Last Updated : 14 Jul, 2014 10:17 AM

 

Published : 14 Jul 2014 10:17 AM
Last Updated : 14 Jul 2014 10:17 AM

என்னய்யா பெரிய புரூஸ் லீன்னு நினைப்பா?

புரூஸ் லீ நினைவுநாள்: ஜூலை 20

பெரிய புரூஸ்லீன்னு நினைப்பா என்று எப்போதாவது காதில் விழுந்துருக்கா? குங்பூ என்றாலோ கராத்தே என்றாலோ புரூஸ் லீ தான் என்ற அளவுக்கு மக்களின் மனங்களில் அவர் நிறைந்து போன அதிசயம்தான் என்ன?

யார் இந்த புரூஸ் லீ?

புரூஸ் லீ யின் (1940-1973) அப்பா லீ ஹோய்-சுவென் என்ற சீனர். அவரது அம்மா கிரேஸ் என்ற சீன-ஐரோப்பியக் கலப்பினப் பெண்.

அவரது அப்பாவும் ஒரு நடிகர்.நல்ல பாடகர்.பல படங்களில் நடித்துள்ளார். அவரும் குங்பூ கலை பயின்றவர்.அவர் சினிமா தொழிலுக்காக அமெரிக்காவுக்கும் ஹாங்காங்குக்கும் மாறி மாறி பயணம் செய்தவர். அப்படிப்பட்ட ஒரு பயணத்தின்போது அமெரிக்காவில் புரூஸ் லீ பிறந்தார்.

புரூஸ் லீ 18 வயதுவரை ஹாங்காங்கில் படித்தார். அவரது காலத்தில் ஹாங்காங் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.வன்முறைக்குழுக்களின் கைகளில் நகரத்தின் நிர்வாகம் சிக்கித்தவித்த காலம். தெருச்சண்டைகள் மலிந்த காலம். புரூஸ்லீயும் தெருச்சண்டைகளில் சிக்கினார். ஒரு முறை பள்ளியில் பெரிய தாதாவின் மகனை புரூஸ் லீ அடித்துவிட்டார். மிகப்பெரிய ரவுடிகள் பட்டாளத்தைக் கையில் வைத்துள்ள அந்த தாதாவின் பிடியில் புரூஸ்லீ சிக்கிவிடக்கூடாது என்பதற்காக அவரை அமெரிக்காவுக்கு அப்படியே பண்டல் செய்து பார்சல் செய்தார் அவரது அப்பா.

சின்ன வயது முதல் தனது அப்பாவிடம் குங்பூ கலையை அவர் பயின்றாலும் இப்மேன் உள்ளிட்ட பெரிய குங்பூ ஜாம் பவான்களிடமும் மாணவராக பயின்றார். அந்தப் பயிற்சி அமெரிக் காவில் கல்லூரிப்பருவத்திலேயே அவரை ஒரு குங்பூ பயிற்சி அளிக்கும் மாஸ்டராக ஆக்கி இருந்தது.

பத்தாண்டு காலத்துக்கும் மேலாக அமெரிக்காவில் குங்பூ மாஸ்டராக லீ இருந்தார்.

அவர் தொன்மையான குங்பூ சண்டை முறையை அன்றாட வாழ்வில் நடக்கும் யதார்த்தமான தெருச்சண்டையோடு மிகவும் நெருக்கமாய் பொருத்தினார்.

நீ எப்படி சண்டை போட வேண்டும் என்பதை உனது எதிரி தீர்மானிக்கிறார் என்கிறார் லீ.பாரம்பரியமான குங்பூ சண்டை முறைகளுக்கு எல்லாம் மதிப்பு அளித்தார்.ஆனால் முக்கியத்துவம் அளிக்கவில்லை. அவற்றின் சாரத்தை மட்டும் உறிஞ்சிக்கொண்டார்.

மனத்தின் வலிமையை புரிந்துகொள்வதற்காக பழங்கால சீன தத்துவங்களை லீ விரும்பி படித்தவர்.இந்தியத் தத்துவ ஞானிகளில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தியையும் அவர் படித்துள்ளார். “எனக்கு எதிரியே கிடையாது. ஏனென்றால் மோதலின்போது நான் என்ற பிரக்ஞை எனக்கு இருப்பதில்லை” என்றார் லீ. மனம் பற்றிய ஆழமான தேடுதல் இருந்தாலும் லீ கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்துள்ளார்.

பல வகை சண்டை முறைகளின் தத்துவத்தைப் பிழிந்து எடுத்து ஜூட் குனே டூ என்றப் பெயரில் தனிவகையான ஒரு சண்டைத் தத்துவ முறையை அவர் அறிவித்தார். ஆனாலும் தனது அணுகுமுறையை ஒரு படகு என அவர் வர்ணித்தார். அந்த படகில் ஏறி குங்பூ பெருங்கடலை கடக்கலாம். ஆனால் “படகை தோளில் தூக்கித் திரியாமல் பயணத்தைத் தொடரு” எனச் சொல்லி விட்டார்.

நான் சொன்னேன் என்பதற்காக நீ நம்பாதே.உனது சொந்த தேடுதலை செய் என்ற இந்த தன்னம்பிக்கை மிக்க தத்துவ உபதேசம்தான் குங்பூ மாஸ்டர்களின் உலகில் புரூஸ் லீயை உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.

மனவலிமைப் பயிற்சிகளுக்கு தந்த அதே முக்கியத்துவத்தை அவர் உடல்வலிமைக்கும் அளித்தார். அவரது உடலின் ஒவ்வொரு சென்டிமீட்டரையும் அவர் பயிற்சிக்கு உட்படுத்தினார். வலிமைப்படுத்தினார்.அவரது உடற்பயிற்சி முறைகள் அவரது உடலைக் கற்சிலையாகச் செதுக்கின.

நடிகரின் மகன் என்பதால் அவர் 18 வயதுக்குள் குழந்தை நட்சத்திரமாக இருபது படங்களில் நடித்துவிட்டார்.

ஆனால் சினிமாவை விட்டு ஒதுங்கி குங்பூ கலையில்தான் லீ மூழ்கி இருந்தார். குங்பூ கலையை மையமாக கொண்டு எடுக்கப்படும் படங்களில் நடிக்க ஒரு சமயம் அவருக்கு அழைப்பு வந்தது. அதனால் மீண்டும் சினிமாவுக்குள் வந்தார். 1971-ல் ‘பிக்பாஸ்’ படமும் 1972-ல் ‘பிஸ்ட் ஆஃப் பியூரி'யும் ‘ரிடர்ன் ஆப் த டிராகன்' னும் வெளியாகின.1973-ல் 'என்டர் த டிராகன்' னும் ‘கேம் ஆப் டெத்’தும் தயாராகின.

இந்தப் படங்களின் வழியாக அவர் வெளிப்படுத்தி யவை மனித இனத்தின் சண்டைத் திறனின் அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சி.அதனால்தான் அதன் பாதிப்பு மக்களிடம் நீடித்து நிற்கிறது.அதுவே அவரது அதிசயமிக்க வெற்றியின் ரகசியம்.

அவரது படங்களில் புரூஸ் லீயின் சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும் தாக்கும் வேகத்துக்கு அன்றைய திரையுலகத் தொழில்நுட்பத்தால் ஈடு கொடுக்க முடியவில்லை. பொதுவாக ஒரு வினாடிக்கு 24 கட்டங்கள் என்பதே கணக்கு. புரூஸ் லீயின் வேகத்துக்கு ஈடுகொடுக்க ஒரு வினாடிக்கு 34 கட்டங்களாக காமிரா வேகத்தை மாற்றியமைத்தனர்.

எண்டர் தி டிராகன் தான் உலக அளவில் அவரது புகழை பரப்பிய படம். ஆனால், இந்த வெற்றியை அவரால் பார்க்க முடியவில்லை; ‘என்டர் தி ட்ராகன்' வெளியாவதற்கு மூன்று வாரங்கள் முன்பு 1973-ம் ஆண்டு ஜுலை 20-ம் தேதி இரவு தலைவலி என்று தூங்கச் சென்ற புரூஸ் லீக்கு தூக்க மாத்திரை ஒன்று கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் எழவே இல்லை. ‘கோமா' நிலைக்குச் சென்றுவிட்டார். நினைவு திரும்பாமலே 32 வயதில் ஹாங்காங் குயின் எலிசபெத் மருத்துவமனையில் அவர் காலமானார்.

மாணவியாக வந்து அவருக்கு மனைவியான லிண்டா எமரியும்,புரூஸ் லீ யின் மகளும் இன்னமும் அவரது புகழை பரப்பி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x