Last Updated : 22 Nov, 2016 11:19 AM

 

Published : 22 Nov 2016 11:19 AM
Last Updated : 22 Nov 2016 11:19 AM

தேர்வுக்குத் தயாரா? - வேதியியலில் வெற்றி வசப்பட!

கனிம வேதியியல், கரிம வேதியியல், இயற்பியல் வேதியியல் என 3 உட்பிரிவுகளைக் கொண்ட வேதியியல் பாடத்தில், கரிம வேதியியல் பகுதியைச் சற்றுக் கடினமானதாக மாணவர்கள் கருதுவார்கள். கூடுதல் கவனமும் உரிய பயிற்சி, திருப்புதல்களை மேற்கொண்டால் ஏனைய இரண்டு பகுதிகளைப் போன்றே, கரிம வேதியியலிலும் மதிப்பெண்களைப் பெற முடியும்.

சொந்த நடையைத் தவிர்க்கவும்

விதி, கோட்பாடு ஆகியவற்றுக்குப் பதில் எழுதும்போது, சொந்த நடையைத் தவிர்த்துவிட்டுப் பாடநூலில் உள்ள வார்த்தைகளையே பயன்படுத்துவது நல்லது. அதிலும் பாடநூலில் தடித்த எழுத்துக்களில் உள்ள வார்த்தைப் பிரயோகங்களை அப்படியே எழுத வேண்டும்.

சமன்பாடுகளும் கணக்கீடுகளும்

கொடுக்கப்பட்ட சமன் பாட்டைச் சமன் செய்வதற்கு முன்னர் தேவையான இடங்களில் வினையூக்கி, வெப்பநிலை, அழுத்தம் ஆகியவற்றைக் குறிப்பிடுவது அவசியம். கணக்கீடுகளில் வாய்ப்பாடு, பிரதியிடுதல், விடை ஆகியவற்றுக்குத் தலா ஒரு மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதேபோல இயற்பியல், வேதியியல் கணக்கீடுகளில் தீர்வுகளின் அலகுக்கும் மதிப்பெண் உண்டு. ஒரு மதிப்பெண் பகுதியில் கனிம, கரிம வேதியியல் பகுதிகளில் இருந்து தலா 1, இயற்பியல் வேதியியலில் 2 என மொத்தம் 4 கணக்கீட்டு வினாக்கள் உண்டு.

3 மதிப்பெண் பகுதியில் கனிம, கரிம, இயற்பியல் பகுதிகளில் இருந்து தலா 1 என 3 கணக்கீட்டு வினாக்கள் கேட்கப்படும். 10 மதிப்பெண் பகுதியில் கட்டாய வினாவாக (கேள்வி எண் 70) கணக்கீட்டு வினா கேட்கப்படுகிறது. இதில் முதல் பிரிவில் ஹைட்ராக்சி சேர்மம், ‘d’ தொகுதி சேர்மம் ஆகியவற்றில் இருந்தும், இரண்டாம் பிரிவில் கார்பனைல் சேர்மம், மின்வேதியியல் ஆகிய பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும்.

சற்று மாற்றியும் கேட்கலாம்!

ஒன்றிரண்டு மதிப்பெண் சரிவைத் தவிர்க்க விரும்பும் மாணவர்கள், சேர்மங்களின் மணம், நிறம், அவற்றின் சிறப்புப் பெயர்கள், உலோக அயனிகள், பல்வேறு வகையான வினைக் காரணிகள், சமன்பாடுகள், அனைத்து வகையான சேர்மங்களின் பயன்கள் ஆகிய பகுதிகளில் அதிகப் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். சற்றே மாற்றி கேட்கப்படும் வினாக்களில் கூடுதல் கவனம் தேவை.

உதாரணமாக, ‘ஷாட்கி மற்றும் பிரெங்கல் குறைபாடுகளை விளக்குக’ என்ற வினாவை ‘புள்ளிக் குறைபாடுகளை விளக்குக’ என்றும், ‘ஹெண்டர்சன் சமன்பாட்டை வருவி’ என்பதை ‘தாங்கல் கரைசலின் பி.ஹெச்.சைக் கணக்கிட உதவும் சமன்பாட்டை வருவி’ எனவும் கேட்கக்கூடும். எனவே, அதுபோன்ற வினாக்களைத் தனியாகக் குறித்து வைத்துக்கொண்டு படிக்க வேண்டும். 10 மதிப்பெண் கட்டாய வினாவில் 70 (ஈ) மின் வேதியியல் கணக்குகளில் போதிய பயிற்சியின்மை காரணமாக மாணவர்கள் தவறிழைப்பது தொடர்கிறது. சதம் விரும்பும் மாணவர்கள் இதையும் கவனித்துத் தவிர்க்க வேண்டும்.

தேர்வறையில் சரிபார்ப்பு

வேதியியல் தேர்வின் நிறைவாக எழுதி முடித்ததைச் சரி பார்ப்பதற்கு 10 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்குவது சிறு தவறுகளைத் தவிர்க்க உதவும். 1 மதிப்பெண் வினாக்களைப் பக்கத்துக்கு 10 என 3 பக்கங்களில் எழுதுவது குழப்பங்களைத் தவிர்க்கும். அனைத்து வினாக்களுக்கும் வினா எண், உட்பிரிவு ஆகியவை முறையாகக் குறிக்கப்பட்டுள்ளனவா, வேதிச் சமன்பாடுகள் சரியாகச் சமன் செய்யப்பட்டுள்ளனவா எனச் சரி பாருங்கள். மேலும் வெப்பநிலை, அழுத்தம், வினைவேக மாற்றி, அலகு ஆகியவை விடைதோறும் சரியாகக் குறிக்கப்பட்டுள்ளனவா என்பதையும் பார்க்க வேண்டும்.

மதிப்பெண் வாரியாக முக்கிய கவனக்குறிப்புகள் இதோ:

ஒரு மதிப்பெண் வினாக்கள் (பகுதி-I)

கனிம, கரிம, இயற்பியல் வேதியியல் பகுதிகளில் இருந்து தலா 10 என மொத்தம் 30 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும். இவற்றில் 19 முதல் 22 வினாக்கள் பாடநூலின் வினாப் பகுதியில் இருந்தும், ஏனையவை பாடப்பகுதியின் உள்ளிருந்தும் கேட்கப்படும். அவ்வாறு உள்ளிருந்து கேட்கப்படுவதில் 2 அல்லது 3 வினாக்கள் கடினமானவை. 4 வினாக்கள் கணக்குகளாகக் கேட்கப்படுகின்றன. பாட எண்கள் 14, 15, 22 ஆகியவற்றிலிருந்து 1 மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படுவதில்லை. ஏனைய 19-ல் 10 பாடங்களில் இருந்து தலா ஒன்றும், 7 பாடங்களில் (1, 4, 5, 9, 10, 17, 21) இருந்து தலா இரண்டும், 2 பாடங்களில் (12 மற்றும் 20) தலா மூன்றுமாக வினாக்கள் அமையும்.

3 மதிப்பெண் வினாக்கள் (பகுதி-II)

3 மதிப்பெண் பகுதியில், பாட எண்கள் 5, 6, 14, 17 மற்றும் 21 ஆகிய 5 தவிர்த்த, ஏனைய 17 பாடங்களில் இருந்து மொத்தம் 21 கேள்விகள் கேட்கப்படுகின்றன. குறிப்பாகப் பாட எண் 3, 4, 11, 16-லிருந்து தலா 2 வினாக்களும், ஏனைய 13 பாடங்களில் இருந்து தலா ஒரு வினாவும் கேட்கப்படும். இந்த வகையில் கேட்கப்படும் 21 வினாக்களில் தெரிந்த 15 வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்.

கனிம வேதியியலிலிருந்து பெரும்பாலும் நேரடி வினாக்களே கேட்கப்படுகின்றன. இதில் ‘d’ தொகுதி தனிமங்களின் பொதுப் பண்புகள் குறித்த 5 முக்கிய வினாக்களில் இருந்து ஒன்றும், உலோகம் அல்லது உலோகச் சேர்மத்திலிருந்து ஒரு வினாவும் கேட்கப்படும். இயற்பியல் வேதியியல் பகுதியில் வேதி வினைவேகவியல் பாடத்திலிருந்து, வினைவகை, பண்புகள் குறித்த 2 வினாக்கள் கேட்கப்படும்.

கரிம வேதியியல் பகுதியில் பெயர் வினைகள், விளைபொருள் சார்ந்த வினைகள், உறுதிச் சோதனைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். கரிம நைட்ரஜன் சேர்மத்தில் இருந்து கேட்கப்படும் ’சேர்மங்களைக் காண்’ என்ற வினாவுக்கு (வி.எண். 50) உரிய வினைகளையும் எழுதுவது அவசியம். 22-வது பாடத்திலிருந்து கேட்கப்படும் வினாவுக்குச் சரியான வரையறை, உதாரணத்துடன் விடையளிப்பது அவசியம். கணக்கீட்டு வினாக்கள் 7, 9, 10 மற்றும் 20 ஆகிய பாடங்களில் இருந்தே கேட்கப்படுகின்றன. இதிலும் முதல் 3 பாடங்களின் கணக்கீடுகள், புத்தக வினாக்களாகவே அமைகின்றன.

5 மதிப்பெண் வினாக்கள் (பகுதி-III)

5 மதிப்பெண் பகுதியின் 3 உட்பிரிவுகளில், உட்பிரிவு ‘அ’, 1, 4, 5 மற்றும் 6 பாடங்களில் இருந்தும், உட்பிரிவு ‘ஆ’, 9, 10, 11 மற்றும் 14, உட்பிரிவு ‘இ’, 17, 18, 19 மற்றும் 22 ஆகிய பாடங்களில் இருந்தும் கேட்கப்படுகின்றன. இதற்கு ஒவ்வொரு உட்பிரிவிலிருந்தும் 3 பாடங்களை முழுவதுமாகப் படித்திருந்தாலே முழு மதிப்பெண்களைப் பெற முடியும். பிரிவு ‘ஆ’வுக்கான, 9, 10, 14 பாடங்களில் குறைவான 5 மதிப்பெண் வினாக்களே உள்ளதால், அவற்றை எளிதில் படிக்கலாம். பிரிவு ‘இ’ பாடங்களில் 17 மற்றும் 22 பாட வினாக்களும் ஒப்பீட்டளவில் சுலபமானவை. 18 மற்றும் 19 பாட வினாக்களில் ஒன்று வழிமுறை சார்ந்த வினாவாகவும், வினா எண் 14 கணக்கீட்டு வினாவாகவும் அமைந்திருக்கும்.

10 மதிப்பெண் வினாக்கள் (பகுதி IV)

இப்பகுதிக்குத் தயாராவதில் 1, 3, 8, 12 மற்றும் 14 ஆகிய பாடங்களில் உள்ள படங்களை வரைந்து பாகங்களைக் குறித்துப் பயிற்சி மேற்கொள்வது அவசியம். வினா எண் 64 முதல் 69 வரையிலானவற்றில் முதல் 4 வினாக்களைக் குறிவைத்துப் படித்தால் முழு மதிப்பெண்களைப் பெறலாம். வினா எண் 70 கட்டாய வினாவாகும். கனிம வேதியியல் வினாக்கள் 3, 4, 6, 7 பாடங்களில் இருந்தும், இயற்பியல் வேதியியல் வினாக்கள் 8, 12, 13, 14 ஆகிய பாடங்களில் இருந்தும் கேட்கப்படும். இவையனைத்தும் சராசரி மாணவர் எதிர்பார்க்கும் முந்தைய தேர்விலிருந்து கேட்கப்படும் வினாக்களே. ஆனால் 15, 19, 20, 21 பாடங்களில் இருந்து கேட்கப்படும் கரிம வேதியியல் வினாக்களில், 19 மற்றும் 20-வது பாடங்களின் ‘மாற்றுக, விளைபொருளைத் தருக’ போன்ற வினாக்களைக் கூடுதல் கவனத்துடன் படிக்க வேண்டும்.

தேர்ச்சி பெறுவதும் எளிது

வேதியியல் பாடத்தில் தேர்ச்சிக்கான தன்னம்பிக்கையைப் பெறுவதற்குப் பாட எண்கள் 2, 5, 8, 9, 17, 21, 22 ஆகியவற்றைக் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும். 1 மதிப்பெண் பகுதியில் பாட நூல் வினாக்களை மட்டுமே குறிவைத்துப் படித்தால் அதிகபட்சமாக 20 மதிப்பெண்கள் பெறலாம். கடினமாக உணரும் கரிம வேதியியலிலும் ஹைடிராக்சி சேர்மங்கள், கார்பைனல் சேர்மங்கள், கார்பாக்சிலிக் அமிலங்கள், நைட்ரஜன் சேர்மங்களில் உள்ள பெயர் வினைகள், விளைபொருள் சார்ந்த வினைகள் ஆகியவற்றைப் படிப்பது, 3 மற்றும் 5 மதிப்பெண் வினாக்களுக்கு உதவியாக இருக்கும்.

(பாடக் குறிப்புகளை வழங்கியவர், திருச்சியைச் சேர்ந்த பிளஸ் 2 வேதியியல் சிறப்புப் பயிற்சியாளர் டி.முத்தமிழ் செல்வன்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x