Published : 02 Jun 2023 04:01 PM
Last Updated : 02 Jun 2023 04:01 PM

இவர்களும் மனிதர்கள்தான்

னிதர்களை அவர்கள் செய்யும் தொழிலை வைத்தே பலரும் மதிப்பார்கள். பலர் தாங்கள் படித்த படிப்புக்கும் அறிவுக்கும் ஏற்ற தொழிலைச் செய்கிறார்கள். வாய்ப்பு மறுக்கப்படுகிற சிலரோ தங்களுக்குப் பிடிக்காத அல்லது கிடைத்த தொழிலைச் செய்கிறார்கள். அவர்களில் பாலியல் தொழிலாளிகளும் அடக்கம். பெரும்பாலும் பெண்களே இத்தொழிலைச் செய்கிறார்கள். அவர்கள் யாரும் விருத்துடன் இதைச் செய்வதில்லை. பலரும் சூழ்நிலைக் கைதிகளாகவே இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள். இது புரிந்தும்கூட பலரும் அவர்களை ஒரு மனிதராகக்கூட மதிப்பதில்லை. பிற தொழிலாளர்களைப் போலவே பாலியல் தொழிலாளர்களையும் நடத்த வேண்டும் என்றும் அவர்களைக் கீழ்த்தரமாகப் பார்க்கும் பார்வையையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தை வலியுறுத்தும் விதத்திலும் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 2ஆம் தேதி சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

1975ஆம் ஆண்டு ஜூன் 2 அன்று பிரான்ஸ் நாட்டில் உள்ள லியோன் பகுதியில் பாலியல் தொழிலாளர்கள் தங்களது அங்கீகாரத்துக்காக ஒரு சிறிய இயக்கத்தைத் தொடங்கினர். சுமார் 100 பாலியல் தொழிலாளர்கள் செயின்ட் நிசியர் தேவாலயத்தில் கூடினர். அப்போராட்டம் தேசிய அளவில் பிரபலமாக, எட்டு நாட்களுக்குத் தொடர்ந்தது. அப்போராட்டம் காவல்துறையின் அடக்குமுறையை எதிர்த்தும் மற்றவர்களைப் போலத் தங்களையும் இயல்பாக நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் நடத்தப்பட்டது. பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும், ஒவ்வோர் ஆண்டும் பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை எடுத்துக்காட்டும் விதமாகவும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் விதமாகவும் ஜூன் 2 சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தங்கள் உரிமைகளுக்காகப் போராடிவரும் பாலியல் தொழிலாளர்களை ஒவ்வொரு நாடாக அங்கீகரித்துவருகின்றன. இந்தியாவில் பாலியல் தொழிலாளர்களை மற்ற தொழிலாளர்கள் போல் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் விருப்பத்தோடு பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களைக் காவல் துறையினர் துன்புறுத்தவோ குற்றவியல் நடவடிக்கை எடுக்கவோ கூடாது எனவும் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்குப் பிறகும் இந்தியாவில் பாலியல் தொழிலாளிகள் பலர் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களைத் தொழிலாளர்களாக மதிக்கவிட்டாலும் சக மனிதராக மதிக்கலாமே என்பதுதான் அவர்களுக்கு ஆதரவாகப் பேசும் செயற்பாட்டாளர்களின் கோரிக்கை.

- ஸ்ருதி பாலசுப்ரமணியன், பயிற்சி இதழாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x