Last Updated : 22 Nov, 2016 11:00 AM

 

Published : 22 Nov 2016 11:00 AM
Last Updated : 22 Nov 2016 11:00 AM

வடகிழக்கு மாநிலங்கள் - கந்தக பூமி நாகாலாந்து

இந்தியா விடுதலை பெறவிருந்த நேரத்தில் “நாங்கள் தனி நாட்டவர்கள்; உருவாகவிருக்கும் இந்தியாவுக்கும் எங்களுக்கும் எவ்வித உறவுமில்லை. எங்களைத் தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும்” என ஐ.நா.வுக்கு நாகா பிரிவினர் தந்தி அனுப்பித் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தனர். வடகிழக்குப் பகுதியில் இந்திய அரசுக்கு எதிராக முதலில் குரல் கொடுத்த இவர்களைப் பின்தொடர்ந்தே மிசோ பிரிவினரும் போடோ மக்களும் தங்கள் தனித்தன்மைக்கு அங்கீகாரம் கோரினார்கள்.

தனித்துவத்தைக் காட்டிய கிளப்

போர்க் குணம் உடைய இந்த மக்களை அன்றைய பிரிட்டிஷ் அரசு முதல் உலகப் போரின்போது கூலிகளாக மாற்றியது. அவர்களை ஐரோப்பாவுக்கு அழைத்துச் சென்றது. அதுவரையில் பல்வேறு சிறு குழுக்களாகப் பிரிந்து ஒருவரோடு ஒருவர் சண்டைபோட்டுக்கொண்டிருந்த நாகாக்கள், முதல் உலகப் போரின்போது ஐரோப்பாவில் தங்களோடு இருந்த இந்தியாவின் இதர பகுதி மக்களுடன் சேராமல் தனியாக வசிக்கத் தொடங்கினர். தங்கள் பகுதிக்குத் திரும்பி வந்தவுடன் தங்களுடைய தனித்தன்மையை வெளிப்படுத்த ‘நாகா கிளப்' என்ற அமைப்பை 1918-ல் உருவாக்கி, பல்வேறு சிறு குழுக்களை ஒன்றிணைத்தனர்.

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டை ஆராய்வதற்கும் அவசியமான மாற்றங்கள் செய்வது குறித்தும் ஆராய 1928-ல் சைமன் குழு இந்தியாவுக்கு வந்தது. அப்போது தங்கள் தனித்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ள இந்திய நிர்வாகத்துடன் சேர முடியாது எனவும், தங்கள் கலாச்சாரம் என்றுமே இந்தியாவுடன் இணைந்தது அல்ல என்றும் சைமன் குழுவிடம் மனு அளித்தனர்.

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டை ஆராய்வதற்கும் அவசியமான மாற்றங்கள் செய்வது குறித்தும் ஆராய 1928-ல் சைமன் குழு இந்தியாவுக்கு வந்தது. அப்போது தங்கள் தனித்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ள இந்திய நிர்வாகத்துடன் சேர முடியாது எனவும், தங்கள் கலாச்சாரம் என்றுமே இந்தியாவுடன் இணைந்தது அல்ல என்றும் சைமன் குழுவிடம் மனு அளித்தனர்.

இதில் கையெழுத்திட்டவர்களில் குகி என்ற பிரிவினரை நாகா பிரிவினர் தங்களில் ஒருவராக ஏற்கவில்லை. சமவெளிப் பகுதியில் வாழும் மக்களிலிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள் என்று குறிப்பிட்டதோடு, இதர பகுதியினருடன் இணைப்பதால் பாரம்பரியமாகத் தாங்கள் வசித்துவரும் பகுதி பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் வருவதையும் அவர்கள் எதிர்த்தனர்.

குழப்பமான இந்தியா வேண்டாம்!

1946-ல் ‘நாகா கிளப்’, ‘நாகா தேசிய கவுன்சிலாக’ மாறியதும் தங்கள் பகுதியை தாங்கள் மட்டுமே ஆள முடியும் என்றனர் நாகா மக்கள். 1947, மே 21-ல் அசாம் அரசிடம் அளித்த மனுவில் “நாங்கள் வசிக்கும் பகுதியை ஏற்கனவே குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் இந்தியாவுடன் இணைக்க விரும்பவில்லை; வேண்டுமெனில் சுதந்திர அசாம் பகுதியுடன் பத்தாண்டு கால ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்றத் தயார்” எனக் கடிதம் எழுதினர். இந்த அமைப்பின் தலைவரான பிசோ, “மங்கோலிய இனத்தைச் சேர்ந்த நாகாக்கள் கடந்த 52 தலைமுறைகளாகத் தங்கள் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து, இங்குதான் சுதந்திரமாக வாழ்ந்துவருகின்றனர். இப்பகுதிக்கும் இந்தியாவுக்கும் வரலாற்றுபூர்வமாக எவ்விதத் தொடர்பும் இல்லை; பிரிட்டிஷ் ஆட்சி இப்பகுதியைக் கைப்பற்றியபோதிலும் தங்கள் பகுதியைத் தனியாகவே (excluded areas) வைத்திருந்தனர்” என்று வாதிட்டார்.

கறுப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது

1951-ல் இப்பகுதியில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியாவிலிருந்து தனித்திருக்கவே 99%-த்தினர் விரும்பினர். இதைத் தொடர்ந்து 1952-ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் பங்கெடுக்காமல் புறக்கணித்தனர். அதன் பிறகும் தங்கள் தனித்தன்மை அங்கீகரிக்கப்படாத நிலையில் 1956-ல் நாகாலாந்து கூட்டாட்சி அரசை அறிவித்தனர். ஆயுதக் கிளர்ச்சிகளைத் தொடர்ந்து இந்திய ராணுவம் நுழைந்து இப்பகுதியில் பல்வேறு கறுப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்த வழிவகுத்தது. 1975-ல் ஏற்பட்ட ஷில்லாங் ஒப்பந்தத்தின் மூலம் நேரடிப் போர் நிறுத்தம் ஏற்பட்டபோதிலும் நாகா இனத்தைச் சேர்ந்த முய்வா, கப்ளாங் (தேசியச் சோசலிசக் கவுன்சில்) ஆகியோர் தலைமையிலான இரண்டு முக்கியக் குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் இன்றும் தொடர்ந்துவருகின்றன.

நாகாலிம் கோரிக்கை!

1963 டிசம்பர் 1-அன்று நாகா இனத்தவருக்கான தனி மாநிலமாக நாகாலாந்து உருவானது. ஆனால் அசாம் பகுதி பிரிக்கப்பட்டபோது அங்கு நாகா இனத்தவர் வசிக்கும் பகுதிகள் மேகாலயா, அருணாசலப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சேர்க்கப்பட்டன. இதன் விளைவாக மற்ற மாநிலங்களில் நாகா இனத்தவர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளை இணைத்து ‘நாகாலிம்’ என்ற தனிமாநிலத்தை உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுப்பிவருகின்றனர்.

திரிபுரா தவிர்த்த மற்ற பகுதிகளில் வசிக்கும் நாகா இனத்தவர் எப்போதுமே இதர இனத்தவரின் மீது படையெடுத்து அடிமைகளைக் கவர்ந்துவந்தனர். தங்களுடைய இனத்தைச் சேர்ந்த பெண்களை மணந்துகொள்வதற்குப் பல பகுதிகளுக்கும் சென்று இதர இன மக்களோடு சண்டையிட்டு அவர்களின் தலையை வெட்டி எடுத்து வருவது வழக்கத்தில் இருந்தது. அதில் அதிக எண்ணிக்கையில் தலைகளைக் கொய்து வருபவருக்கே பெண்கள் மாலை சூட்டுவார்கள். 19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் இந்தக் கொலைகார வீர விளையாட்டு முடிவுக்கு வந்தது.

நாகா இனத்தில் மொத்தம் 16 இனப் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் தனிப்பட்ட சடங்குகள், உணவுப் பழக்கங்கள். பாரம்பரிய உடை, மொழி, மதம் ஆகியவைதான் அவர்களை இணைக்கின்றன. இந்தியாவில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் மூன்று மாநிலங்களில் இதுவும் ஒன்று.

பரப்பளவு : 16,579 சதுர கி.மீ.

மக்கள்தொகை : 19,80,602

அலுவல் மொழி : ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x