு 05: சிம்மாசனத்தை விட்டு இறங்காத கதை

ஒரு பள்ளியில் பெண் ஆசிரியர்களுக்கான பயிலரங்கில் ஆண்-பெண் சமத்துவம் பற்றிக் கலந்துரையாடிக்கொண்டிருந்தோம். சில கேள்விகளை முன்வைத்து அதற்கான எதிர்வினைகளைக் கேட்டுக்கொண்டிருந்தோம். அதில், “நீங்கள் பெண்ணாகப் பிறந்துவிட்டோமே என்பதற்காக உங்கள் வாழ்க்கையில் மிகவும் வருந்திய தருணம் எது?” என்று கேட்டோம்.

“எங்க அம்மா இறந்துட்டாங்க. அப்பா, எங்க அண்ணன் வீட்டோடு இருக்கிறார். இரண்டு குழந்தைகளோடு மூணாவது குழந்தையா நீங்களும் எங்களோடே இருங்கப்பா என்று அண்ணன் அன்போடுதான் அழைத்துச் சென்றான். அண்ணனும் அண்ணியும் வேலைக்குப் போகிறவர்கள். வசதிக் குறைவு ஒன்றுமில்லை. ஆனாலும், சின்னச் சின்ன அவமதிப்புகள் இருக்கு. இட்லியா தோசையா என்கிற முடிவு அவர் கையில் இல்லை. அவர் நினைத்த நேரத்தில் காபி கிடைப்பதில்லை. அண்ணி தரும்போது குடிச்சிக்கிடணும். அண்ணன், அண்ணி, குழந்தைகளோடு பீச்சுக்கு அல்லது ஃபேமிலி ட்ரிப் கிளம்பினால் ஹாட் பேக்கில் சமைத்து வைத்துவிட்டுத்தான் போகிறார்கள்.

நீங்களும் வாங்களேன் என்று கேட்பதில்லை. கேட்டால் எங்கே வந்துவிடுவாரோ என அவர்கள் பயப்படுவதாக அப்பா சொல்கிறார். அது சரி, அவுங்க ஃப்ரீயா இருக்கணும்னு நினைக்கிறது தப்பில்லை. ஆனா, என் நிலைமையைப் பாரு... போட்டதைப் போடுற நேரத்திலே தின்னுட்டு வீட்டுக்கு வாட்ச்மேனாட்டம் இங்கியே கிடக்கிறேன்னு நான் அவரைப் பார்க்கப் போகும்போதெல்லாம் அப்பா புலம்புகிறார். அண்ணியிடம் இதெல்லாம் சொல்ல முடியலை. சொன்னாலும் கேட்கிற டைப் இல்லை அவங்க. சரி, வந்து எங்களோட இருங்கப்பான்னு நானும் என் கணவரும் பலமுறை வருந்தி அழைத்தும் வர மறுக்கிறார். அப்படியெல்லாம் வர முடியுமாம்மா.. அது சரியா இருக்காதும்மா என மறுக்கிறார். அவர் ம்க்கும்..னு செருமினா போதும், அம்மா காபியோடு போய் நிற்பார். அப்படி ராஜா மாதிரி வாழ்ந்துட்டு இப்ப அம்மாவும் இல்லாம… நான் பொண்ணா பொறந்ததாலேதானே அப்பா என் வீட்டில் இருக்க மறுக்கிறார்…”அந்த வாக்கியத்தை முடிக்க முடியாமல் உணர்ச்சி மேலிட்டு அமர்ந்துவிட்டார்.

ஆண் மனதின் சிடுக்கு

பிறகு நிதானமாக வந்து பேசினார். “படிச்சு வேலைக்குப் போற மருமகதான் வேணும்னு பார்த்து அப்பாதான் அண்ணியைக் கொண்டாந்தார் சார். பெண் குழந்தை படிச்சு வேலைக்குப் போய் சம்பாதிக்கணும், சொந்தக் காலில் நிக்கணும்னு என்னைப் படிக்க வச்சி வேலைக்கு அனுப்பினாரு சார்... ஆனா பாருங்க…”

ஆண் மனதின் இன்னொரு சிடுக்கு இது.

இந்தியத் திரையுலக மேதைகளில் ஒருவரான ரித்விக் கட்டக் இயக்கிய ‘மேக தாக தாரா’ படத்தில் இதுபோன்ற ஒரு காட்சி வரும். வயதான அப்பா-அம்மா, படித்துக்கொண்டிருக்கும் தம்பி-தங்கைகள் என்கிற பெரிய குடும்பத்துக்காகத் திருமணமே செய்துகொள்ளாமல் கதாநாயகி சம்பாதித்துக்கொண்டிருப்பாள். சாய்வு நாற்காலியே கதி என்றாகிவிட்ட அப்பா கண்ணீருடன், “இப்படிக் கிடைப்பிணமாகப் படுத்து, பெத்த பொம்பளைப் பிள்ளை சம்பாத்தியத்தில் சோறு தின்னும் காலமும் என் வாழ்க்கையில் வந்துவிட்டதே” என்று அழுவார். மகள் பேச்சை மாற்றி வேறு பக்கம் அவர் கவனத்தைத் திருப்புவாள். உணர்ச்சிகரமான காட்சி அது.

இரண்டு உலகப் போர்களுக்குப் பின் ஐரோப்பாவிலும் மேற்குலகம் முழுவதிலும் ஆண்கள் இல்லாத குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பெண்கள் தலைமையேற்றுக் குடும்பத்தை நடத்தும் யுகம் தொடங்கியது.

“மனைத்தக்க மாண்புடையள்...” போன்ற இலக்கணங்கள் அர்த்தமிழக்கத் தொடங்கின. உழைக்கும் பெண்கள் பெற்ற பொருளாதாரத் தற்சார்பு, அதுவரை நிலைத்திருந்த திருமணம், குடும்பம் போன்ற பண்பாட்டு நிறுவனங்களில் ஆரோக்கியமான சிதைவுகளை உண்டாக்கின. மனைமாட்சியும் நன்மக்கட்பேறும் மட்டுமே பெண்களின் கடமையாகவும் பெருமையாகவும் இருந்த கதையில் புதிய திருப்பங்கள் உண்டாயின. ஆணின் பாதுகாவலில் இருக்க வேண்டியவள்தான் பெண் என்கிற நிலைமை மறைந்து புதிய யதார்த்தங்கள் மேலெழுந்துவந்தன.

போர்கள் இல்லாமலே இந்தியச் சமூகத்தில் பெண்கள் வேலைக்கு வந்தனர். சாவித்திரிபாய் பூலே தொடங்கி பெரியார் வரையான சமூகச் சீர்திருத்த இயக்கங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். தவிர வீட்டு வேலைகளையும் பார்த்து, பிள்ளைகளையும் பெற்று வளர்த்து, கூடுதலாகச் சம்பளமும் வாங்கித் தரும் மனைவி என்றால் ‘டபுள் ஓகே’ என்று இந்திய ஆண் மனம் அதை ஏற்றதாகவும் கொள்ளலாம்.

வெற்றுப் புலம்பல்

பெண் கல்வியை வரவேற்று முற்போக்கான முடிவுகள் எடுத்துத் தம் பெண் பிள்ளைகளைப் படிக்கவைத்து, வேலைக்கு அனுப்பிய ஆண்களால்கூட, ‘ஆண் ஆளுமையின் கீழ்தான் பெண் இருக்க வேண்டும்; பெண் தலைமையில், பெண் ஆளுகையின் கீழ் ஆண் இருக்க முடியாது’ என்கிற பண்பாட்டுச் சகதிக்குள்ளிருந்து தங்கள் கால்களை வெளியில் எடுக்க முடியவில்லை. பாரம்பரியத்தின் சுமையை இறக்கிவைக்கத் தெரியாமல் விழி பிதுங்கும் இந்தியச் சமூகத்தின் ஆண்மனம் இதனால் மிகவும் நெருக்கடிக்குள்ளாகிறது. பெண்களின் ‘குடும்பத்தலைவி’ என்கிற புதிய பாத்திரத்தை மகிழ்வோடு ஏற்க மறுக்கிறது. ஏற்றுக்கொண்ட ஆண்கள் நகைச்சுவை கார்ட்டூன்களுக்குத் தீனி ஆகிவிடுகின்றனர்.

இது மாறிக்கொண்டிருக்கும் ஒரு காலகட்டம் என்ற தன்னுணர்வு ஆண் மனதில் இயல்பாக முகிழ்க்க வேண்டும். என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் கல்லூரிப் பேராசிரியையாகப் பணியாற்றினார். அவர் ஒருமுறை மனம் நொந்து சொன்னார். “கல்யாணத்துக்கு முன்னாடி நான் சம்பாதிச்ச காசை என் அப்பா தொட மாட்டார். அதை நீயே உன் அக்கவுன்ட்ல போட்டு வச்சிக்க என்று சொல்வார். கல்யாணத்துக்கு அப்புறம் என் சம்பளத்தை என்னால் தொடக்கூட முடியவில்லை. நீ நான்னு ஏன் பிரிச்சுப் பேசுறே என்று அவ்வளவு காசையும் கணவரே நிர்வாகம் பண்ணுகிறார். எனக்குன்னு இஷ்டம்போல செலவு செய்ய என்று கொஞ்சமும் எடுத்துக்க முடியலே. அவர் இஷ்டம்போல செலவு செய்யறாரு. இதையெல்லாம் யாரோடு பேச?”கட்டுரைய

கட்டுரையின் ஆரம்பத்தில் வந்த அந்தப் பெரியவர் மருமகள் எழுந்துகொள்ளும் முன்பாக அவளை எதிர்பாராமல் தானே அடுப்படிக்குச் சென்று காபி போட்டுக் குடிக்கலாம். மகனுக்கும் மருமகளுக்கும் சேர்த்தே காபியைப் போட்டுத் தரலாம். விஷயம் எவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக ஒரு நாளில் மாறிவிடும்! ‘ம்க்கும்’ என்று செருமினால் காபி வர வேண்டும் என்று அதே சிம்மாசனத்தில் இன்னும் உட்கார்ந்துகொண்டிருந்தால்?

இந்த அப்பாவிலிருந்து பேராசிரியரின் கணவர்வரை எல்லா ஆண்களின் மனதிலும் ஓடும் உணர்வு ஒன்றுதான். பெண் இன்று ஏற்றிருக்கும் புதிய பாத்திரத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிகாரம் பறிபோன மன்னர் சிம்மாசனத்தை விட்டு இறங்க மறுக்கிறார்கள். இன்னும் பழைய ஞாபகத்திலேயே, ‘இதுதான் என் கட்டளை. அதுவே சாசனம்’ என்று வெற்றுவெளியில் புலம்பித் திரிகிறார்கள்.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: tamizh53@gamil.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x