Last Updated : 04 Oct, 2016 11:18 AM

 

Published : 04 Oct 2016 11:18 AM
Last Updated : 04 Oct 2016 11:18 AM

தேர்வுக்குத் தயாரா? - உச்ச மதிப்பெண்களுக்கு உதவும் தமிழ்

பிளஸ் டூ தமிழ் இரண்டாம் தாள்

பொதுத் தேர்வில் மாவட்ட, மாநில அளவில் முதன்மை பெறும் மாணவர்களுக்கு, இலவசச் சேர்க்கை, கல்விக் கட்டணத்தில் சலுகை ஆகியவற்றை வழங்கக் கல்லூரிகள் முன்வரும். இவற்றுடன் அரசு சார்பிலான உதவிகளும் தனியாகக் கிடைக்கும். இந்த வகையில் மொத்த மதிப்பெண்களில் சரிவைத் தடுக்க, பிளஸ் டூ மாணவர்கள் கவனமாகப் படிக்க வேண்டிய பாடம் தமிழ் இரண்டாம் தாள்.

வாழ்க்கைக்கும் உதவும் பாடம்

தமிழ் முதல் தாளில்கூட மனப்பாடம் செய்து மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம். ஆனால், தமிழ் இரண்டாம் தாளில் சோதிக்கப்படுவது உங்களுடைய படைப்புத் திறனும் சுயமான மொழியாற்றலும்தான். நீங்கள் சுயமாகச் சிந்தித்து எழுதும் ஆர்வம் கொண்டிருந்தால் இந்தத் தாளில் மதிப்பெண்கள் குவிக்கலாம்.

பிழையின்றி எழுதுதல், சிறப்பான தகவல் தொடர்பு, படைப்பாற்றல் திறன் உள்ளிட்டவை இரண்டாம் தாளுக்கான தயாரிப்பை மேற்கொள்ளும்போது படிப்படியாகக் கைவரப்பெறும். தமிழ் தாள்களுக்குத் தயாராவது பின்னாளில் பல்வேறு போட்டித் தேர்வுகளில் கணிசமான மதிப்பெண்கள் பெற உதவும். மொழித் திறனை மெருகேற்றும் ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இது உங்களுடைய தாள். வாழ்க்கைக்கும் உதவக்கூடிய பாடம் இது என்பதை மனதில் கொண்டு, தமிழ் இரண்டாம் தாளைப் படிக்கலாம் வாங்க!

வகுப்பறையும் நண்பர்களும்

தேர்வு என்பதைத் தாண்டி, தமிழ் இரண்டாம் தாள் வகுப்புகள் சுவாரசியமானவை. அதே போல இப்பாடத்தைத் தனியாக அமர்ந்து படிப்பதைவிட, நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து குழு விவாத முறையில் படிக்கலாம். ஒரு கதைப் பகுதியை வாசித்துவிட்டு அதன் உட்கூறுகளில் ஆளுக்கொரு தலைப்பாக அலசலாம். இதனால் படிப்பதற்கான நேரம் மிச்சமாவதோடு, படைப்புத் திறனும் அதிகரிக்கும். ஆரம்பகாலக் குழு விவாதங்களை ஆசிரியர் முன்னிலையில் மேற்கொள்வது, தவறுகளைச் சரிசெய்ய உதவும்.

படைப்பாற்றலுக்குக் களம்

கவிதை, சிறுகதை வாசிக்கும் வழக்கம் கொண்டவர்கள், இத்தேர்வில் முழு மதிப்பெண்கள் பெறலாம். எனவே இளைப்பாறலுக்கான நேரத்தில் ஆசிரியர் பரிந்துரைத்த கவிதை, கதை வாசிப்புகளை மேற்கொள்ளலாம்.

பயிற்சி அவசியம்

படிப்பதோடு அவற்றை விரைவாக எழுதிப் பார்ப்பதும் நல்லது. ஆசிரியர்கள் உதவியுடன், ஒவ்வொரு விடைக்கும் எப்படி மதிப்பெண்கள் அளிக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். திருப்புதல் தேர்வுகளில் சரியான நேர நிர்வாகத்துடன் பயிற்சி எடுங்கள்.

முக்கியக் கவனக் குறிப்புகள்

உரைநடைப் பகுதியில் விடை எழுதும்போது, நீண்ட பத்தியாக எழுதாமல் சிறு குறிப்புகளாக வரிசைப்படுத்தி எழுதலாம். விடைக்குச் சிறு தலைப்பிடுவது, நெடுவினாக்களுக்கான பதிலில் உள்தலைப்புகள் இடுவது நல்லது. உரைநடையின் பெருவினாக்களை உள்ளடக்கிய 2 பகுதிகளில், முதல் பகுதிக்கு 1 மற்றும் 2-ம் பாடங்களையும், இரண்டாம் பகுதிக்கு 5 மற்றும் 7-ம் பாடங்களையும் படித்தாலே போதும். அதேபோல உரைநடையின் நெடுவினா பகுதிக்கு 1 மற்றும் 7-ம் பாடத்தைப் படித்தாலே போதும்.

கட்டுரையாகப் பதிலளிக்க வேண்டிய விடைகளை எழுதும்போது, வினாத்தாளில் கேட்டிருப்பதைவிட அதிகமான பக்கங்களில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட விடையை விட, வினாவுக்கான பொருளையும் கருத்துகளையும் உள்ளடக்கிய பதில் போதுமானது.

துணைப்பாடப் பகுதியில், வினா எண் 13-க்கு ‘பால் வண்ணம் பிள்ளை, மகன், வேலி’ ஆகிய சிறுகதைகளையும், வினா எண் 14-க்கு ‘மண், ஒவ்வொரு கல்லாய்’ ஆகிய சிறுகதைகளையும் சரியாகப் படிக்க வேண்டும். இதே பகுதிக்குக் கற்பனை கதைப் பகுதியிலிருந்து விடையளிப்பதாக இருந்தால், ‘கிழிசல், ஓர் உல்லாசப் பயணம்’ ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கதைப் பகுதிக்கான விடைகளில் கருத்துச் சட்டகம் மற்றும் கதாபாத்திரங்களைத் தனியாகக் காட்டுவது நல்லது.

‘நாடகமாக வரைதல்’ பகுதியைப் பொறுத்தவரை, தொடக்கம், கதைக்கோப்பு, உச்சம், வீழ்ச்சி உள்ளிட்ட நாடகக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்படுவதாலும், விடையை நாடக வடிவில் எழுத வேண்டியதாலும் முழு மதிப்பெண்கள் கிடைக்கக் கூடுதல் கவனமும் உழைப்பும் தேவை. எனவே, முழு மதிப்பெண்களைப் பெற நாடகமாக வரைதல் வினாவுக்குப் பதிலாக, இதர வினாக்களிலிருந்து உரியவற்றைத் தேர்வு செய்து விடையளிப்பது நல்லது.

இலக்கிய நயம் பாராட்டல் பகுதியில் விடையளிக்கும் முன்னர் கொடுக்கப்பட்ட பாடலை நான்கைந்து முறை கூர்ந்து வாசித்து அதன் கூறுகளை அடையாளம் காண வேண்டும். தலைப்பு, முன்னுரை, ஆசிரியர் குறிப்பு, மையக்கருத்து, முடிவுரை ஆகியவற்றுடன், பாடலின் நயங்களை வரிசைப்படுத்தி எழுத வேண்டும். இந்த நயங்கள் ஒவ்வொன்றுக்கும் தனி மதிப்பெண்கள் உண்டென்பதால், அவற்றை முறையாக எழுதுவது சிறப்பு.

மொழியாக்கம் பகுதியில் பழமொழிகள் மற்றும் சொற்றொடர்கள் இடையிலான வேறுபாட்டைச் சரியாக அடையாளம் காண வேண்டும். சொற்றொடர்களுக்கு இயல்பான நடையில் அமைந்த மொழிபெயர்ப்பும், பழமொழிகளுக்குத் தமிழ் மரபின் அடிப்படையிலான இணையான தமிழ்ப் பழமொழிகளும் விடையாகத் தருதல் வேண்டும்.

பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்தல் பகுதியில், அன்றாட சொந்த வாழ்வில் பழமொழியை அமைத்துப் பதிலளிக்க வேண்டும். படைப்புத் திறனோடு சுயமாகக் கவிதை எழுதும் திறனுள்ளவர்கள் மட்டும் மேற்கண்ட பழமொழி வினாவுக்குப் பதிலாகக் கற்பனை கவிதையை எழுதலாம். இதற்கு மரபு அல்லது புதுக்கவிதையில் பல்வேறு தலைப்புகளில் கவிதை படைக்க முன்பயிற்சி இருப்பது நல்லது. மற்றபடி முழு மதிப்பெண் வேண்டுபவர்கள் கவிதையைத் தவிர்த்துவிடலாம்.

மொழித் திறன் பகுதியில், சந்திப் பிழை, வாக்கியப் பிழை, மரபுப் பிழை, பிறமொழிக் கலப்பு ஆகியவற்றைத் தவிர்க்கப் போதிய பயிற்சி தேவை. இதற்கு உரைநடைப் பாடங்களின் பிற்பகுதியில் உள்ள பயிற்சிகளைக் கூடுதல் கவனம் செலுத்திப் படித்தால் போதும்.

- இக்கட்டுரைக்கான குறிப்புகளை வழங்கியவர்:
க.செல்வராசு, முதுகலைத் தமிழாசிரியர்,
எசனை அரசு மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் மாவட்டம்.

க.செல்வராசு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x